நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புவி தகவலியலில் எம்எஸ்சி பட்டம்!

அறிவியல் துறையில் ஒவ்வொரு நாளும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், மனிதனை அடுத்த கட்ட முயற்சிகளுக்கு தூண்டுவதாக அமைந்துள்ளன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:50 pm

ஆ. நங்கையார் மணி

அறிவியல் துறையில் ஒவ்வொரு நாளும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், மனிதனை அடுத்த கட்ட முயற்சிகளுக்கு தூண்டுவதாக அமைந்துள்ளன. குறிப்பாக நவீன தொழில் நுட்பங்களின் உதவியால் புவி தொடர்பான தகவல்களைக் கற்றுக் கொள்வதன் மூலம், கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்களையும் எளிதாக தெரிந்து கொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இதுபோன்ற தகவல்களைக் கற்றுக் கொள்வோருக்கு உடனடி வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருப்பதாக காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் புவி தகவலியல் மையத்தின் இயக்குநர் என்.டி.மணி தெரிவித்தார்.

புவி தகவலியல் தொடர்பான எம்எஸ்சி பட்டம் குறித்தும், அதற்கான தகுதிகள், படித்த முடித்த பின் கிடைக்கும் பணி வாய்ப்புகள் குறித்தும் அவர் நம்மிடம் கூறியதாவது:

""புவி தகவலியலில் எம்எஸ்சி பட்டம் என்பது, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. ஜியோ இன்பார்மெட்டிக்ஸ், எம்.இ. ஜியோ இன்ஃபார்மெட்டிக்ஸ் என பட்டம் வழங்கப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் ஒரு பிரிவாக மட்டுமே தொலையுணர்வு தொழில் நுட்பம் குறித்து கற்றுக் கொடுக்கப்படுகிறது.

ஆனால், காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் புவி தொடர்பான தகவலமைப்பு, ஜிபிஎஸ் கருவிகளின் பயன்பாடு, தொலையுணர்வு தொழில் நுட்பம் (ரிமோட் சென்சிங்) குறித்தும், கணினி அறிவியல் பாடங்கள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பில் கணினி அறிவியல் அல்லது கணிதம் பாடம் எடுத்து, ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களும், பிஎஸ்சி கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் பட்டம் பெற்றவர்களும், எம்எஸ்சி புவி தகவலியல் துறையில் சேரலாம்.

50 சதவீத செய்முறைப் பயிற்சியுடன் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் வாய்ப்புடன், 4 மாத தொழில் நுட்பப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு, பட்டம் பெறுவதற்கு முன்னதாகவே வேலை நியமனத்துக்கான ஆணை கிடைக்கக் கூடிய சூழல் உள்ளது.

இதனால் 45 இடங்களுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கேரளம், ஆந்திரம், பீகார், வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், மணிப்பூர், நாகலாந்து மாணவர்களும் போட்டியிடுகின்றனர். அதே போல் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர ஆர்வமாக இருக்கின்றனர்.

இயற்கை வளம் தொடர்பான துறைகள், பொலிவுறு நகரம் திட்டம், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்புத் துறை, ஜிபிஎஸ் கருவிக்குள் இருக்கும் வரைபடம் தயாரிப்பு உள்ளிட்டத் துறைகளில் பணியாற்றுவதற்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.