3 ஹீரோயின்கள்... வைரல்கள்...
சமூக வலைதளங்கள் வந்த பிறகு சினிமா நட்சத்திரங்கள் பதிவிடுகிற ஒவ்வொரு பதிவுக்கும் ரசிகர்களிடத்தில் அவ்வளவு வரவேற்பு.


சமூக வலைதளங்கள் வந்த பிறகு சினிமா நட்சத்திரங்கள் பதிவிடுகிற ஒவ்வொரு பதிவுக்கும் ரசிகர்களிடத்தில் அவ்வளவு வரவேற்பு. அந்த வகையில் சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்ற மூன்று ஹீரோயின்களின் பதிவுகள் என்னென்ன இங்கே பார்க்கலாம்...
திருமண வதந்திகளுக்கு கீர்த்தியின் முற்றுப்புள்ளி:
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் கீர்த்தி சுரேஷ். இன்று மலையாளம், தமிழ், தெலுங்கு என கிட்டதட்ட 25 படங்களுக்கு மேல் நடித்து திரைத்துறையில் முன்னணி நடிகையாகப் பரிணமித்து வருகிறார். அதுமட்டுமன்றி பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார்.
இவர் அண்மையில் 'தசரா' படத்தில் தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில், அப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரூ. 70 75 லட்சம் மதிப்புள்ள சுமார் 130 பேருக்கு பத்து கிராம் கொண்ட தங்கக் காசுகளைப் பரிசாக வழங்கி டாக் ஆஃப் தி டவுனாக மாறினார்.
இதையடுத்து, தெலுங்கில் சுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார். தமிழில் மாரி செல்வராஜின் 'மாமன்னன்' வெளிவந்துள்ளது. இந்நிலையில் கீர்த்தி, துபாயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைக் காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப் போவவதாகவும் வதந்திகள் பரவி வந்தன. இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக மாறி, நேரடியாக சிலர் கீர்த்தியிடம், 'உங்களுக்கு திருமணமா? என்று கேட்கும் அளவிற்குச் சென்றுவிட்டது. இதையடுத்து இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீர்த்தி தானே முன்வந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள கீர்த்தி, 'ஹஹஹா!! இந்த நேரத்தில் என் அன்பான நண்பரை வதந்திகளில் இழுக்க வேண்டியதில்லை. நான் திருமணம் செய்யப்போகும் அந்த மர்ம மனிதரை நானே வெளிப்படுத்துவேன். அதுவரை கொஞ்சம் சில்லாக இருங்கள். ஆனால், யாரையும் இதுவரை தேர்வு செய்யவில்லை' என்று தெரிவித்திருக்கிறார்.
நேசிப்பவர்களிடம் உண்மையாக இருங்கள்! சமந்தாவின் உருக்கம்:
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் 'குஷி', வருண் தவான் உடன் 'சிட்டாடல்' என பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் செர்பியாவில் உள்ள பிரபல தேவாலயத்தில் வழிபாடு நடத்திய சமந்தா அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தனக்கு ஒரு வருடம் ஆகிறது என உருக்கமானப் பதிவு ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், 'மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. எனது உடம்புக்குள் பல போராட்டங்கள் நடைபெற்றன. பல சவால்களைச் சந்தித்தேன்.
சர்க்கரை, உப்பு மற்றும் பருப்பு வகைகளைக் கூட உட்கொள்ள முடியாத சூழ்நிலை. அந்த சமயத்தில் மாத்திரையை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டேன்.
சினிமா துறையிலும் பல தோல்விகளைச் சந்தித்தேன். இந்த வருடத்தில் நிறைய பிரார்தனைகள் மற்றும் பூஜைகளைச் செய்தேன். அந்த பிரார்த்தனைகள், பூஜைகள் அனைத்தும் ஆசிர்வாதங்களையும், பரிசுகளையும் எதிர்பார்த்து நான் செய்யவில்லை. மன வலிமையையும், அமைதியையும் கொடுக்கத்தான் நான் அதை செய்தேன்.
நாம் நினைத்தது போல் எதுவும் நடக்காது என்று இந்த ஒரு வருட காலம் எனக்கு உணர்த்தியது. சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியமில்லை. முன்னோக்கி நகர்வதே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன்.
மீண்டும் தானாக சரியாகும் என்று நாம் காத்திருக்கக்கூடாது, கடந்த காலங்களில் நடந்த சோகங்களையும் தோல்வியையும் நினைத்து அதில் மூழ்கி விடக்கூடாது, நாம் நேசிப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும்.வெறுப்பு நம்மை பாதிக்கும் அளவுக்கு இடம் கொடுக்கக் கூடாது, உங்களில் பலர் மிக கடினமான சூழ்நிலையை சந்தித்திருப்பீர்கள், உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.
கடவுள் சில விஷயங்களை தாமதம் செய்யலாம். ஆனால் கைவிட மாட்டார். அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வலிமையை தேடுபவர்களை ஒரு போதும் கடவுள் கைவிடமாட்டார்...'' என்று பதிவிட்டிருக்கிறார். சமந்தாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அகஸ்தியா தியேட்டரை வாங்கி மல்டி ப்ளக்ஸ் கட்டுகிறாரா நயன்தாரா?:
நயன்தாரா, வட சென்னையின் அடையாளமான அகஸ்தியா திரையரங்கை வாங்கி மல்டி பிளக்ஸ் தியேட்டர் கட்டப்போவதாக தகவல் பரவ, உண்மைதானா என்பதை அறிய தியேட்டர் தரப்பில் விசாரித்தோம்.
சென்னையின் முக்கிய அடையாளம் வடசென்னை என்றால், அந்த வடசென்னையின் முக்கிய அடையாளம் அகஸ்தியா தியேட்டர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அகஸ்தியா தியேட்டர் கரோனாவுக்குப்
பிறகு மூடப்பட்டாலும் அது குறித்த பரபரப்புகள் அடங்கியபாடில்லை. ஏற்கெனவே, மெட்ரோ பணிகளுக்காக அகஸ்தியா தியேட்டரின் முன்பகுதி இடத்தை அரசு கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மீதமுள்ள இடத்தை நடிகை நயன்தாரா பெரிய தொகைக்கு வாங்கிவிட்டார் என்றும் அந்த இடத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்டப்போகிறார் என்றும் செய்திகள் தீயாய் பரவிவருகின்றன. இந்த நிலையில், அகஸ்தியா தியேட்டர் நிர்வாகத்தினரிடம் ''இந்தத் தகவல் உண்மையா?' என்று கேட்டோம்.
''அகஸ்தியா தியேட்டர் தனிநபர் சொத்து கிடையாது. அகஸ்தியா அறக்கட்டளையின் கீழ்தான் இயங்கி வந்தது. அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் என்பதால் இதனை விற்க முடியாது. ஏற்கெனவே, மெட்ரோ பணிகளுக்காக கொஞ்சம் இடத்தை கொடுத்து விட்டோம்.
மீதமுள்ள இடத்தில் சங்கரா நேத்ராலயாவுடன் இணைந்து மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்ட விருக்கிறோம். உண்மையில் இதற்கான, ஒப்பந்தம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே போடப்பட்டு விட்டது. அதனால், நயன்தாரா இந்த இடத்தை வாங்கிவிட்டார் என்று பரப்பப்படும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை. இதற்கான, பேச்சுவார்த்தைக் கூட நடக்கவில்லை. முழுக்க முழுக்க பொய்யான தகவல் இது. பொதுமக்கள் நம்பவேண்டாம்' என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...