/

எழுதுக...

'மாணவர்களுக்கு வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நூல்கள் எழுத வைத்து வெளியிட்டு வருகிறோம்' என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'எழுதுக' அமைப்பின் பொறுப்பாளர் வே. கிள்ளிவளவன்.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 10:34 pm

பாரத்.தி.நந்தகுமார்

'மாணவர்களுக்கு வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நூல்கள் எழுத வைத்து வெளியிட்டு வருகிறோம்'' என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'எழுதுக' அமைப்பின் பொறுப்பாளர் வே.கிள்ளிவளவன்.

முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான இவர், 450-க்கும் மேற்பட்ட மாணவர்களை இளம் எழுத்தாளர்களாக உருவாக்கியுள்ளார். சென்னை குருநானக் கல்லூரியில் பிப். 6-இல் நடைபெற்ற விழாவில், இவரது வழிகாட்டுதலின்பேரில் மாணவர்கள் எழுதிய 108 நூல்களை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், கர்நாடக ஐ.ஏ.எஸ். அலுவலர் ராம்பிரசாத் மனோகர் உள்ளிட்டோர் வெளியிட்டனர். 'இது எப்படிச் சாத்திமாயிற்று?' என்பது குறித்து கிள்ளிவளவனிடம் பேசியபோது:

'எல்லைப்புற முகாம்களுக்கு வட இந்திய மாணவர்கள் வாழ்த்துக் கடிதங்களை அனுப்புவார்கள். இதனால், 2016-ஆம் ஆண்டு முதல் விடுமுறையில் ஊருக்கும் வரும்போதெல்லாம்,பள்ளிகளுக்குச் சென்று நூற்றுக்கணக்கான கடிதங்களை அளித்து, அவர்களையே எழுத வைத்து முகாம்களுக்கு அனுப்பச் செய்தேன்.

2020-இல் பணி ஓய்வு பெற்றவுடன் மாணவர்களை கதை, கவிதை, கட்டுரைகளை எழுத வைத்து, நூல்களை வெளியிடும் முயற்சியில் இறங்கினேன். இதற்கு திருவள்ளூரைச் சேர்ந்த சுகுமாறன், ஆசிரியர்கள் பூங்குழலி (காஞ்சிபுரம்), லாவண்யா (திருச்சி), கல்வித் துறையைச் சேர்ந்த பாலசந்திரன் (காஞ்சிபுரம்), தனியார் பயிற்சி மையம் நடத்தும் சண்முகம் (திருவள்ளூர்), இளைஞர் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜா உள்ளிட்டோர் உதவுகின்றனர். இவர்களைத் தவிர, ஒருங்கிணைப்பாளர், குழுத் தலைவர், வழிகாட்டி ஆசிரியை என்று பலரையும் பிரித்து, பணியை ஒருங்கிணைக்கிறோம்.

கரோனா காலத்தில் நேரிலும், இணையவழியிலும் மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சியை அளிக்கத் தொடங்கினோம். தேர்வு செய்யப்படுவோரைப் பிரித்து, மூன்று மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்று பிரிப்போம். மாணவர்கள் எழுதுவதை அவர்கள் பிழை திருத்தம் செய்வர். 'வாய்ஸ் டைப்பிங்' முறையில் கைப்பேசியிலோ, கணினியிலோ தட்டச்சு செய்து, அதை 'வேர்ட் பைல்' முறைக்கு மாற்றி, காஞ்சிபுரத்தில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு அனுப்புவர். எங்கள் குழுவினர் சரிபார்த்து, பதிப்பகங்களின் துணையோடு நூல்களை வெளியிடச் செய்வோம். செலவுகளை அமைப்பின் குழுவில் உள்ளவர்களே பகிர்ந்துகொள்கிறோம்.

2021-ஆம் ஆண்டு ஜூலையில் 100 நூல்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், 2023-இல் 150 நூல்களை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்புவும் வெளியிட்டனர்.

மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்துத் தரமான நூல்களை வெளியிட முடிவு செய்து, முக்கிய இடங்களில் 3,500 மாணவர்களுக்குப் பயிற்சிகளை அளித்தோம். அவர்கள் எழுதியதை வாங்கி, அதில் இருந்து 250 மாணவர்களைத் தேர்வு செய்தோம். மூன்றாம் கட்டமாக 2025 ஜனவரியில் 101 நூல்களை வெளியிட்டோம்.

பின்னர் நான்காம் கட்டமாக இளைய தலைமுறையினர் சமூக சேவை, களப் பணியோடு நூல்களை எழுதும் வகையில் ஏற்பாடுகளைச் செய்தோம். விவசாயி, தொழிலாளி என்று கதையோ, கவிதையோ வந்தால், மாணவர்களை அங்கே அனுப்பி, ஒரு நாள் முழுவதும் அவர்களிடம் இருந்து அதை அறியும்படி செய்தோம். இந்த முறையில் எழுதிய நூல்கள் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு சிறப்புற விளங்குகின்றன.

பிப். 24-இல் 50 நூல்கள் வெளியிடு: சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் 50 பேர் எழுதிய நூல்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிப். 24-இல் நடைபெறவுள்ள விழாவில் வெளியிடப்படுகிறது. இந்த நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமே பதிப்பித்துள்ளது.

சிறைக்கைதிகளின் நூல்கள்: அடுத்தகட்டமாக, கடலூர் சிறையில் உள்ள 180 கைதிகளை நூல்கள் எழுதப் பயிற்சியளித்து வருகிறோம். இதற்கு ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், சிறைக் கண்காணிப்பாளர் பரசுராமன் உள்ளிட்டோர் உதவுகின்றனர்'' என்கிறார் கிள்ளிவளவன்.

'எழுதுக' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.பாமா: மாணவர்களின் படைப்புகளையும், அவர்களின் அன்றாட அனுபவத்தில் நடைபெறும் சுவாரசிய நிகழ்வுகளையும் கேட்டறிந்து அவர்களை எழுத ஊக்குவித்தோம். 'எழுதுக' அமைப்பின் குழுவினர் இணையவழி முறையில் விவாதிப்போம். மாணவர்களுக்கு விடுமுறை நாள்களிலும், ஓய்வு நேரங்களிலும் வழிகாட்டுவோம். புத்தகத்

திருவிழாக்களில் உள்ள அரங்குகள், தன்னார்வலர்கள் வாயிலாக மாணவர்களை நாங்கள் அறிவோம்.

ஒரு மாதத்துக்கு மாணவி யுகஸ்ரீ தெருக்கூத்துக் கலைஞர்களுடன் உடனிருந்து, அவர்களின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து, நூலை எழுதியுள்ளார்.

வழிகாட்டி ஆசிரியை கே.லட்சுமி: மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி, அவர்கள் கூறுவதை அறிந்து, களப்பணியாகச் சென்றுவருமாறு அறிவுறுத்துவோம். வீட்டு வேலை செய்யும் பணியாளருடன் மோனிஷும், செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் இனியனும், பனை ஓலைத் தொழிலாளரிடம் ஷாலினியும் உடனிருந்து களப்பணியாற்றினர். சுற்றுச்சூழல் எதனால் மாசுபடுகிறது என்பதை ஆராய்ந்து உம்மு அபிபா எழுதியுள்ளார்.

Story image

ஒரே பள்ளியில்...

செட்டியார் அகரத்தைச் சேர்ந்த சென்னை நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 11 பேரின் 10 நூல்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது குறித்து தலைமை ஆசிரியை வீ.நளினாவிடம் கேட்டபோது:

'எழுதுக அமைப்பினர் வழிகாட்டுதல்களை அளித்தனர். 'சிந்தித்த நேரம்' எனும் நூலை ஏழாம் வகுப்பு மாணவி எம்.தாரிகா, 'சிந்தனை விதிகள்' எனும் நூலை ஏழாம் வகுப்பு மாணவி கே.நித்யஸ்ரீ, 'தேவதைகளின் உலகம்' எனும் நூலை ஏழாம் வகுப்பு மாணவி ஏ.உம்மு அபிபா, 'தடக்...தடக்... ரயில் வண்டி...' எனும் நூலை எட்டாம் வகுப்பு மாணவி ஏ.அஸ்வினி, 'பிரியமானவர்களுக்குக் கடிதம்' எனும் நூலை எட்டாம் வகுப்பு மாணவி ஏ.சலைத் தட்சலா, 'விதைகள் பேசின' எனும் நூலை ஏழாம் வகுப்பு மாணவர் எஸ்.பிரதீப், 'கனவுகளைக் கட்டியெழுப்பு' எனும் நூலை முன்னாள் மாணவரும், கிரேஸ் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் பயிலும் பி.ஒய். காவ்யா, 'என் மௌன நண்பர்களுக்கு' எனும் நூலை முன்னாள் மாணவியும், அய்யப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியுமான கே.ஷாலினி, 'உள்ளத்தில் இருந்து கடிதங்கள்' எனும் நூலை முன்னாள் மாணவியும், மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவியுமான எஸ்.வன்ஷிகா, 'மாற்றம் நம்மிடம் இருந்து' எனும் நூலை மாணவர்கள் பி.மோனிஷ், ஏ.தர்ஷிகாஸ்ரீ ஆகியோரும் எழுதினர்.

2024-இல் 'எழுதுக' அமைப்பு வெளியிட்ட 'சிந்திக்கத் தூண்டும் சிறார் கதைகள்' எனும் நூலில் 3 சிறுகதைகளை மாணவர் ஆகாஷ் எழுதியிருந்தார். இதேபோல், ராணியம்மாள் அறக்கட்டளையும், தமிழ்நாடு தன்னார்வ அமைப்பும் இணைந்து 2025-இல் நடத்திய இளம்தலைமுறை எழுத்தாளர் எனும் நூல் தொகுப்பில், எங்கள் பள்ளி மாணவர்கள் 11 பேர் சிறுகதைகளை எழுதினர். அதில் 5 பேருடைய சிறுகதைகள் இடம்பெற்றன'' என்கிறார் நளினா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.