சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பயிற்சியாளர் மட்டுமல்ல...

சைப்ரஸில் நடைபெற்ற பிடே மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் நட்சத்திர செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி அண்மையில் படைத்துள்ளார்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 10:48 pm

சைப்ரஸில் நடைபெற்ற பிடே மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியாவின் நட்சத்திர செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி அண்மையில் படைத்துள்ளார். இதன் மூலம் உலக மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பில் ஜு வென்ஜுனை எதிர்கொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளார்.

கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற பிரக்ஞானந்தா வைஷாலியின் தம்பி ஆவார். கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் சகோதரசகோதரி ஜோடி என்ற சாதனையை வைஷாலி, பிரக்ஞானந்தா படைத்துள்ளனர்.

வைஷாலி சென்னையைச் சேர்ந்தவர். 2023இல் பிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் போட்டியில் வென்றார். 2020, 2024 ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்று, தங்கம் வென்றிருக்கும் வைஷாலி, ஆக்ரோஷமான செஸ் ஆட்டத்துக்குப் பெயர் பெற்றவர்.

வைஷாலி, பிரக்ஞானந்தாவின் வெற்றிகளுக்குக் காரணமாக இருப்பவர் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பி. ரமேஷ். இந்தியாவிலும் உலகிலும் உள்ள தலைசிறந்த சதுரங்கப் பயிற்சியாளர்களில் ஒருவர். இருவரும் சுமார் 2000 எலோ மதிப்பீட்டில் இருந்த காலத்திலிருந்தே ரமேஷ், அவர்களுக்குப் பயிற்சியாளராக இருந்து வருகிறார். வைஷாலி, பிரக்ஞானந்தா இருவரும் பிடே கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்காக சைப்ரஸூக்குக் கிளம்பியபோது, உங்களில் யாராவது ஒருவர் போட்டியில் வெற்றி பெற்றால், நேரில் பாராட்ட சைப்ரஸூக்குப் பறந்து வருவேன்' என்று சொல்லியிருந்தார்.

பிரக்ஞானந்தா வெற்றி பெறாத நிலையில், 14 சுற்றுகள் கொண்ட கடுமையான சதுரங்கப் போட்டிக்குப் பிறகு, வைஷாலி வெற்றி பெற்றார். அந்தப் போட்டியை ரமேஷ் சென்னையில் தனது வீட்டிலிருந்தவாறே தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்.

வெற்றி பெற்றால் நேரில் வந்து பாராட்டுவேன்' என்று சொன்ன சொல்லைக் காப்பாற்ற, சைப்ரஸ் செல்ல விமான டிக்கெட் கிடைக்கிறதா என்று பார்க்க, அதிர்ஷ்டவசமாகக் கிடைத்தது. ரமேஷ் சைப்ரஸ் பறந்தார்.

ரமேஷ் சென்னையிலிருந்து துபை, ஏதென்ஸ், லார்னாகா, கேப் செயின்ட் ஜார்ஜஸ் வழியாக சைப்ரஸ் செல்லவேண்டும். விமானப் பயணம் மட்டுமே 20 மணி நேரத்துக்கும் அதிகம். வைஷாலி விருதை பெற மேடைக்குச் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரமேஷ் விழா அரங்குக்கு அவசரம் அவசரமாக வந்து சேர்ந்தார்.

ஆயிரக்கணக்கான கி.மீ. பயணித்து, விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட என் பயிற்சியாளரின் முன்னிலையில் கோப்பையைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் பயிற்சியாளர் மட்டுமல்ல, குரு. எங்களுக்கு செஸ் கற்றுக் கொடுத்ததுடன், எங்கள் வாழ்க்கைக்கு திசையையும் காட்டி வழி நடத்தியுள்ளார். ரமேஷ் ஸார் எங்கள் குடும்பத்தில் ஒருவர்' என்று வைஷாலி நெகிழ்ந்தார்.

ஆர்.பி. ரமேஷ், சென்னையில் 2008 இல் செஸ் குருகுலம் என்ற பயிற்சி மையத்தை தொடங்கி, பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பல உலகத்தரம் வாய்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கியுள்ளார். இவர் 2002இல் பிரிட்டிஷ் சாம்பியன், 2007இல் காமன்வெல்த் சாம்பியன் விருதுகளை வென்றவர்.

செஸ் பயிற்சியில் ரமேஷின் பங்களிப்புக்காக இந்திய அரசின் உயரிய துரோணாச்சார்யா விருதை 2023 இல் அவருக்கு வழங்கப்பட்டது. கிராண்ட்மாஸ்டர் ஆர்.பி. ரமேஷின் மனைவி ஆர்த்தி ராமஸ்வாமியும் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆவார். ஆர்த்தி 18 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் உலக சாம்பியன் (1999), இந்திய மகளிர் சாம்பியன் (2003) பட்டம் பெற்றவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.