ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஞானமும் உழைப்பும் கொண்ட நிறைவாழ்வு!:

நிர்வாகிகளில் ஒரு கல்வியாளர், கல்வியாளர்களில் ஒரு நிர்வாகி என்ற இரட்டை பெருமைக்குரியவராகத் திகழ்ந்தவர் சை.வே. சிட்டிபாபு. இரண்டு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக இருந்து சிறப்பாகப்

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:22 pm

நல்லி குப்புசாமி செட்டி

நிர்வாகிகளில் ஒரு கல்வியாளர், கல்வியாளர்களில் ஒரு நிர்வாகி என்ற இரட்டை பெருமைக்குரியவராகத் திகழ்ந்தவர் சை.வே. சிட்டிபாபு. இரண்டு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர். எனக்கு 40 ஆண்டு காலத்திற்கு மேலாக பழக்கத்தில் இருந்த பெரியவர். சமீபத்தில் அவரது நூறாவது பிறந்த நாள் விழாவிற்கு மேத்தா நகரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று வணங்கி ஆசிர்வாதம் பெற்றேன். அன்று அவரது முன்னாள் சகாக்கள், நண்பர்கள், வெவ்வேறு துறையின் முக்கியஸ்தர்கள் என்று பலர் அவரைக் காண வந்திருந்தார்கள். நூறு வயது முதுமை  தெரியாமல் எல்லோரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்களையும் அடையாளம் கண்டுகொண்டு பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். வயது 100 என்பதனால் அவர் எந்த விதத்திலும் தொய்ந்து போய் விடவில்லை. 

கால்கள் வலுவிழந்தமையால் வெளியே செல்லும் போது சில வருடங்களாக சக்கர நாற்காலியில் சென்று வந்தார். 

சிட்டிபாபு அவர்களை நான் முதன்முதலில் சந்தித்தது 1979 என்று நினைக்கிறேன். அப்போது "மதுவிலக்கு ஆதரவு சங்கம்' ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்த அவர் அன்று அரங்கத்தில் அருமையாகப் பேசினார். மேடையை விட்டு இறங்கிய  பிறகு கொஞ்ச நேரம் நான் அவருடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் சரித்திரப் பாடத்தில் எம்.ஏ பட்டம் பெற்றவர் என்பதை அறிந்தேன். சரித்திரம் எனக்கு விருப்பப் பாடம் என்பதனால் அவர் மீது ஒரு தனி அபிமானம் பிறந்தது. பிற்காலத்தில் அவர் தமிழ்நாட்டில் "வரலாற்றுப் பேரவை' என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் பிறகு சென்னையில் அவர் கலந்து கொண்ட கூட்டங்களில் அவர் பேசுவதைக் கேட்பதற்காகவே சென்றிருக்கிறேன். அவரும் நான் ஏற்பாடு செய்த விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறார். 

சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இலக்கிய விருது வழங்கப்பட்ட போது அந்த விழாவிற்கு அவர் சக்கர நாற்காலியில் வந்து வாழ்த்தினார். அரங்கத்தில் அவர் சக்கர நாற்காலியில் நுழைந்த போது அந்த நாற்காலியை தள்ளிக் கொண்டு வந்த உதவியாளரை நகரச் சொல்லிவிட்டு ஒரு முன்னாள் கல்லூரி முதல்வர், "" நான்தான் அந்த சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வருவேன். இவர் என் ஆசான்'' என்று உரிமைகோரினார். இப்படி அவர் மீது மரியாதையும் அபிமானமும் கொண்டிருந்த பலர் கல்வித் துறையில் இருந்திருக்கிறார்கள். 

நல்லி கடையின் வாடிக்கையாளர்களில் சிட்டிபாபுவும் ஒருவர். அந்த முறையிலும் அவர் சில சமயம் எங்கள் கடைக்கு வருவார். அவரது மகளோ பிற உறவினர்களோ ஜவுளியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் எங்கள் கடையின் உள் அறையில் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார். எவ்வளவோ பொது விஷயங்கள் பற்றி பேசியிருக்கிறோம். தன் கருத்தை அவர் நயமாக எடுத்துச் சொல்வார். அதில் யார் மீதும் அவருக்கு கோபமோ வெறுப்போ இருந்ததில்லை. கல்வித்துறையின் போக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். உயர் கல்வி, பெண்கள் கல்வி போன்ற பல துறைகளில் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவில் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணியை ஒருங்கிணைக்க, மேற்பார்வையிட "மாநில உயர்கல்வி மாமன்றம்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டபோது அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார்.  ஒரு "ஃபுல் பிரைட் ஸ்காலர்' என்ற முறையில் அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர். அமெரிக்க கல்வி நிலையங்களுடன் தொடர்பில் இருந்தவர். 

பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமாக 1977- இல் அவர் தலைமையிலான ஒரு கமிட்டி தன் அறிக்கையை பொது அரங்கில் சமர்ப்பித்தது. அதில் அவர் ஒரு முக்கியமான சீர்திருத்தத்தைச் சொல்லியிருந்தார். அது அப்போது ஒரு புதுமை. அதாவது பெண்களுக்கு பேறு கால விடுப்பு கொடுப்பது போல் குழந்தை பிறந்த பிறகு ஆண்களுக்கு பதினைந்து நாட்கள் "பெட்டார்னிட்டி' லீவ் என்று விடுப்புத் தரவேண்டும் என்று யோசனை சொல்லியிருந்தார். இது அப்போது வரவேற்கப்பட்டது. அதன்பிறகு அப்படிப்பட்ட ஒரு விடுப்பை பிற துறைகள் யோசிக்கத் தொடங்கினர். 

மேடையில் பேசும் போது குறிப்புகள் எதுவும் வைத்துக் கொள்ளாமல் வெகு இயல்பாக மெலிதான நகைச் சுவையுடன் பேசக் கூடியவர். இவர் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர். இரண்டு மொழிகளிலும் நன்றாகப் பேசுவார், எழுதுவார். ஒரு முறை இவர் எங்கள் கடைக்கு வந்திருந்த போது இவருக்கு நன்கு பழக்கமான அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான ஒரு முன்னாள் 

கல்லூரி முதல்வரும், பின்னாள் பத்திரிகையாளருமான நண்பர் வந்து சேர்ந்தார். இருவரும் சில நிமிடங்கள் பழைய விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். 

அப்போது நான் சிட்டிபாபுவைப் பார்த்துக் கேட்டேன், “""ஐயா இதோ வந்திருக்கிறாரே இவர் உங்களைப் போலவே ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் வல்லவர், இரண்டு மொழிகளையும் பேசும் போதும் எழுதும் போதும் நன்றாக கையாளுவார். இந்த இருமொழி திறமை உங்களுக்கு எப்படி வாய்த்தது?''” என்று இவரைக் கேட்டேன். அப்போது அவர், “""நான் பேராசிரியர் சரவண ஆறுமுக முதலியாரின் மாணவர்''  என்றார்.  ""நீங்களும் அப்படி இரண்டு மொழிகளில் வல்லவராக இருப்பதற்கு யார் காரணம்?'' என்று கேட்டேன். அப்போது சிட்டிபாபு சொன்னார்: “""நானும் சரவண ஆறுமுக முதலியாரின் மாணவன்''” என்று.  உடனே நண்பர் அவரைப் பார்த்துக் கேட்டார். “""ஐயா நீங்கள் என் தந்தையை விட ஒரு வயது பெரியவர்,  எப்படி நாம் இருவரும் ஒரே ஆசிரியரின் மாணவர்களாக இருந்தோம்?''

அதற்கு சிட்டிபாபு , ""கல்வித் துறை நிர்வாகப்பணியில் சேர்ந்த நான் மேற்கொண்டு அதே துறையில் தொடர வேண்டுமென்றால் ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசாங்கம் விதிமுறை சொன்னது. எனவே என் 32-வது வயதில் ஒரு வருட  காலம் விடுமுறை எடுத்துக்கொண்டு 1951-52 -ஆம் வருடத்தில் சைதாபேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தேன். அங்கு சரவண ஆறுமுக முதலியார் என் பேராசிரியர்.  நன்றாக தமிழ்ப் பாடம் நடத்துவார். அதே நேரம் ஆங்கிலேயர் போல ஆங்கிலத்தில் பேசுவார். "தமிழ் மொழி கற்பிப்பது எப்படி?' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அந்த அளவிற்கு பெரிய இருமொழி அறிஞர் அவர். அவரால் ஆங்கில மீடியம் மூலம் தமிழ் கற்பிக்க முடியும். சைதாபேட்டை கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் படித்த பழனி 

கல்லூரியில் முதல்வரானார்''” என்று  விளக்கம் கொடுத்தார். 

தலைமுறைகளைத் தாண்டி ஒரு நல்லாசிரியரின் முத்திரை மாணவர்களின் மீது எப்படி ஆழமாகப் பதிகிறது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன். 
கல்வித்துறையில் இயக்குநராக இருந்து பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற இரண்டு களங்களையும் நன்கு அறிந்திருந்த இவர்,  மதுரை பல்கலைக்கழகத்தில் 1975 -இல் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். இவருக்கு முன்பு துணைவேந்தராக இருந்த தெ.பொ. மீனாட்சி சுந்தரம்  மொழியியல் அறிஞர். மு. வரதராசனார்  இலக்கிய அறிஞர். மதுரை பல்கலைக்கழகத்தின் மூன்றாவது துணைவேந்தராகப் பொறுப்பேற்ற இவர், கல்வித்துறையில் நிர்வாக அனுபவம் பெற்றவர். எனவே மிகச் சிறப்பாக பல்கலைக்கழகத்தை நடத்தினார். கல்லூரி முதல்வர்கள் நியமனம் தொடர்பாக புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தினார். சிறிய கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கை மற்றும் டெபாசிட் பணம் விஷயத்தில் சில நிபந்தனைகளைத் தளர்த்தினார். அதன் பிறகு சென்னைக்குத் திரும்பினார். அந்தக் காலகட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 22 கோரிக்கைகளை வற்புறுத்தி ஆசிரிய சங்கம் போராட்டம் நடத்தியது. அப்போதைய துணைவேந்தர் பி.எஸ். சோமசுந்தரம் பதவி விலகினார். 

பதிவாளர் கெளரி சங்கர் பதவி விலகினார். ஐசிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுப் பெற்ற எஸ்.ஆர். கெய்வார் இடைக்கால துணைவேந்தராகப் பொறுப்பில் இருந்தார். நிலைமையை சீர்திருத்தி பல்கலைக்கழகத்தை சீரான முறையில் நடத்துவதற்கு துணைவேந்தராகப் பொறுப்பேற்க அழைக்கப்பட்டவர் சிட்டிபாபு. அப்போது அவர் அங்கே சில சீர்திருத்தங்களைச் செய்தார். பட்டப்படிப்பு வகுப்புகளை எல்லாம் மூடச் செய்தார். அரசாங்கத்துடன் இவருக்கு நல்ல இணக்கம் இருந்ததால் சிதம்பரத்திற்கு அருகில் ஓர்  அரசு கலைக் கல்லூரியைத் தொடங்கச் செய்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் அங்கே மாற்றப்பட்டார்கள். நிர்வாகத்தின் சார்பாக இவர் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை சில நிபந்தனைகளுடன் ஏற்றார். பல்கலைக்கழகம் மீண்டும் இயல்பான நிலைக்கு திரும்பியது. அப்போது நிர்வாகம் ஒரு மருத்துவக் கல்லூரியை தொடங்க விரும்பியது. அதற்குப் பல துறைகளின் அனுமதியைப் பெற்றுத் தந்தார் இவர். முடிவில் ஒரு பிரச்னை எழுந்தது. மருத்துவ கல்லூரியுடன் இணைந்ததாக  ஒரு பெரிய மருத்துவமனை இருக்கவேண்டும் என்பது ஒரு விதி. சிதம்பரம் அரசு மருத்துவமனை அவ்வளவு பெரிதானதல்ல;  எனவே இவர் தன் பத்திரிகையாளர் நண்பருடன் தொடர்பு  கொண்டு நெய்வேலி லிக்நைட் கார்பரேஷனின் மருத்துவமனையை இந்த மருத்துவ கல்லூரிக்கு இணைப்பாகச் சேர்த்தார். இது அவரது பொது ஜனத் தொடர்பை எல்லாருக்கும் உணர்த்தியது.  தன் பதவிக் காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எந்த வேலை நிறுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டார். வயது வரம்பு இல்லாமல் ஒருவர் துணைவேந்தராக இருக்கலாம் என்ற படி சட்டம் இருந்தால் இவர் வாழ்நாள் துணைவேந்தராக இருந்திருக்க வேண்டியவர்.  

பின்னர் சில பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேர்வுக் குழு தலைவராக இருந்திருக்கிறார். உயர்கல்வி தொடர்பான கமிட்டிகளில் உறுப்பினராக இருந்திருக்கிறார். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு ஓர் ஆசிரியர் தினத்தன்று அவரைச் சந்திக்க விரும்பினேன். எதிர்பாராத விதமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அன்று செல்லமுடியவில்லை. என் நண்பரை அனுப்பினேன். அவர் மாலை 7 மணிக்கு தன்னுடன் இரண்டு பேரை அழைத்துக் கொண்டு சிட்டிபாபுவை காணச் சென்றிருக்கிறார். அந்த நேரம் அவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து 
ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் என்று நண்பர் நினைத்தார் அதற்கு மாறாக அவர் தன் வீட்டில் முதல் மாடியில் உள்ள நீண்ட கூடத்தின் ஒரு மூலையில் பெரிய மேஜை மீது சில புத்தகங்கள் மற்றும் காகித கோப்புகளை அடுக்கி வைத்துக் கொண்டு மேஜை விளக்கு ஒளியில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். நண்பர் அவரைக் கால்தொட்டு வணங்கி, “""இன்னமும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறீர்களே'' என்று நண்பர் கேட்டார்.  அதற்கு அவர், ""அரசாங்கம் உயர்கல்வி சீர்திருத்தம் தொடர்பாக ஓர் அறிக்கை கேட்டிருக்கிறது;  அதைத்  தயாரித்துக் கொண்டிருக்கிறேன்'' ” என்றார். இந்த சந்திப்பின் போது அவரது வயது 97. அதன் பிறகும் இரண்டு முறை எங்கள் கடைக்கு வந்திருக்கிறார். சென்ற வருடம் தன் உறவினருடன் ஜவுளி எடுக்க வந்திருக்கும் போது அவருக்கு வயது 99.  எப்போதும் போல் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதையடுத்து சென்ற வருடம் அவரது 100- ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டு ஆசிர்வாதம் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இப்போது அவர் அமரர் ஆகிவிட்டார். எத்தனையோ பழைய சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறேன் ஒவ்வொரு சம்பவமும் இவருக்கு நிகரானவர் இவரே என்பதை ஒவ்வொரு சம்பவமும் உணர்த்தியிருக்கிறது. அதற்கு காரணம் இவரது ஞானமும், சலியாத உழைப்பும். நிறைவாழ்வு வாழ்ந்த அந்த மாமனிதருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.