வகுப்பறைச் சுவரில் வண்ண ஓவியங்கள்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னார்வத்தோடு, தனது கைவண்ணத்திலேயே வகுப்பறை முழுவதும் பாடங்களைச் சித்திரிக்கும் காட்சிகளை அமைத்தும், பல வண்ண


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னார்வத்தோடு, தனது கைவண்ணத்திலேயே வகுப்பறை முழுவதும் பாடங்களைச் சித்திரிக்கும் காட்சிகளை அமைத்தும், பல வண்ண ஓவியங்களைத் தீட்டியும், மாணவ-மாணவியர் விரும்பும் முறையில் கற்பித்து வருகிறார். இதுமட்டுமின்றி, "துளி' என்ற இயக்கத்தைத் தொடங்கி பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி வருகிறார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரை சேர்ந்தவர் இராஜசேகரன். 2012- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17- ஆம் தேதி, வாழப்பாடி ஒன்றியம் புழுதிக்குட்டை ஊராட்சியிலுள்ள அருநூற்றுமலை அடிவாரம் கண்கட்டி ஆலா மலை கிராமத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
பாழடைந்து கிடந்த இப்பள்ளியை இவர் தனது கைவண்ணத்தால் பல வண்ண ஓவியங்களை வரைந்து பளபளக்க வைத்தது, மாணவ-மாணவியர் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராம மக்களின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் 2018 ஜூன் மாதம் 20 - ஆம் தேதி சந்திரபிள்ளை வலசு ஊராட்சி அரசன்குட்டை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று வந்தார். குறுகிய இடத்தில் ஒரே கட்டடத்திற்குள் இயங்கும் இப்பள்ளிக்கு சென்றதும், கிராமத்திலுள்ள வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்துப் பேசி, தனியார் பள்ளிக்கு அனுப்பிய குழந்தைகளை அரசன்குட்டை அரசுப்பள்ளிக்கு அனுப்ப வைத்தார். இவரது முயற்சியால் இப்பள்ளி மாணவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
இந்தப் பள்ளியிலும் தனது மாணவ-மாணவியரை மகிழ்ச்சியாக கற்க வைக்கும் நோக்கில், வகுப்பறை முழுவதும் வண்ணப் படங்களை முப்பரிமாண முறையில் உருவாக்கி காட்சிப்படுத்தியுள்ளார். ஓவியக்கலை மீது கொண்ட ஆர்வத்தால் தனது கை வண்ணத்திலேயே பாடங்களைச் சித்திரிக்கும் பல வண்ண ஓவியங்களை வரைந்து மாணவ-மாணவியர் விரும்பி கற்க ஊக்கப்படுத்தி வருகிறார்.
இதுமட்டுமின்றி, பெற்றோரை இழந்த ஆதரவற்ற அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு உதவிடும் நோக்கில் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து "துளி' என்ற தன்னார்வ இயக்கத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். இவரது இந்த புதிய முயற்சிக்கு ஓரிரு மாதங்களிலேயே 200 -க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளனர்.
"சிறு துளி பெருவெள்ளம்' என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் விதத்தில், மாதந்தோறும் துளி இயக்க உறுப்பினர்கள் தலா ரூ.100 வீதம் கொடுக்கும் சிறு தொகையைச் சேமித்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான எழுது பொருட்கள், ஆடைகள், ஆங்கில அகராதி, திருக்குறள் தெளிவுரை ஆகியவற்றை வழங்கி கல்வி பயில ஊக்கப்படுத்தி வருகிறார்.
அரசுபள்ளி குழந்தைகள் மீதான இவரது ஆர்வத்தை கண்ட கிராம மக்கள், பள்ளிக்கு எல்.இ.டி. தொலைக்காட்சி பெட்டியைப் பரிசாக வழங்கினர். இத்தோடு தனது பங்களிப்பில் நவீன பிரிண்டர், லேமினேஷன் கருவிகளையும் வாங்கி பள்ளியில் வைத்து தொடக்கப்பள்ளி மாணவ-மாணவியருக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் நவீனமுறையில் கற்பித்து வருகிறார். தரமான கல்வியோடு மனநிறைவான சேவையும் ஆற்றிவரும் ஆசிரியர் இராஜசேகரனுக்கு, பெற்றோர்கள், கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
""குடும்பச் சூழலால் சிறு வயதிலேயே தந்தையைப் பிரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால், வைராக்கியத்தோடு போராடி அரசுபள்ளி ஆசிரியரானேன். என்னால் முடிந்த அளவிற்கு மாணவ-மாணவியருக்கு தரமான கல்வியைக் கற்பித்து வருகிறேன். ஓவியக்கலை மீது எனக்குள்ள ஆர்வத்தால் வகுப்பறைகளை வண்ணம் தீட்டி பாடங்களைச் சித்திரிக்கும் முப்பரிமாண காட்சிகளை அமைத்தும், ஓவியங்களையும் வரைந்துள்ளேன். இது மாணவர்கள் ஆர்வத்தோடு பயில்வதற்கு தூண்டுகோலாக இருக்கிறது'' என்கிறார் இராஜசேகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...