சில்லறை வணிகம்... புதிய தொழில்நுட்பங்கள்!
கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்திய சில்லறை வணிகம், அதிரடி மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு வருகிறது.


கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்திய சில்லறை வணிகம், அதிரடி மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் குறித்தமக்களின் மனநிலையும் மாறி வந்துள்ளது. இது மின்-வணிகத்தின் பெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு, அங்காடிகள் திறக்கப்பட்டிருந்தாலும், மளிகைப்பொருட்கள், தனிப்பயன் பொருட்கள், அழகுப்பொருட்களுக்கு மின்-வணிக நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளைப் பெறுவதில் பொதுமக்கள் ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள்.
மக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சில்லறை வணிகத்தின் போக்கை புரட்டிப் போட்டுள்ளன. வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வணிகம் நடந்து வருவதாக இதுவரை கூறப்பட்டு வந்தாலும், தற்போதுதான் அது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த அணுகுமுறை, சில்லறை வணிகத்திற்கு புதிய வாசல்களை திறந்து வைத்துள்ளது.
போட்டி அதிகம் காணப்பட்டாலும், சில்லறை வணிகத்திற்கான வாய்ப்புகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும், பாதுகாப்பான வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்கவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் சில்லறை வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வசதிகள் நிறைந்த, தெரிவு செய்வதற்கேற்ப ஏராளமான பொருள் வகைகள், அடக்கவிலை, தொடர்பில்லாத பணம் செலுத்தும் முறை, விரைவான பொருள் விநியோகம் போன்ற வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் புதுமையான அம்சங்களை நடைமுறைப்படுத்துவது சில்லறை வணிகத்தை துடிப்போடு வைத்திருக்க உதவும்.
ஒரு மணிநேரத்தில்/ ஒரு நாளில் விநியோகம்:
கரோனா காலத்தில் இணையவழி கொள்முதலின்போது ஆர்டர்களைக் கொடுத்த ஒரு மணி நேரம் அல்லது அதேநாளில் அத்தியாவசியப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளிலேயே விநியோகிக்கும் முறை அறிமுகமானது. இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் உடனடித் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில், ஆர்டர்களை உடனுக்குடன் விநியோகம் செய்யும் முறை சில்லறை வணிகர்களுக்கு கைகொடுத்துள்ளது. மூடிக் கிடந்ததால் கடைகளுக்கு வாடிக்கையாளர்களை ஈர்க்கமுடியாத சூழல் இருந்தது. இந்தநிலையில், வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே மளிகை உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்வது, சரிந்து கொண்டிருந்த வணிகத்தைத் தூக்கி நிறுத்த உதவியாக இருந்துள்ளது. பெருந்தொற்று காலத்திற்குப் பிறகும், இதே வர்த்தக அனுபவத்தை வாடிக்கையாளர்கள் எதிர்நோக்குவதோடு, குறித்த நேரத்தில் பொருட்களை விநியோகிக்கும் நடைமுறையையும் தொடர விரும்புவார்கள். இதன்விளைவாக, உடனடியாகப் பொருட்கள் விநியோகம் என்பது வாடிக்கையாகப் போகிறது.
யூபிஐ பயன்பாடு அதிகரிப்பு:
பெருந்தொற்றுக் காலத்தில் தொடர்பில்லாத, பாதுகாப்பான, உடனடி பணம் செலுத்தும் முறையாக வணிகர்களாலும், மக்களாலும் ஏற்கப்பட்டது யூனிபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் எனப்படும் "யூபிஐ' . பெருந்தொற்றுக்குப் பிறகும் மக்கள் இம்முறையில் பணம் செலுத்துவதை தொடரவே செய்வார்கள். இணையவழி மற்றும் நேரடி வர்த்தகத்தின்போது சிக்கல் இல்லாத பணபரிமாற்றத்திற்கு யூபிஐ உதவியாக இருப்பதை அனைவரும் ஏற்றுக்
கொண்டுள்ளனர்.
செலவினங்களுக்கு முக்கியத்துவம்:
பெருந்தொற்று காலத்தில் தனிப்பட்ட வாழ்க்கைமுறையை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தனிமனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பாரம்பரியமற்றமுறைகளைக் கையாள அனைவரும் முற்பட்டுள்ளனர். பெருந்தொற்றுக்குப் பிறகு, வயதில் முதிர்ந்தவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் செலவு செய்வார்கள். ஆனால், இளம் தலைமுறையினர் அப்போதைய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்ள செலவு செய்ய முற்படுவார்கள். முந்தைய தலைமுறையை போல இளம் தலைமுறை சேமிப்பை கடைப்பிடிப்பது கடினமே. இது சில்லறை வணிகத்தைப் பெருக்க உதவும்.
மெய்நிகர் கொள்முதல்:
பெருந்தொற்று காலம் என்பதால், பாதுகாப்பு மற்றும் தூய்மை காரணங்களுக்காக எந்தவொரு பொருட்களையும் தொட்டு பார்த்து கொள்முதல் செய்யும் அணுகுமுறையை அனுமதிப்பதும், கடைபிடிப்பதும் கடினமானதாகும். எனவே, ஆடைகள், ஆபரணங்கள், அழகுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை இணையவழியில் அணிந்துபார்த்து கொள்முதல் செய்யும் மெய்நிகர் கொள்முதல் முறையை அறிமுகம் செய்ய சில்லறை வணிகர்கள் முற்பட்டுள்ளனர்.
இணையவழி கொள்முதல் அல்லது அங்காடிவழி கொள்முதல் எதுவாக இருந்தாலும், தெரிவுசெய்யும் ஆடையை அணிந்து பார்த்து கொள்முதல் செய்யலாம். அதாவது அந்த ஆடையை நாமே அணிந்தது போல மெய்நிகராக திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். உதட்டுச்சாயம் என்றால், அதை நமது உதடுகளில் தடவியதுபோல திரையில் நமது முகம் தெரியும். அதை வைத்து, அது நன்றாக இருக்கிறதா? என்பதை முடிவு செய்து, கொள்முதல் செய்யலாம். எதிர்காலத்தில் இது வாடிக்கையாளர்களிடையே அசத்தலான வரவேற்பைப் பெற இருக்கின்றது.
செல்லிடப்பேசியில் பலர் மூழ்கிக் கிடப்பதால், அதைப் பயன்படுத்தி சில்லறை வணிகத்தைப் பெருக்கலாம். வாடிக்கையாளர்கள் அணிந்து கொண்டது போன்ற காணொலிகளையும் அங்காடிகள் அல்லது மின்-வணிக இணையதளங்களில் காட்டலாம். வீட்டில் இருந்தபடியே கொள்முதல் செய்ய நினைப்போருக்கு இது கைகொடுக்கும். பொருள்களை வாங்க வாடிக்கையாளர்களைத் தூண்டுவதற்கு சில்லறை வணிகர்களுக்கு இந்த மெய்நிகர் கொள்முதல் முறை கைகொடுக்கும்.
சிறுநகரங்களிலும் மின்-வணிகம்:
சிறுசிறு நகரங்களிலும் மின்-வணிகம் பரவ தொடங்கியிருக்கிறது. சிறுநகரங்களில் மின்-வணிகம் வளர்ச்சி அடைவது, புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சேமிப்புக்கிடங்குகளை நிறுவவும், கடைசி வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவுசெய்யும் வாய்ப்பையும் அளிக்கும். இதற்கு உள்ளூர்மொழியில் பொருட்கள் குறித்து விவரங்களை அளிக்க வேண்டும். நேரடி அங்காடிகளில் பெரிய திரைகளை அமைத்து, பொருட்களின் அனுபவங்களை விளக்கும் காணொலிகளை திரையிடுவது வாடிக்கையாளர்களின் கொள்முதல் ஆர்வத்தைத் தூண்டும். அதேபோல, எண்மவழி பணம் செலுத்தும் வழிமுறைகளை வைத்திருப்பது வாடிக்கையாளர்களின் வாங்கும் அனுபவத்தை எளிதாக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...