/

கட்டடப் பொறியாளர்கள்... புதியன கற்பது நன்று!

நாட்டின் வளர்ச்சி என்பதே சாலைகள், பாலங்கள், அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், நகரியங்கள், ரயில் இணைப்புகள், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் தாம்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:33 pm

ந.முத்துமணி


நாட்டின் வளர்ச்சி என்பதே சாலைகள், பாலங்கள், அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், நகரியங்கள், ரயில் இணைப்புகள், போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் தாம். இவற்றின் அடித்தளமே கட்டுமானம் தான். 

கட்டுமானத் துறையில் பொறியாளராகச் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், மென்பொருளைக் கையாளும் தகவல் தொழில்நுட்பத் திறனையும் கற்றுத் தேர்ந்துவிட்டால், சிகரம் தொடலாம். தகவல் தொழில்நுட்பத்திறனுடன் கட்டடக்கலை, அழகியல் மீது நாட்டமும் இருந்துவிட்டால், கட்டடப் பொறியாளர்களாக உலகை வெல்லலாம். 

கட்டுமானத் தொழில் தேவை: இந்தியாவுக்கான தொலைநோக்குத் திட்டம் 2035-இல் குறிப்பிட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் 20 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 

அப்படியானால், அடுத்த 15 முதல் 30 ஆண்டுகளுக்கு அள்ள அள்ளக் குறையாத அளவுக்கு கட்டுமானத்தொழிலில் வேலைகள் காத்திருக்கின்றன.  

இந்தியாவின் 10 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 15 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. மெட்ரோ ரயில் இணைப்பு தனது வலைப்பின்னலை விரிவாக்கிக் கொண்டே உள்ளது. 

ரூ. 2 லட்சம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் பொலிவுறு நகர திட்டம் 100 நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

சாலைகள், பாலங்கள், அணைகள், கால்வாய்கள், இருப்புப்பாதைகள், துறைமுகங்கள், மின்னுற்பத்தி நிலையங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள்,  அலுவலகங்கள், குடியிருப்புகள் என்று பற்பல உள்கட்டமைப்புப் பணிகள் கட்டடப் பொறியாளர்களுக்காகக் காத்திருக்கின்றன.  புதிதாக எத்தனை துறைகள், தொழில்கள் வந்தாலும், அவற்றின் அடித்தளம் கட்டுமானத்தின் மீதே கட்டமைக்கப்படும் என்பதே இத்துறையின் வளர்ச்சியை உணர்த்தும். 

மென்பொருள் திறன் தேவை: கட்டுமானத் தளங்களில் செங்கற்கள், மணல், ஜல்லி, சிமென்ட், இரும்புக் கம்பிகளுடன் தான் கட்டடப் பொறியாளர்களின் பணி என்பது பழங்கதையாகி வருகிறது. கட்டுமானப் பொருட்களை வழங்குவோர், ஒப்பந்ததாரர், தொழிலாளர் பட்டாளத்தைக் கையாளும் திறன் இருந்தால் போதுமென்பது கடந்த காலமாகிவிட்டது. 

இன்றைய காலகட்டத்தில் கட்டுமானத் தொழிலில் நிலைத்திருக்க, சுற்றுச்சூழல் சட்டங்கள், ஒழுங்குமுறைகள், தொழில்நுட்பத் தரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றுடன் தகவல்தொழில்நுட்பத் திறன்களைக் கற்றறிந்திருக்க வேண்டியது ஊதியத்தையும், வாழ்க்கைத் தொழிலின் ஏற்றத்தையும் உறுதி செய்யும். 

இன்றைய கட்டடப் பொறியாளர்கள்,  "ஆட்டோ-கேட் சிவில் 3டி' என்ற மென்பொருளையும், மிகைப்படுத்தப்பட்ட மெய்மை, மெய்நிகர் மெய்மை ( விர்ச்சுவல் ரியாலிட்டி), ட்ரோன்  போன்ற தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்வது அவசியத் தேவையாகும்.

பொறியியல் வடிவமைப்பு, பொறியியல் நுட்பம், கொள்முதல், கட்டுமான நிறுவனங்களில் பணிக்குச் சேரும்போது, மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை அடிக்கோடிட்டுக் கேட்கத் தொடங்கியுள்ளனர். கட்டடப் பொறியியலில் திட்டமிடல், வடிவமைப்பு, ஆலோசனைச் சேவைகள், கட்டுமானம், பராமரிப்பு, மராமத்து என்று எந்தத் தொழிலாக இருந்தாலும் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப அறிவு அடிப்படையாகி வருகிறது. 

கட்டடப் பொறியியலில் முப்பரிமாண வரைபடங்கள் தற்கால தேவையாக இருந்தால், கட்டுமானத்தில் மிகைப்படுத்தப்பட்ட மெய்மை, மெய்நிகர் மெய்மை தொழில்நுட்பங்கள் எதிர்காலமாக இருக்கப் போகிறது. முப்பரிமாண மாதிரியுரு (3 டி மாடலிங்) தொழில்நுட்பமும் கட்டுமானத் தொழிலில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

பசுமைக் கட்டுமானங்கள்: கட்டுமானத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, பசுமைக் கட்டுமானங்கள் பிரபலமாகியுள்ளன. சுற்றுச் சூழலுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும் கட்டுமானங்களைத்தான் பசுமைக் கட்டுமானங்கள் என்கிறார்கள். இதில் பணியாற்றக்கூடிய கட்டடப் பொறியாளர்கள், ஆற்றல் திறன் , உள்புற காற்றுத்தரம், சூரிய மின்னாற்றல், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு, மழைநீர் சேமிப்பு போன்றவற்றை அறிந்திருக்க 
வேண்டும். 

அத்துடன் பசுமைக்கட்டுமானங்களை வடிவமைக்க உதவும் அதிநவீன மென்பொருள்களான ரெவிட்  , பிரைமவேரா, பைதான் புரோகிராமிங், ட்ரோன் சர்வே  ஆகியவற்றை கற்றிருந்தால், ஆற்றல் பகுப்பாய்வு, வாழ்க்கை சுழற்சி மதிப்பீடு, முன்புனைவுக் கட்டுமானம் (ப்ரீபேப்ரிகேட்டடு ஸ்ட்ரக்சர்), சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை எளிதாக ஆராய்ந்து, கட்டுமானத்தைப் பசுமையாக்கிக்கொள்ளலாம்.

கற்றல் நன்றே: உள்நாடு, வெளிநாடுகளில் எழும் எதிர்காலத் தேவைகளையும், வேலைவாய்ப்புச் சந்தையையும் மனத்தில் கொண்டு, பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள், கட்டடப் பொறியியல் படிப்பில் மென் பொருள்- தொழில்நுட்பத் திறனை ஒன்றிணைத்துள்ளன. அப்படி ஒருவாய்ப்பை அளிக்காத கல்லூரியாக இருந்தால், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பத் திறனை தனியாகப் பெறுவது கட்டாயமாகும். 

தரமான கல்லூரிகள், ஆராய்ச்சி- மேம்பாட்டுத் துறையைக் கொண்டிருப்பதோடு, கட்டுமானத் தொழில் நிறுவனங்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும். கட்டுமானத் தொழில் நிறுவனங்களின் நிபுணர்களை வரவழைத்து மாணவர்களிடையே பேசவைப்பதும் அத்துறையின் தேவையை உணர உதவும். உள்ளிருப்புப் பயிற்சியை ஊக்குவிக்கும் கல்லூரியாக அமைந்துவிட்டால், கற்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். 

கட்டுமானத் தளங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்துவிட்டால், படிக்கும் காலத்திலேயே அனுபவ அறிவும் கிடைத்துவிடும். உள்ளிருப்புப் பயிற்சிகளை அதிகம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கும். 

கட்டுமான மேலாண்மை, புவிசார்நுட்பப் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், கட்டமைப்புப் பொறியியல், நீர்வளப் பொறியியல், வேளாண் கட்டுமானப் பொறியியல் போன்றவை கட்டடப் பொறியியலில் தனித்துவத் துறைகளாக வளர்ந்து வருவதையும் கருத்தில் கொண்டு, கற்றலை கூர்மையாக்கிக் கொள்வது, கட்டடப் பொறியாளராக சாதனை படைக்க வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.