சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலியின் மகத்தான சாதனை ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாதது வருத்தம் ஏற்படுத்துகிறது. சைப்ரஸ் நாட்டில் கடந்த புதன்கிழமை (ஏப். 15) நிறைவடைந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில், 24 வயதேயான ஆர்.வைஷாலி பட்டம் வென்றார். இதன்மூலம், உலக மகளிர் செஸ் சாம்பியன் பட்டத்துக்காக நடப்பு சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனுடன் விளையாடுவதற்காகத் தேர்வாகி இருக்கிறார்.
இதற்கு முன்னர், 2024-ஆம் ஆண்டு கேண்டிடேட்ஸ் போட்டியில் கோனெரு ஹம்பி இரண்டாம் இடம் பிடித்ததே இந்திய வீராங்கனையின் சாதனையாக இருந்தது.1952 முதல் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்பதில் இருந்தே வைஷாலி கண்ட
வெற்றியின் சிறப்பை நாம் அறிந்து கொள்ள முடியும். எட்டு பேர் பங்கேற்ற இந்தப் போட்டியின் தரவரிசையில் கடைசி இடத்தில் இருந்த வைஷாலி சாம்பியன் ஆவார் என்று யாரும் கணித்திருக்க முடியாது.
இருமுறை உலக பிளிட்ஸ் சாம்பியன், ஒரு முறை உலக ரேபிட் செஸ் சாம்பியனான உக்ரைனின் அன்னா முஸிஷுக், 2024 கேண்டிடேட்ஸ் சாம்பியனான சீனாவின் டான் úஸôங்யி, 2019 கேண்டிடேட்ஸ் சாம்பியனான ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா, உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் திவ்யா தேஷ்முக் உள்ளிட்டோர் இந்தப் போட்டியில் களம் கண்ட ஏனைய வீராங்கனைகள்.
பதினான்கு சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் தொடக்கம் வைஷாலிக்குச் சாதகமாக அமையவில்லை. முதல் நான்கு சுற்றுகளை டிரா செய்த வைஷாலி, ஐந்தாவது சுற்றில் தோல்வியைத் தழுவினார். மற்றொருபுறம், இதே போட்டியின் ஓபன் பிரிவில் அவரது இளைய சகோதரர் பிரக்ஞானந்தாவின் (20) வெற்றி வாய்ப்பு குறைந்துகொண்டே வந்தது வைஷாலியைப் பாதிக்கவில்லை. அவரது ஆட்டத்திறனை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தவில்லை. காரணம், போட்டி கடுமையாகும்போது மன உறுதியை இழக்காததுடன் தேவைப்படும் நேரங்களில் போராட்ட குணத்துடன் விளையாடி மீண்டெழுந்து வெற்றி காண்பது வைஷாலிக்குப் புதிதல்ல.
அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி, டிரா எனப் புள்ளிகள்
பட்டியலில் தொடர்ந்து முன்னேறி, கடைசி சுற்றில் ரஷியாவின் கேத்தரினா லாக்னோவுடன் மோதினார். மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த ஆட்டத்தில், 48-ஆவது நகர்த்தலில் எதிராளியை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்.
வைஷாலியின் வெற்றிப் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. தந்தை வங்கிக் கிளை மேலாளர், தாயார் இல்லத்தரசி. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். விஸ்வநாதன் ஆனந்த்
நிறுவிய வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாதெமியில் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 2012-இல் வென்ற சென்னையின் விஸ்வநாதன் ஆனந்துக்கு விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு பார்வையாளராகச் சென்ற சிறுமி வைஷாலியின் கனவு இப்போது நனவாகி இருக்கிறது.
12 மற்றும் 14 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப், டாடா ஸ்டீல் பிளிட்ஸ் போட்டி, கிராண்ட் ஸ்விஸ் போட்டிகளில் தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன், 2022 மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனி நபர் பிரிவில் வெண்கலம், அணிப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தது, 2024 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தது என அவரது சாதனைப் பயணம் தொடர்கிறது. கோனெரு ஹம்பி, துரோணவல்லி ஹரிகா ஆகியோரைத் தொடர்ந்து கிராண்ட் மாஸ்டர் ஆன மூன்றாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அடைந்தவர் வைஷாலி.
கடந்த சில ஆண்டுகளாகவே செஸ் விளையாட்டில் இந்தியாவின் வெற்றிக் கொடி விண்ணளாவப் பறக்கிறது. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 2024 செப்டம்பரில் நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் ஓபன், மகளிர் பிரிவுகளில் இந்திய அணி தங்கம் வென்றது. இதில் தனிநபர் பிரிவுகளில் குகேஷ், அர்ஜுன், திவ்யா, வந்திகா ஆகியோர் தங்கம் வென்றனர். அதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கடந்த 2024 நவம்பர் - டிசம்பரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சென்னையைச் சேர்ந்த 18 வயதேயான டி.குகேஷ் பட்டம் வென்றார்.
நியூயார்க்கில் 2024 டிசம்பரில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் மகளிர் பிரிவில் ஹம்பி சாம்பியன் ஆனார். ஜார்ஜியாவில் கடந்த 2025 ஜூலையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் திவ்யா தேஷ்முக் சாம்பியன் ஆனார். இந்தப் பின்னணியில், தொடர்ந்து ஐந்து முறை சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை உலக மகளிர் செஸ் சாம்பியன் போட்டியில் விரைவில் வைஷாலி எதிர்கொள்ள இருக்கிறார். இந்தப் போட்டி நடைபெறும் இடம், காலம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதுவரை இந்திய மகளிர் யாரும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. ஆடவர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த டி. குகேஷ் நடப்பு உலக சாம்பியனாக உள்ள நிலையில், பலமான எதிராளியை வைஷாலி வீழ்த்தி தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திவ்யாவை வீழ்த்தினாா் வைஷாலி

அகில இந்திய பல்கலை. செஸ் போட்டி: சென்னைப் பல்கலைக்கழகம் சாம்பியன்

போர்ப் பதற்றத்தால் செஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!
அகில இந்திய பல்கலை. செஸ்: தொடா்ந்து 6-ஆவது முறையாக எஸ்ஆா்எம் சாம்பியன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


