3 பஞ்சாயத்துகள்!
இந்திய அளவில் முன்னணி இடங்களில் இருக்கும் மூன்று ஹீரோயின்கள் அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றனர்.


இந்திய அளவில் முன்னணி இடங்களில் இருக்கும் மூன்று ஹீரோயின்கள் அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றனர்.
"சபாஷ் மிது' படமும், டாப்ஸியின் பேச்சும்...
நடிகை டாப்ஸி "சபாஷ் மிது' என்ற படத்தின் பட்ஜெட்டை முன்னணி நடிகர்களின் சம்பளத்துடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சை கிளப்பியிருக்கிறார்.
"ஆடுகளம்', "ஆரம்பம்', "காஞ்சனா 2' போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த டாப்ஸி தெலுங்கு, மலையாளம், ஹிந்திப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது "சபாஷ் மிது' படத்தில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் பாத்திரமேற்று நடிக்கிறார். மிகப் பெரும் உடல் உழைப்பு, பயிற்சி என இப்படத்துக்காகத் தயாராகி ஆடுகளத்துக்கு வந்திருக்கிறார்.
இந்தப் படம் குறித்து ஒரு முந்தைய செய்தி-இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "சபாஷ் மிது'வின் முழு பட்ஜெட்டும் முன்னணி ஆண் நடிகர்களின் சம்பளத்தின் அளவே இருப்பதாகக் கூறியிருக்கிறார் டாப்ஸி.
"சபாஷ் மிது' படத்தில் நான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது என்னுடைய மிகப் பெரிய பட்ஜெட் படம். ஆனால் இன்னும் எனது முழு படத்தின் பட்ஜெட் ஒரு ஏ-லிஸ்டரின் (முன்னணி ஆண் நடிகர்கள்) சம்பளத்துக்குச் சமமாகத்தான் இருக்கிறது. இதற்கும் இந்தப் பட்டியலில் நான் உச்ச நடிகர்கள் யாரையும் சேர்க்கவில்லை'' என்று கூறியிருக்கிறார்.
இதன் மூலம் ஆண், பெண் சார்ந்த படங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியுள்ளார். ""நடிகைகளாகிய நாங்கள் இதுபோன்ற விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளோம். இந்த வேறுபாடுகளைக் களைய முயலும் சரியான திசையில் நாம் எல்லோரும் முன்னேறி வருகிறோம். இந்த மாற்றம் 10-12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால் நான் இங்கே உட்கார்ந்து இதுபோன்ற ஒரு பெண் நடிக்கும் படத்தை ஸ்பெஷலாக விளம்பரப்படுத்தியிருக்க மாட்டேன். இங்கே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் இதை மட்டும் வைத்து இங்கே சம உரிமை வந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது'' என்று அவர் பேசியுள்ளார்.
டாப்ஸியின் இந்தக் கருத்து பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியான பல படங்கள் பெண்களை மையமாகக் கொண்டிருந்தன. அந்த வரிசையில் "சபாஷ் மிது'வும் தற்பொழுது இணையவுள்ளது. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சாய் பல்லவியின் சர்ச்சை பேச்சும், பதிலும்...
இந்த நிலையில் அடுத்த சர்ச்சைக்குப் பதில் அளித்திருக்கிறார் சாய் பல்லவி. "விர்ட்டா ப்ரேவம்' படத்தின் ப்ரோமோஷன்போது சாய் பல்லவி "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் குறித்தும் பசுவை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் ஒருவர், கும்பலால் தாக்கப்பட்டது குறித்தும் பேசியிருந்தார். அவரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சாய் பல்லவி தன்னிலை விளக்கம் ஒன்றை விடியோவாகப் பதிவிட்டுள்ளார்.
அதில் பேசியிருப்பது... ""இதற்கு முன்பு நான் பேசியதற்கு விளக்கம் சொல்வது இதுவே முதல் முறை. நான் மனம் திறந்து பேசுவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கிறேன். என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம் என்கிற பயம் இருக்கிறது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, "நீங்கள் இடதுசாரியா? வலதுசாரியா?' என்பதே. நான் நடுநிலை என தெளிவாக நம்புவதாக சொன்னேன். நமது நம்பிக்கையின் பொருட்டு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு முன்பு நாம் நல்ல மனிதராக இருப்பது தான் முக்கியம் எனச் சொன்னேன்.
அந்தப் பேட்டியில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன். இரண்டும் அந்தந்த நேரத்தில் என்னை அதிகம் பாதித்த விஷயங்கள். பல நாள்கள் அவற்றின் தாக்கம் என்னிடம் இருந்தது. "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் பார்த்து விட்டு அந்த இயக்குநரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது."மேலும் "அந்தப் படம் என்னை மிகவும் தொந்தரவுக்கு உள்ளாக்கியது என்பதை அவரிடம் சொன்னேன். காஷ்மீரில் நடந்த இனப்படுகொலையை அதுவும் தலைமுறைகள் தாண்டி பாதிப்பை உணரும் ஒன்றை நான் சிறுமைப்படுத்தவில்லை.
அதே போல கரோனா நேரத்தில் நடந்த கும்பல் படுகொலை சம்பவத்தை ஒரு போதும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த விடியோ பார்த்தது என்னைப் பல நாள்கள் உலுக்கியது. வன்முறை எந்தக் காரணத்தினால் நிகழ்ந்தாலும், எந்த மதத்தின் பெயரால் நிகழ்ந்தாலும் அது மிகப்பெரிய பாவம். இவை தான் நான் சொல்ல விரும்பியது. இன்றைக்கு சமூக வலைதளங்களில் பலர் கும்பல் படுகொலையை ஆதரித்து பேசுவதைப் பார்க்க முடிகிறது. யாருக்குமே ஒருவரின் உயிரை எடுப்பதற்கு உரிமை கிடையாது. மருத்துவம் படித்தவள் என்கிற பின்புலத்தில் இருந்து பார்க்கும்போது எல்லா உயிரும் சமம் தான். எல்லா உயிரும் முக்கியம் தான்." என விளக்கம் அளித்துள்ளார் சாய் பல்லவி.
விவகாரத்தும், சமந்தாவின் காட்டமும்...
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்து பல வதந்திகள் உலவின. அப்படியான வதந்தி ஒன்றுக்கு சமந்தா தற்போது காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
விவாகரத்துக்குப் பிறகு பெரும்பாலும் சமந்தா தனது கடந்தகால வாழ்க்கைக் குறித்து பேசுவதைத் தவிர்த்து வந்தார். சமந்தா - நாக சைதன்யா இருவரும் பரஸ்பரம் பிரியவிருக்கும் முடிவை தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இவர்களின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் உலவின. அப்படியான வதந்தி ஒன்றுக்கு சமந்தா தற்போது காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
சமந்தாதான் இருவரின் விவாகரத்துக்குக் காரணம் எனவும், நாக சைதன்யா இப்போது வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகப் பரவும் வதந்திக்கு சமந்தாவின் பி.ஆர். டீம்தான் காரணம் எனவும் எழுதப்பட்டிருக்கும் செய்தி ஒன்றின் லிங்கைப் பகிர்ந்து "போய் பிள்ளை குட்டியைப் படிக்க வைங்க' என்கிற ரீதியில் அவர் அளித்திருக்கிற பதில் இதோ...... அதில், "பெண்கள் மீதான வதந்திகள் என்றால் அது உண்மையாக இருக்கும். ஆண்கள் மீதான வதந்திகள் என்றால் அது பெண்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.
சம்பந்தப்பட்டவர்களே இதனைக் கடந்து சென்றுவிட்டனர். நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் பணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். கடந்து போங்கள்'' எனப் பதிவிட்டு இருக்கிறார்.
இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். சமந்தாவின் நடிப்பில் தமிழில் சமீபத்தில் "காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வெளியானது. அவர் தற்போது "சாகுந்தலம்', "யசோதா', பாலிவுட் தொடர் என தொடர்ந்து நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...