எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஸ்டார்ட் அப்

மதுரையின் புகழ்பெற்ற அந்தப் பொறியியல் கல்லூரியின் உணவகம் எப்போதும் போலவே இரைச்சலாக இருந்தது.

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 10:33 am

கோதை ஜோதிலட்சுமி

மதுரையின் புகழ்பெற்ற அந்தப் பொறியியல் கல்லூரியின் உணவகம் எப்போதும் போலவே இரைச்சலாக இருந்தது. ஆனால், அங்கே ஒரு மூலையில் இருந்த மேசையில் மட்டும் ஒரு தீவிரமான அமைதி நிலவியது. மூன்று பேரும் தங்கள் காபி குவளைகளை கையில் ஏந்தியிருந்தார்கள் என்றாலும், மனதில் வேறு ஏதோ சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதை அவர்களின் முகங்கள் காட்டின. கெளதம், சூர்யா, மீரா மூவரும் கடைசி வருடம் கணினி அறிவியல் படிக்கிறார்கள்.

சூர்யா கையில் மொபைல் ஒலித்தது. அக்கறை இல்லாமல் எடுத்துப் பார்த்தான். பளிச்சென்று முகம் மாறியது. 'டேய், போன மாசம் நடந்த கேம்பஸ் இன்டர்வியூ முடிவு வந்துருச்சு. எனக்கு பிளேஸ்மென்ட் ஆர்டர் வந்திருக்கு. பெங்களூர்ல வேலை'' என்றான் சூர்யா. அவனது குரலில் மகிழ்ச்சியும் ஒருவிதத் தயக்கமும் சேர்ந்தே இருந்தன.

மீரா புன்னகைத்தாள். 'சூப்பர் சூர்யா! உன் நிலைமைக்கு இந்த வேலை ரொம்ப அவசியம். உன் குடும்பம் உனக்கு வேலை கிடைக்கணும்னு காத்திருக்கு. இதை உடனே உங்க அம்மாகிட்ட சொல்லு...'' மூச்சு விடாமல் பேசினாள். பின்னர் இருவரையும் உற்றுப் பார்த்தாள்.

இருவரும் அமைதியாக இருப்பது அவளுக்கு என்னவோ செய்தது. 'ஏன்டா, இப்படி இருக்கீங்க? வேலை கிடைச்சிருக்கு... அதுவும் படிப்பு முடியறதுக்கு முன்னாலேயே... இது நல்ல விஷயம். அதுக்கு ஏன் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு இருக்கீங்க?'' பொரிந்து தள்ளினாள்.

'ஆனா நம்ம 'ஸ்டார்ட்-அப்' கனவு என்ன ஆகுறது?'' கெளதம் ஆரம்பித்தான்.

'நம்ம திட்டம் என்ன? விருப்பம் என்ன? சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கணும், ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஐந்து வருஷத்துல நூறு பேருக்கு நாம் வேலை கொடுக்கணும்... அதைத் தானே கடந்த ஒரு வருஷமா யோசிச்சு, அதுக்குத் தேவையானதைப் படிச்சு தயார் பண்ணிக்கிட்டிருக்கோம். இப்போ ஆளுக்கு ஒருபக்கம் வேலைக்குப் போயிட்டா நம்ம நினைச்சதைச் செய்ய முடியாதே!''

கெளதம் தனது மடிக்கணினியைத் திறந்து எதையோ தீவிரமாகப் பார்க்க ஆரம்பித்தான். 'நம்ம மூணு பேரும் சேர்ந்து ஒரு 'ஆப்' ரெடி பண்ணனும்னு பண்ணியிருக்கிற வேலையும் உழைப்பும் கொஞ்சமா இல்லையே... இப்போ வீட்டுச் சூழல், வேலைன்னு போகும்போது அந்த உழைப்பும் கனவும் கலைஞ்சிடுமோன்னு யோசனையா இருக்கு'' என்றான் கெளதம் கவலையோடு.

அடுத்த சில நிமிடங்கள் அங்கே மெளனம் நிலவியது. அப்போது சூர்யா மெல்ல ஆரம்பித்தான். 'எனக்கு பெங்களூரில் வேலை என்பதற்கே நீ இவ்வளவு சொல்ற... மீராவுக்கு அவ அம்மா சென்னையில மாப்பிள்ளை பார்த்து முடிவு பண்ணியிருக்காங்களாம், அதுக்கு என்ன சொல்லப்போற?''

பெரும் கனவிலிருந்து திடீரென விழித்துக் கொண்டதை போல குழப்பத்தோடு மீராவைப் பார்த்தான் கௌதம்.

'நிஜம் தான்' என்பதாக மீரா தலையசைத்தாள்.

மீரா வசதியான வீட்டுப் பெண்... சூர்யா குடும்பத்தைப் போல கஷ்டப்படுகிற வீடு இல்லை. ஆனால், தகப்பன் இல்லாமல் அம்மா அரவணைப்பில் மட்டும் வளர்பவள். அதனால், 'மீராவுக்கு படிப்பு முடிந்தவுடன் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட்டால் போதும்' என்று நினைத்தாள்.

மீராவின் தாய்மாமா சென்னையில் இருக்கிறார். அவர் பார்த்து ஏற்பாடு செய்திருக்கிற பெரிய இடம். தொழிலதிபர் குடும்பம். மாப்பிள்ளை வெளிநாட்டில் படித்துவிட்டுத் திரும்பியிருக்கிறான் என்பதால், அம்மா ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.

'எங்க அம்மாகிட்ட 'மூணு வருஷம் என்னை வேலை செய்ய விடுங்க... அப்புறம் நீங்க சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு சொல்லிப் பார்த்தேன். 'நல்ல இடம் வரும் போது விடக்கூடாது'னு அழ ஆரம்பிச்சுட்டாங்க. அம்மாவுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. 'மாப்பிள்ளை வர்ற பத்தாம் தேதி என்னைப் பார்க்க வருவாங்க'ன்னு சொல்லியிருக்காங்க. மாப்பிள்ளை வரும் போது தனியா பேசணும்னு கேட்டு விஷயத்தை நம்ம ஐடியாவை எடுத்துச் சொல்லி, மூணு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்னு டீசென்டா சொல்லிடலாம்னு யோசிச்சிருக்கேன்.'' மீரா நிதானமாய்ப் பேசினாள்.

'சூர்யா பெங்களூருக்கு வேலைக்குப் போகணும்... மீரா சென்னைக்குக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிடணும்... நானும் எதோ ஒரு வேலையைப் பார்த்துக்கணும்... இவ்வளவு தானா... நம்ம கனவு இப்படி முடிஞ்சுப் போயிடணுமா?'' கௌதம் அங்கலாய்த்துக் கொண்டான்.

'நான் இவ்வளவு சொன்ன பிறகும், ஏன்டா இப்படிப் பேசுற? மீராவுக்குக் கோபம் எட்டிப் பார்த்தது. நாம ரெண்டு பேரும் ஸ்டார்ட் அப் கனவுத் திட்டத்தைப் பாப்போம். சூர்யா அவன் குடும்பத்தைப் பார்க்கணுமே... அதனால அவன், பெங்களூருக்கு வேலைக்குப் போகட்டும், சனி, ஞாயிறு வந்து நம்மளோட சேர்ந்து விஷயங்களைக் கவனிச்சுக்கட்டும், இப்போதைக்கு இப்படி பாஸிட்டிவா யோசிப்போம்.'' மீராவின் பேச்சில் நம்பிக்கை இருந்தது.

'நாளைக்குக் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு ஆயிடுச்சு, கதை சொல்லிட்டு இருக்க நீ... என்ன நடக்குமோ பார்ப்போம்'' நம்பிக்கையே இல்லாமல் பெருமூச்சு விட்டான் கௌதம்.

ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள் எப்போதும் தெளிவாகவே இருக்கிறார்கள். மீராவைப் பார்க்க மாப்பிள்ளை வந்தான். லட்சணம், அறிவு, நல்ல குடும்பத்தில் ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட பிள்ளை என்பதற்கான அத்தனை அடையாளங்களும் அவனிடம் இருந்தன. அவன் அம்மாவும் அவனும் மட்டும் வந்திருந்தார்கள். பெண் பார்ப்பதை கூட்டம் கூட்டிச் செய்வதில் அவர்கள் குடும்பத்துக்கு விருப்பமில்லையாம். பெண்ணுக்குச் சிரமமாக இருக்கலாம் என்பதால் இருவர் மட்டும் வந்திருப்பதாக பையனின் அம்மா சொன்னது மீராவின் அம்மாவுக்கு இன்னும் ரொம்பப் பிடித்திருந்தது.

மீரா, தான் நினைத்ததைச் சொல்லிவிட்டாள். கல்யாணம் என்று பெற்றோர் முடிவு செய்ததை அப்படியே ஏற்றுக்கொண்டு சம்பிரதாயத்துக்காகப் பெண் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளை சலனமே இல்லாமல் புன்னகையோடு விடைபெற்றுக்கொண்டான். மீராவுக்கு நிம்மதி படர்ந்தது. அவனே வேண்டாம் என்று சொல்லிவிட்டால் தன் பாடு தீர்ந்தது என்று நினைத்தாள்.

கல்லூரியில் மூன்று பேரும் வழக்கமாக ஒன்றாகவே இருப்பார்கள். இன்றைக்கும் அப்படியே இருந்தார்கள். எப்போதும் முதல் மதிப்பெண்கள் இவர்களுக்குத்தான் என்பதால், யாரும் இவர்களைத் தொந்தரவு செய்வதும் இல்லை. மீரா, நடந்ததைச் சொன்னாள். சூர்யா கவலையானான்.

'உங்க அம்மா விஷயம் தெரிஞ்சு கோபிச்சுக்கிட்டா என்ன செய்ய முடியும்? இந்த சகவாசம் தானே உன்னை இப்படி முடிவு பண்ண வைக்குதுன்னு கோபப்பட்டா நம்ம பிரெண்ட்ஷிப் தப்புன்னு ஆயிடும். நீ செஞ்சது சரின்னு என்னால ஏத்துக்கவே முடியல.''

'வேலையைப் பார்ப்போமா?'' -மீராவுக்குக் கோபம் வந்தது.

கௌதம் எதிலும் பட்டுக் கொள்ளாமல் எதோ புத்தகத்தில் மூழ்கி இருந்தான். அவன் கவனமெல்லாம் தங்கள் தேர்வு பற்றியும், அதன் பிறகு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் குறித்து படிப்பதிலும் இருந்தது. மீராவும் படிப்பதில் கெளதமுடன் சேர்ந்து கொண்டாள்.

படிப்பின் ஆர்வம் மூவரையும் மடிக்கணினிக்குள் மூழ்கச் செய்தது. 'இந்த ஆண்டு நம்முடைய பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருப்பது நமக்குப் போதுமான தகவல்களைத் தராது. அதனால், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடத்திட்டம் இருக்கிறது பார். அதையும் நாம் படித்துக்கொள்ள வேண்டும்'' சூர்யா ஆர்வத்தோடு சொல்லிக் காண்பித்தான்.

நாள்கள் நகர்ந்தன. மூவரும் உற்சாகமாக தங்கள் கல்லூரி நாள்களின் இறுதிக் கட்டங்களை ரசித்துக் கடந்தார்கள். மாப்பிள்ளை வீட்டிலிருந்து நல்ல செய்தி வரும் என்று காத்திருந்தாள் மீராவின் அம்மா. மாப்பிள்ளை பையன் ரொம்பப் படித்தவன். நாசுக்காக பெண் எடுத்துச் சொன்னதை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வீட்டில் பெற்றோரிடம் சொல்லிவிட்டான்.

மீராவின் அம்மாவுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. மகள் எதோ சொல்லிவிட்டாள். அதனால் தான் மாப்பிள்ளை வீட்டிலிருந்து மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லையென யூகித்துக்கொண்டாள். மகளைக் கேட்டதும் அவளும் உண்மையை ஒப்புக் கொண்டாள். மகளின் செயலுக்காக ஆத்திரப்படுவதா, அழுவதா என்று தெரியவில்லை.

வளர்ந்த பெண்ணிடம் கோபப்படவும் முடியவில்லை. இவ்வளவு தூரம் தெளிவாகக் கல்யாணம் வேண்டாம் என்று நிற்பவளை வற்புறுத்தி என்ன ஆகப்போகிறது என்ற எண்ணமும் தோன்றியது. 'ஆண் பிள்ளைகளை வளர்ப்பதே இந்தக் காலத்தில் சுலபம் போல. ஆண் பிள்ளை, அதிலும் வெளிநாட்டில் படித்த பிள்ளை இவள் தான் உனக்குப் பார்த்திருக்கும் பெண் என்றதும் மறுசொல் இல்லாமல் சம்மதித்து அம்மாவோடு வந்து பெண் பார்த்துவிட்டுப் போகிறான். பார்க்க வந்த இடத்தில் பெண் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னதையும் எந்த அருவருப்பும் கோபமும் இல்லாமல் இயல்பாக எடுத்துக் கொண்டு போகிறான்.' நினைக்க நினைக்க மீராவின் தாய்க்கு மனம் பொறுக்கவில்லை.

எவ்வளவு நல்ல பிள்ளை. பொறுமையும் புரிந்து கொள்ளும் தன்மையும் உள்ள பிள்ளை. அந்தப் பிள்ளையைக் கட்டிக்கொண்டு வாழ இந்தப் பெண்ணுக்குக் கொடுத்து வைக்கவில்லையே... இப்படி வேண்டாம் என்று தவிர்த்து விட்டாளே! இவளையும் தான் எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? ஆரம்பம் முதலே நன்றாகப் படிக்கிற பெண். அவளுக்கென்று லட்சியம் இருக்கிறது. அந்த லட்சியம் தான் முதன்மை என்று நினைக்கிறாள்.

பெற்ற மனம் பலவாறு சிந்தித்தது. மகளின் முடிவு வருத்தம் தந்தது என்றாலும், கட்டாயப்படுத்துவதில் பலனில்லை என்று படிப்பு முடியட்டும், தேர்வு நேரத்தில் குழப்பமும் பிரச்னையும் வேண்டாம் என்று பொறுமையாக இருந்தாள்.

தேர்வு நெருங்கி வர வர படிப்பில் மும்முரமானார்கள். கல்லூரியின் கலகலப்பு சற்று அடங்கி, மாணவர்கள் முகங்களில் ஒரு தீவிரத் தன்மை வந்திருந்தது. கடைசி ஆண்டின் கடைசித் தேர்வு அதன் பின் வாழ்க்கை என்ன? என்ற கேள்வி பாடத்தை இன்னும் கவனமுடன் அணுக வைக்கிறது போல!

கல்லூரித் தேர்வு அன்றைக்கு முடிகிறது. காலையில் தேர்வு எழுதி முடித்து விட்டு நண்பர்கள் மூவரும் கணினி ஆய்வகத்தில் எதையோ ஆழ்ந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். மீரா சொன்னாள், 'நம்முடைய ஸ்டார்ட் அப் வேலைகளைத் தொடங்கிவிடுவோம். முதலில் எங்கள் வீட்டில் ஓர் அறையில் வேலையைத் தொடங்குவோம். ஒரு வருஷம் கஷ்டப்படுவோம். அப்புறம் நம்ம ஐடியா கிளிக் ஆனா, முழுநேரமா தனியா இடம் பார்த்து அலுவலகம் வைத்துக் கொண்டு இறங்கிடலாம்.''

சூர்யாவின் கண்கள் பிரகாசித்தன. 'ஆமாம் கெளதம், மீரா சொல்றது சரிதான். நீங்கள் இருவரும் இங்கிருந்து வேலையைப் பாருங்கள். நானும் என் பங்குக்கு பெங்களூரிலிருந்து வேலை செய்கிறேன். தொழில்நுட்ப நுணுக்கங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். டிசைனிங், சந்தைப்படுத்தல் வேலைகளை மீரா நன்றாகப் பார்த்துக் கொள்வாள். நீயே எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கிற வேலையைப் பார்த்துக்கொள்.'' திட்டத்தை மேலும் நுட்பமாக விளக்கிக் கொண்டிருந்தான் சூர்யா.

'மீரா... உங்களைப் பார்க்க ஒருவர் காத்திருக்கிறார். உங்கள் நண்பர்கள் இருவரையும் கூட அவர் பார்க்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். முதல்வர் உங்களை அழைக்கிறார்'' என்று கல்லூரி முதல்வரின் உதவி ஆள் வந்து அழைத்தார்.

மீராவுக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்னைப் பார்க்க யார் வருவார்கள்?' கேள்வியோடு நண்பர்கள் இருவரையும் பார்த்தாள். 'வா, போய்ப் பார்ப்போம்.'' சூர்யா எழுந்து கொண்டான்.

மூவரும் முதல்வர் அறைக்குள் நுழைந்தார்கள். முதல்வரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். யார் என்று தெரியவில்லை. இவர்களைத் திரும்பிப் பார்த்தார். மீராவின் மீது அவரது பார்வை ஒருகணம் பதிந்தது. முகத்தில் திருப்தியின் அறிகுறி தோன்றியது. 'மீரா, வாம்மா...'' அவரே அழைத்தார்.

மீரா குழப்பத்தோடு அவரைப் பார்த்தாள். 'இரண்டு மாதங்களுக்கு முன் உன்னைப் பார்ப்பதற்காக என் மகனும், மனைவியும் வந்திருந்தார்கள். உனக்குத் தற்போதைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க விரும்புவதாகவும் என் மகன் சொன்னான்.'' வந்தவர் பேசப் பேச, மூவருக்கும் வந்திருப்பவர் மாப்பிள்ளையின் அப்பா என்று புரிந்துவிட்டது.

மீரா தெளிவானாள். புன்னகையோடு, 'அவர் சொல்வதெல்லாம் நிஜம்' என்பதாகத் தலையாட்டினாள்.

நண்பர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள். இருவரையும் உற்றுக் கவனித்தவர், மீராவைப் பார்த்துத் தொடர்ந்தார். 'நீங்கள் மூவரும் உங்கள் கனவு நிறுவனத்தைத் தொடங்குங்கள். அதற்காக திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்ய வேண்டாம். என் மகனை உனக்குப் பிடித்திருந்தால் திருமணத்தை நடத்திவிடலாம்.

நானே உங்கள் நிறுவனத்துக்கு நிதிஉதவி செய்யத் தயாராக இருக்கிறேன். நீங்கள் விரும்பினால், ஒருவேளை என் மகன் உங்கள் பணியில் உங்களோடு பயணிக்க முடிந்தாலும் மகிழ்ச்சி. ஆலோசனை செய்யுங்கள்!'' நிதானமாகப் பேசிவிட்டு முதல்வருக்கு நன்றி சொல்லி எழுந்தார். மீரா தன்னையறியாது கை கூப்பினாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.