டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பனை ஓலையில் கலைநயம்!

பனை ஓலைகளில்  வித்தியாசமான கலைநயமிக்க  மண ஓலை,  விசிட்டிங் கார்டுகளை உருவாக்கி வருகிறார் மதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகேயுள்ள டி.ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த  டி.சாமிநாதன்.  

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:41 am

சக்ரவர்த்தி

பனை ஓலைகளில் வித்தியாசமான கலைநயமிக்க மண ஓலை, விசிட்டிங் கார்டுகளை உருவாக்கி வருகிறார் மதுரையை அடுத்த உசிலம்பட்டி அருகேயுள்ள டி.ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த டி.சாமிநாதன்.

பனை மரத்தின் பனம்பழம், பனங்கிழங்கு, கருப்பட்டி, பதநீர், நுங்கு போன்றவை உணவுக்காகப் பயன்படுத்தப்படும் பொருள்கள்.

விசிறி, கொட்டான், பாய் உருவாக்குவது தொன்று தொட்டு உள்ளது. குழந்தைகள் விளையாட கிலுகிலுப்பைகளை சாயம் ஏற்றப்பட்ட பனை ஓலைகளைப் பின்னி உருவாக்குகின்றனர்.

இவற்றைத் தாண்டி பனை ஓலையில் "மண ஓலை' எனப்படும் திருமண அழைப்பிதழ் அச்சிடப்படுவது புதுமையான மாற்றம். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள சாமிநாதனுடன் ஓர் சந்திப்பு:

பனை சார்ந்த தொழிலில் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது?

நான் எம்.பி.ஏ. படித்திருந்தாலும், விவசாயக் குடும்பப் பின்னணிதான் என்னை இயற்கை விவசாயம், பனை ஓலையில் வித்தியாசமான பொருள்களை உருவாக்க அழைத்துவந்து.

வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. ஆனால் விவசாயம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் வங்கி வேலையில் சேரவில்லை.

எனக்கு சொந்த ஊர் உடுமலைப்பேட்டை. உசிலம்பட்டிக்குப் பக்கத்தில் டி. ராமநாதபுரம் கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி இயற்கை முறையில் கம்பு, சோளம், உளுந்து, துவரை பயிரிட்டு இயற்கை விவசாயம் செய்கிறேன். ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய பனை ஓலையைக் கொண்டு குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை முதல் வீடுகளுக்குத் தேவைப்படும் பெட்டி, கொட்டான், அஞ்சறைப் பெட்டி, தாம்பூலத் தட்டு, கூடை, பாய், கூரை, கீசெயின் உள்பட கலை நயமிக்க பொருள்களை புனையக் கற்றுக் கொண்டதுடன் பனை ஓலையால் பின்னிப் புனைந்து உருவாக்கும் பொருள்களை விற்பனை செய்து வருகிறேன்.

பனை ஓலைகளை எங்கு வாங்குகிறீர்கள்..?

உசிலம்பட்டியில் பனைமரங்கள் அதிகமாக இல்லை. இருக்கும் பனைகளில் ஏறி ஓலை வெட்ட ஆள்களும் இல்லை. ராமநாதபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனங்குருத்து ஓலைகளை விலைக்கு வாங்குகிறேன். அவற்றை மிதமான வெயிலில் காயவைத்து, மழை- வெயில் படாமல் பாதுகாத்துவந்தால் ஓலைகள் பல ஆண்டுகள் மெருகு குலையாமல் இருக்கும்.

பனை மரத்தின் மையப்பகுதியில் உள்ள இளம்பச்சை நிறத்தில் இருக்கும் குருத்து ஓலையில் மட்டுமே கைவினைப் பொருள்களைத் தயாரிக்க முடியும். விரிந்து விட்ட பனை ஓலைகள் முற்றியவை. அவை நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். அவற்றில் கைவினைப் பொருள்களைத் தயாரிக்க முடியாது. பனையில் நான்கு குருத்துகள் இருந்தால் இரண்டை மட்டுமே வெட்டி எடுப்பார்கள். பனை வளர, நுங்கு பெருக மீதமுள்ள இரண்டு குருத்தோலைகள் போதும்.

பனங் குருத்து ஓலைகளை இதமாகக் காயவைத்து, வண்ணங்களை கொதிக்க வைத்து அதில் குருத்தோலைகளை முக்கி எடுத்து உலர்த்துவோம். நிறம் ஏற்றப்பட்ட ஓலையில் நீர் பட்டாலும் நிறம் அப்படியே இருக்கும்.

வண்ண ஓலைகளைப் பின்ன அல்லது முடையத் தொடங்குமுன் தண்ணீரில் நனைத்து ஓலையைப் பதப்படுத்துவோம். அப்போதுதான் ஓலை ஒடிந்து போகாமல் பின்னுவதற்கு ஏற்ற மாதிரி வளைந்து நெளிந்து கொடுக்கும். ஓலையில் ஈரப்பதம் இருக்கும் போதே நமக்கு தேவையான வடிவத்தில் பொருள்களை பின்னி முடித்துவிட வேண்டும்.

பனை ஓலையில் அழைப்பிதழ்கள், விசிட்டிங் கார்டு அச்சடிக்கும் ஐடியா எப்படி தோன்றியது ?

அந்தக் கால சுவடிகள் பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்தன். அப்போது எழுத்து ஆணி கொண்டு பனை ஓலைகளில் எழுதினர். இன்றைய காலகட்டத்தில் எழுத்து ஆணி பொருத்தமாக இருக்காது. அதனால் ஸ்க்ரீன் பிரிண்டிங் செய்து கொடுக்கிறோம்.

திருமண அழைப்பிதழ் ஓலையில் அளவு 18 செ. மீ - நீளமும், 3 செ. மீ - அகலமும் இருக்கும். முழுமையாக அச்சடிக்க மூன்று ஓலைகள் முதல் ஜந்து ஓலைகள் வரை தேவைப்படும். அந்த ஓலைகளை "பட்டு அலங்கார' நூலில் கட்டிக் கொடுப்போம். அதுபோல், விசிட்டிங் கார்டுகளையும் பனை ஓலையில் தயார் செய்து கொடுக்கிறோம்.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழ் அன்பர்கள் எங்களிடம் ஆர்டர் தருகிறார்கள். விசிட்டிங் கார்டிங் அளவு 9 செ. மீ நீளமும் 3 செ. மீ அகலம் உள்ளதாக இருக்கும்.

பனை ஓலையில் பின்னப்படும் "மணமக்கள் மாலை'யும் விசேஷமான தயாரிப்பு. தூரத்திலிருந்து பார்த்தால் பூ மலையைவிட பிரமாதமாக இருக்கும். திருமண நிகழ்ச்சிகளைத் தாண்டி, இந்த மாலைகளை அரசியல் கூட்டங்களுக்கும், உருவச் சிலைகளுக்குப் போடவும் பயன்படுத்துகிறார்கள். மணமக்கள் கைகளில் பிடிக்கக் கொடுக்கும் "கைசெண்டு'களையும் பனை ஓலைகளில் தயாரிக்கிறோம். பல ஆண்டுகள் பொலிவு மாறாமல் இருக்கும். திருமண மேடையை பனை ஓலையில் உருவாக்கப்பட்ட பொருள்களைக் கொண்டு அலங்கரிக்கிறோம்.

பனை ஓலையில் செய்யப்படும் பொருள்களுக்கு வரவேற்பு உள்ளதா?

பிளாஸ்டிக் பொருள்களின் ஆதிக்கத்தின் முன் பனை ஓலைப் பொருள்கள் போட்டி போட முடியவில்லை. பனை ஓலை தட்டுப்பாடு உள்ளது. பனை மரங்கள் இருந்தாலும் பனை ஏறுவதும் குறைந்துவிட்டது.

பனை ஓலையில் செய்யப்படும் தட்டுகள், கொட்டான்களை அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தலாம். மார்க்கெட் சென்று காய்கறி வாங்க பனை ஓலையில் பின்னப்பட்ட வண்ணக் கூடைகளை கையில் எடுத்துச் செல்லலாம். உணவு விடுதிகளில் பண்டங்களை விநியோகிக்கப் பயன்படுத்தலாம். பூக்கள், காய்கனிகள் அனுப்ப பேக்கிங் பொருளாக பனை ஓலையில் பின்னப்படும் பாயை பயன்படுத்தலாம். இப்படி செய்தால்தான் பனை ஓலை பொருள்கள் பிரபலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.