/

அழகான வாத்து பரிசு!

பாரிஸில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளில் பல்வேறு சுவாரசியங்கள் நடந்தேறின.

News image
அரிஸா ட்ரூ | அமன் செராவத்
Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:09 am

சுதந்திரன்

பாரிஸில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளில் பல்வேறு சுவாரசியங்கள் நடந்தேறின.

ஆஸ்திரேலியாவின் 'ஸ்கேட்போர்டு' வீராங்கனை அரிஸா ட்ரூவுக்கு வயது பதினான்கு என்றாலும்

குழந்தைத்தனம் இன்னும் அவரிடமிருந்து போகவில்லை. அரிஸாவின் பெற்றோர், 'ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெற்று வந்தால் அழகான வாத்து ஒன்றை பரிசளிக்கிறோம்' என்று சொல்ல, இதற்காகவே பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் அரிஸா.

'நான் வளர்க்க அப்பா அம்மா தருவதாகச் சொன்ன செல்ல வாத்து வேண்டும்' என்று சிணுங்கிக் கொண்டு கூறியது வைரல் ஆகியுள்ளது.

'நாங்கள் ஒரு பேச்சுக்குச் சொன்னோம். எங்களுக்கு அரிஸாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை. பாருங்களேன். வாத்தை எங்களிடமிருந்து பரிசாகப் பெறுவதற்காக திறமையைக் காட்டி தங்கப் பதக்கத்தை ஆஸ்திரேலியாவுக்கே பரிசாகத் தந்திருக்கிறார்' என்கின்றனர் பெற்றோர்.

இமான் கலீஃப்

இமான் கலீஃப்

ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு ஆறாவது பதக்கத்தைப் பெற்றுத் தந்த மல்யுத்த வீரர் அமன் செராவத்துக்கும் போட்டியில் கலந்துகொள்ளுவதற்கு முன்பு உடல் எடை பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அமன் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் புவர்டோ ரிகோ வீரர் டேரியனைத் தோற்கடித்தார். முந்தைய இரவு அமன் உடல் எடையைப் பார்த்தபோது, நான்கரை கிலோ அதிகமாகியிருந்தது.

மல்யுத்தம், நீராவி குளியல், சீரான ஓட்டம், என்று இரவு முழுக்க அமன் உடற்பயிற்சிகளை சலிக்காமல் செய்து அதிகாலையில் தனது எடையை 56 கிலோ 900 கிராமில் கொண்டுவந்து நிறுத்தினார். இரவில் சில நிமிடங்கள் கூட கண் மூடவில்லை. அன்று நடந்த போட்டியில் எதிராளியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகுதான் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அமனுக்கு 21 வயதாகிறது. சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து தாத்தா, மாமா அரவணைப்பில் வளர்ந்தவர். 2012 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுஷில் குமாரின் வெற்றியால் உந்தப்பட்டு, 11-ஆவது வயதில் தில்லி சத்ரசல் மல்யுத்த பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார்.

பயிற்சி நிலையத்தில் ரவி தஹியாவின் பயிற்சிகளைக் கண்டு ஏறக்குறைய அவரையே மானசீகக் குருவாக அமன் ஏற்றுக் கொண்டார். பாரீஸ் ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் 57 எடை பிரிவில் ரவி தஹியா, அமன் இருவரில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள

முடியும் என்ற சூழல் உருவாக, குருவும் சிஷ்யனும் மல்யுத்தம் செய்ய வேண்டிய இக்கட்டான தருணம் ஏற்பட்டது. குருவைத் தோற்கடித்து அமன் 2024 ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டார். 2022 காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இதே சூழல் ஏற்பட்ட நிலையில் ரவி, அமனைத் தோற்கடித்து போட்டியில் கலந்து கொண்டார்.

'இமான் கலீஃப் பெண்ணே அல்ல; உண்மையில் அவர் ஓர் ஆண்' என்று இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரிணி குற்றம் சாட்டியதுடன் 46 விநாடிகளில் போட்டியில் இருந்து வெளியேறினார். 'ஒருவேளை அல்ஜீரியாவைச் சேர்ந்த இமான் கலீஃப் திருநம்பியாக இருப்பாரோ' என்றும் சந்தேகப்பட ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு இமான் இறக்கிய ஐந்து டன் குத்து கரிணி மேல் பாரமாக இறங்கியது. அந்தக் குத்தைத் தாங்க முடியாத கரிணி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பினார். ஆனால், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதால் ஒலிம்பிக்ஸ் நிர்வாகம் இமான் பெண்தான் என்பதில் உறுதியாக இருந்தது.

இருபத்து ஐந்து வயதான இமானின் உயரம் ஐந்து அடி பத்து அங்குலம். இதுவே இமானுக்கு வெற்றி பெற அனுகூலமாக இருந்தது. ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச் சண்டை போட்டியில் தொடர்ந்து முன்னேறிய இமான் 66 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் நட்சத்திர வீராங்கனையான யாங் லியூவை 5 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

பதக்கம் கையில் கிடைத்ததும் இமான் கலீஃப், 'எட்டு ஆண்டுகளாக ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் பெறுவது மட்டும்தான் எனது குறிக்கோளாக இருந்தது. பயிற்சியைத் தொடங்கினேன். பயிற்சி நிலையம் எனது கிராமத்திலிருந்து பத்து கி. மீ தூரம். சென்று வர பஸ் கட்டணத்துக்காக, பழைய ஈயம், இரும்பு பித்தளை சாமான்களைச் சேகரித்து விற்று ரொட்டிகளை விற்று கிடைக்கும் பணத்தில் பயிற்சியைத் தொடர்ந்தேன். குத்துச் சண்டைகளில் ஈடுபட்டாலும் எல்லாம் தோல்வியில் முடித்தது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் தோல்வி. ஆனால் பிராந்திய போட்டிகளில் வெற்றி பெற்றேன். எனது கனவு பாரிஸ் ஒலிம்பிக்ஸில் நனவானது' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.