ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சாப்பிடுவது எப்படி?
வீட்டிலேயே இருப்பதால் நான் நிறையச் சாப்பிடுகிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறேன்.


வீட்டிலேயே இருப்பதால் நான் நிறையச் சாப்பிடுகிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறேன். இதனால் என் வயிறு பாழாகி வாயு சேர்வதும், உப்புசமும், ஏப்பமும் ஏற்பட்டு பெறும் அவதியாக இருக்கிறது. நான் எப்படி உணவை அமைத்துக் கொள்ள வேண்டும்?
-ஞானசேகரன், காஞ்சிபுரம்
வீட்டிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தம் உள்ள இந்நாட்களில், காலைச் சிற்றுண்டியைத் தவிர்த்து காலையில் 10 - 10 : 30 மணிக்கு ஓர் உணவையும் , இரவு 7 - 7 : 30 மணிக்கு ஓர் உணவையும் சாப்பிடும் விதம் அமைத்துக் கொண்டால், வீட்டில் சமையல் செய்யும் பெண்களுக்கு வேலைப்பளு குறைவும். அதிகநேரம் நின்று சமைக்க வேண்டிய சிரமம் குறைவதாலும் உண்ட உணவிற்கு செரிமானம் ஆவதற்கான கால அவகாசம் நிறையகிடைப்பதாலும், வீட்டிலுள்ள அனைவருக்கும் ஆரோக்கியமானது நிலைத்திருக்கும்.
வீட்டிலுள்ளவர் அனைவரும் சேர்ந்து தரையிலமர்ந்து மன மகிழ்ச்சியுடனும், ஒருவருக்கு ஒருவர்
பரிமாறிக் கொண்டும் நிறைவோடும் உணவைச் சாப்பிட வேண்டிய இந்நாட்களில், பிறர் மனம் வருந்தும்படி பேசாமல் இருப்பதையும், கோபத்தைத் தவிர்ப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும். உணவு நன்கு செரித்து
உடலுக்கு முழு ஆரோக்கியப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் ஒன்பது கட்டளைகளை ஆயுர்வேதம் முன்னிறுத்துகிறது.
மலம் - சிறுநீர் எனும் இயற்கை உந்துதல் மதிக்கப்பட்டு அவை முழுவதும் வெளியேறிய பிறகு உண்ணுதல்.
அதனால் மேல்வயிற்றில் உள்ள இறுக்கம் அழுத்தம் உப்புசம் முதலியவை தளர்ந்து இதயப்பகுதியில் அழுத்தம் குறைவதால் இதய இயக்கம் தெளிவாக நடக்கும்.
வயிற்றில் காற்றோட்டம் தடையின்றி நடைபெறும். உணவேற்றதும் தொண்டை, நாக்கு முதலிய இடங்களில் ஏற்பட்டிருந்த பிசு பிசுப்பு பூச்சு மறைந்திருக்கும்.
ஏப்பம் சுத்தமாக வரும். புளிப்புவாடை, எதுக்களிப்பு இருக்காது.
பசி சிறுக சிறுக வலிவடையும்.
வயிற்றில் காற்று எதிர்த்து வராமல் கீழ்நோக்கில் வெளியாகும். எதிர்த்து வந்தால் சிறு குடலில் உணவு செரிக்காமல் தடையாக நிற்பதென உணரலாம்.
வயிற்றில் உணவு சேர்ந்தால் ஜீரணமாகிவிடும் என்ற நம்பிக்கை தரும்படி ஜீரணச் சுரப்பு உணரப்படும்.
கண், காது, மூக்கு முதலிய பொறிகள் தெளிந்து நிற்கும்.
உடல் லேசாகி இருக்கும். இதுவே உணவருந்த தக்க நேரம்.
உணவை அளவுடன் உட் கொண்டதற்கான ஒன்பது அறிகுறிகளை சரகர் எனும் முனிவர் நம் கவனத்திற்குக் கொணர்கிறார்.
உணவால் உள் அழுத்தத்திற்கு வயிறு உள்ளாகாதவாறு அமைதல்
இதயத்திற்கும் இரைப்பைக்கும் இடையே திரை போன்று அமைந்துள்ள மஹாபிராசீர தசை (டயாஃப்ராம்) இரைப்பையின் நிறைவு அழுத்தத்தால் விம்மிப் புடைத்து மேலுள்ள இதயத்தை அழுத்தாதிருத்தல்.
விலாப்புறம் புடைக்காதிருத்தல். விலாப்புறம் அழுந்தப் பெற்றால் சுவாசகோசமும், கல்லீரலும், மண்ணீரலும் செயலிழக்க நேரிடும்.
வயிறு அதிகம் கனக்காதிருத்தல்
பெருமூச்சும் களைப்பும் காரணமாக நடை முதலியவற்றில் வயிற்று கனம் சிரமத்தைத் தரும்.
கண் முதலியவை பூரிப்பு பெறுதல். அதிக உணவேற்றல் அவை சோர்வின் விளைவாகத் தாமும் சோர்வடையும். தூக்கம், சோம்பல், மெத்தனம் முதலியவை ஏற்படும். அளவில் குறைந்தால் புலன்கள் தெளிவுபெறுவதில்லை.
பசியும் தாகமும் அடங்குதல்
பசியைத் தூண்டி உணவை ஏற்க வைத்த உணர்ச்சிகள் பூர்ண உணவு கிடைத்ததால் அடங்கிவிடுகின்றன. கனத்த உணவு நிறைய உண்பதால் பசி அடங்கினாலும் நாவறட்சி மிகுந்து அடிக்கடி நீர் பருகத் தூண்டுவதும்
நீர்பருக இடமின்றிச் சிரமப்படுவதும் உண்டு. அதனால் நாவறட்சியைத் தூண்டவல்ல வறண்ட கனத்த உணவை அளவிற்கு மீறி உண்ணலாகாது.
நிற்பது, உட்கார்வது, படுப்பது, நடப்பது, மூச்சை
உள் இழுப்பதும் விடுவதும், சிரிப்பது, அரட்டை முதலியவை சிரமமின்றி சுகமாகத் தொடர்ந்து செய்யமுடிவது. வயிறுமுட்ட உண்பதால் மூச்சுத்திணறுவதும், பேசவும் சிரிக்கவும் சிரமப்படுவதும் கண்கூடு.
காலையில் உண்ட உணவு மாலை செரித்துவிடுவதும், மாலை உண்ட உணவு மறுநாள் காலையில் செரித்துவிடுவதும் நேர்ந்தால், உணவு சரியான அளவில்
உட்கொண்டதாகக் கொள்ளலாம்.
வலிவும், நிறப்பொலிவும், உடல் வளர்ச்சியும் சீராக அமைவது.
இவை அளவோடு உண்டதற்கான அறிகுறிகளாகும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...