நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

புதுப்பிக்க வல்ல எரிசக்தி துறையில் எம்.டெக் படிப்பு!

எரிசக்தியின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சூரிய சக்தி, காற்று,பயோ மாஸ், சாண எரிவாயு மூலம் எரிசக்தி ஆற்றலை உருவாக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:29 pm

ஆ. நங்கையார் மணி

எரிசக்தியின் தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சூரிய சக்தி, காற்று,பயோ மாஸ், சாண எரிவாயு மூலம் எரிசக்தி ஆற்றலை உருவாக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுப்பிக்க வல்ல எரிசக்தி துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு மூலம் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ரூ.60 லட்சத்திற்கான நிதி (5 ஆண்டுகளுக்கு) பல்கலைக்கழக மானியக்குழு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் கிராமிய எரிசக்தி மையத்தின் இயக்குநர் வி.கிருபாகரன் நம்மிடம் கூறியவற்றிலிருந்து...

"" பி.இ., பி.டெக், எம்.எஸ்சி.,(இயற்பியல், வேதியியல், கணிதம்) முடித்தவர்கள், எம்.டெக் (புதுப்பிக்க வல்ல எரிசக்தி) படிப்பில் சேரலாம். 2 ஆண்டு பாடத்திட்டத்தில், 6 மாதங்கள் ஆய்வு திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.

புதுப்பிக்க வல்ல எரிசக்தி துறையில் அளிக்கப்படும் எம்.டெக் பட்டப் படிப்பில், எரிசக்தி தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கற்பிக்கப்படுகிறது. எரிசக்தி தணிக்கை மூலம் மின்சார சிக்கனம் கடைபிடிப்பதற்கான வழிமுறைகள் கற்றுக் கொடுக்கப்படும். களப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 40 சதவீதம் மட்டுமே வகுப்பறை பாடத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 சதவீதம் செய்முறை பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஊக்கத்தொகை: இத்துறையில் சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத் தொகையாகவும், இதர செலவினங்களுக்கு ஆண்டுக்கு ரூ.15ஆயிரம் வீதமும் வழங்கப்படுகிறது. அதேபோல், உயர் ஆய்வுக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழக அளவில், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே எம்.டெக்(புதுப்பிக்க வல்ல எரிசக்தி) பாடப்பிரிவு உள்ளது. மேலும், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு மட்டுமே, பல்கலை. மானியக் குழு நிதியுதவி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: எம்.டெக் (புதுப்பிக்க வல்ல எரிசக்தி) முடித்தவர்களுக்கு, மத்திய அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத் துறைகளிலும், மத்திய அரசு உருவாக்கியுள்ள பசுமை பணித்திறன் மையங்களிலும் வேலைவாய்ப்பு பெற முடியும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.