வாயின் சுத்தத்திற்கும் ஜீரணத்திற்கும் உதவும் அதன் சாறு, உமிழ்நீர் சுரப்பையும் கட்டுப்படுத்தும். கும்பகோணம் பகுதியில் கிடைக்கும் வெற்றிலை நல்ல தளிராகவும், ருசியாகவும் இருக்கும். கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதா வெற்றிலை என பல வகைகள் உண்டு. சுவையில் காரம், கசப்பு, துவர்ப்பு, சூடான வீரியம் ஆகியவற்றைப் பெற சிறந்த வழி - சுண்ணாம்பு தடவாத வெற்றிலையை முதலில் மென்று உடனே, சுண்ணாம்பு தடவிய வெற்றிலையை பாக்குடன் மெல்ல வேண்டும். மூன்றையும் ஒன்றாக மெல்லும் போது உமிழ்நீர் கலந்து முதலில் வரும் கடும் சுவையுள்ள சாற்றைத் துப்பி விட்டுப் பின்னர் ஊறும் நீரைச் சுவைத்தல் நல்லது. முதல் நீர் நஞ்சு, இரண்டாவது பித்த சூட்டை அதிகமாக்கும், மூன்றாவது அமுதம், நான்காவது மிகவும் இனிக்கும், நல்லதே என சூட்சுமமறிந்தவர் கூறுவர். சிட்டிகை வால் மிளகு, சுக்குத்தூள் கிராம்பு, ஏலம், ஜாதிக்காய் சேர்த்துச் சாப்பிட, நறுமணம் மட்டுமல்ல, வைரஸ்களையும், கிருமிகளையும் எதிர்த்துப் போராடும். ஆனால் வெற்றிலையை எப்போதும் காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிய பின் பயன்படுத்த வேண்டும். 2 முதல் 4 வெற்றிலை சாப்பிட்டால் போதும்.