இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின்தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.2,080 அதிகரித்தது!
/

பயோபிக் சினிமாக்கள்!

இதுவரை இல்லாத  அளவுக்கு அதிகமான வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுக்க வந்துகொண்டிருக்கின்றன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:52 am

டெல்டா அசோக்

இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுக்கவந்துகொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் "கப்பலோட்டிய தமிழன்', "வீரபாண்டிய கட்டபொம்மன்', "ராஜராஜ சோழன்' என நடிகர் சிவாஜி மட்டுமே குத்தகைக்கு எடுத்திருந்த கோலிவுட்டின் பயோபிக் வகைத் திரைப்படங்கள், இன்று இளம்தலைமுறைக் கலைஞர்களாலும் நடிக்கப்படுகின்றன.

தமிழ் மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் இதுதான் இன்றைய டிரெண்ட்டாகவும் இருக்கிறது.

நீண்ட நாள்களுக்கு ஏதோவொரு பெரும் ஆளுமையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த பயோபிக் படங்கள் தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை எனப் பல வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன.


மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையைப் படமாக்க முயற்சி நடக்கிறது. அதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டு வேலைகள் நடக்கின்றன. முழு திரைக்கதையைத் தயாரித்துவிட்டு மற்றவை பற்றி அடுத்து பார்க்கலாம் என்ற ஏற்பாட்டில் காரியங்கள் நடந்தேறுகின்றன. சின்ன வயது ஸ்டாலின் முதல் இப்போது இருக்கிற முதல்வர் வரை உருவ ஒற்றுமையில் மிகவும் சரியாக இருக்கிறவரை கண்டுபிடித்தும் விட்டனர். நான்கு இயக்குநர்கள் சேர்ந்து திரைக்கதையும் தயாராகி வருகிறது. மிகவும் முக்கியமான படமாக இருக்கவேண்டும் என்ற விதத்தில் அதிக அக்கறையோடு இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிட இயக்கப் பின்னணி அறிந்த ஒருவர் இயக்குநர் இதில் பின்புலமாக இருக்கிறார்.

சௌஹாளின் பயோபிக்

ப்ரித்விராஜ் செளஹானின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். அந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதிலிருந்து படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
ராஜஸ்தானின் குர்ஜார் இன மக்கள் டிசம்பர் மாதமே அஜ்மீரில் இதுகுறித்த போராட்டம் ஒன்றை நிகழ்த்தியிருக்கின்றனர். வரலாற்றுப் படமான ப்ரித்விராஜில் ராஜ்புத் குறித்த சொல்லாடல்களை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல், படத்தை வெளியிடுவதற்கு முன்னர், தங்கள் குழுவினருக்குப் படத்தைத் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்றும் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

தற்போது சமூக வலைதளங்களில் இதுகுறித்த ஹேஷ்டேக்குடன் ஆன்லைன் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் ப்ரித்விராஜை ராஜ்புத் வம்சத்தவராக படத்தில் காட்டியிருப்பதுதான் என்கிறார்கள்.

டைகர் நாகேஸ்வரராவ்

1970-களில் ஆந்திராவில் ஸ்டூவர்ட்புரம் என்ற இடத்தில் ராபின் ஹுட்டாக வாழ்ந்த டைகர் நாகேஸ்வர ராவ் என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தக் கதையை வம்சி கிருஷ்ணா எனும் இயக்குநர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக, பெல்லம்கொண்டா சுரேஷிடம் சொல்லி, அவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால், பல காரணங்களால் அந்தப் படம் ஆரம்பமாக தாமதமானது. அதனால், அந்த தயாரிப்பாளரிடமிருந்து வெளியே வந்து, ரவி தேஜாவிடம் சொல்லி ஓகே செய்துவிட்டார். இப்படம் "டைகர் நாகேஸ்வர ராவ்' என்ற பெயரில் பேன் இந்தியா படமாக பல மொழிகளில் உருவாகி வருகிறது.

கால்பந்தாட்ட வீரர் கதையில் கீர்த்தி

"மகாநடி' வெற்றிக்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தும் எதிலும் இணையாமல் இருந்த கீர்த்தி, போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வர, அதில் ஒப்பந்தமானார். இந்தப் படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான சையது அப்துல் இப்ராஹிம்மின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. "பதாய் ஹோ' பட இயக்குநர் அமித் ஷர்மா இயக்கும் இப்படத்திற்கு, "மைதான்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்திராவாக கங்கனா

இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் ஆளுமையான இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்படவுள்ள "எமர்ஜென்சி' எனும் படத்தில் கங்கனா நடிக்கிறார். ஜான்சி ராணியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "மணிகர்ணிகா' படத்தை தயாரித்த மணிகர்ணிகா பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் கங்கனா, இதற்காக பிரத்யேகமான வடிவமைப்புடன் மேக்கப் செய்ய லண்டன் சென்றுவந்துள்ளார்.

இந்தக் கதாபாத்திரத்துக்கான மேக்கப் மற்றும் வடிவமைப்பை டேவிட் மாலினோவாஸ்கி என்பவர் செய்கிறார். இவர் ஏற்கெனவே வின்ஸ்டன் சர்ச்சில் கதையை வைத்து எடுக்கப்பட்ட "டார்க் ஹவர்' படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதாலி ராஜ் வாழ்க்கை

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார் டாப்ஸி. ஜோத்பூரில் பிறந்த மிதாலி ராஜ், அதிக போட்டியில் விளையாடிய கிரிக்கெட் வீராங்கனை, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை உள்ளிட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங்கின் பயோபிக் வெளியானது. இந்தப் படத்துக்காக முறையான ஹாக்கி பயிற்சி மேற்கொண்டார் டாப்ஸி. அதே போல, மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்காக கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொள்ளவிருக்கிறார்.

பி.டி. உஷாவாக கத்ரீனா

மலையாளம், தமிழ்ப் படங்களை இயக்கும் ரேவதி வர்மா அண்மையில் மும்பைக்குச் சென்றிருக்கிறார். கத்ரீனா கைஃபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையைக் கூறியிருக்கிறார். கத்ரீனாவுக்கும் கதை பிடித்துவிட்டது. இதுபற்றிய அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

காத்ரீனா தற்போது சூர்யவன்ஷி படத்தில் நடித்து வருவதால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் பி.டி.உஷா பயோபிக்கில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்ரீனா நடிக்கும் முதல் பயோபிக் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.