நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சிதிலமடைந்த கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது மேலத்தானியம் என்ற ஊர்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 8:07 am

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது மேலத்தானியம் என்ற ஊர். மேலத்தானியம் ஊரின் தெற்கிலுள்ள ஆங்கரா கண்மாயில் பெருங்கற்கால பண்பாட்டுச் சின்னங்களான குரங்கு பட்டறைகள் காணப்படுவதால் மேலத்தானியம் ஊர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஊர் எனக் கருதலாம். இன்றைக்கு தானியம் என்ற பெயருடன் அடுத்தடுத்து இரு ஊர்கள் ஒரே பெயரில் உள்ளதால் மேற்கில் அமைந்துள்ள ஊர் மேலத்தானியம் என்ற பெயரில் வழங்கி வருகிறது. மேலத்தானியம் ஊரினை ஒட்டி வடகிழக்கு மூலையில் ஸ்ரீஅகத்தீசுவரர்-செளந்தரநாயகி அம்மன் என்ற சிவன் கோயில் உள்ளது. மேற்படி அகத்தீசுவரர் சுவாமி கோயில், அம்மன் கோயில் ஆகியவை

கிழக்கு பார்த்த நிலையில், கருங்கல்லால் கட்டப்பட்ட கருவறை தனித் தனி கோயிலாகவும் உள்ளது இது போல மூலப்பிள்ளையார், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய பரிவாரத் தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகளும் இருக்கின்றன. கருவறையில் விமானமோ, முகப்பில் இராஜகோபுரமோ, கோயிலைச் சுற்றி மதில் சுவரோ எதுவுமே இல்லாத கோயிலாகக் காணப்படுகிறது. சுவாமி கோயிலில் உள்ள கல்வெட்டுகள் காலத்தால் முற்பட்ட கல்வெட்டாக அதாவது முதலாம் இராஜராஜனின் 30-ஆம்ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்கள் இங்கே காணப்படுவதால் அகத்தீசுவரர் கோயிலின் சுவாமி கோயில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால கற்றளியாகக் இருக்கும் என கருதலாம்.  மேலத்தானியம் என்ற ஊரினை மக்கள் வேளாண்மை விளை பொருளான தானியம் என்ற சொல்லின் அடிப்படையில் இன்றைக்கு அழைத்து வந்தாலும் மேலத்தானியம் சிவன் கோயில் கல்வெட்டுகளில் மேல்தணியத்து என்ற சொல்லடவுக்கு அடுத்ததுள்ள "ண' "இ'கர குறியீடு பெற்று தணியம் என்றும் தணியம் என்னு இரு ஊர்களில் ஒன்றாக மேற்கில் அமைந்த ஊர் மேல்த்தணியம் என வழங்கி வருகிறது.

அகத்தீசுவரர் என்ற குறுமுனி வடநாடு விட்டு தென்னாடு வந்து பொதிகை மலையில் தங்கி தமிழ் வளர்த்தார். என்ற புராண செய்தியின் அடிப்படையில் அகத்தியர் மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே இவருடைய பெயரால் அகத்தீசுவரர் என்று கோயில்கள் ஏற்படுத்தப்பட்டது போல மேலத்தணியத்திலும் இது போன்ற பெயரால் கோயில் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இங்குள்ள கோயிலைச்சுற்றி நந்திக்கு சிறிய மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் தெளவை என்றும், இடைக்காலத்தில் கேட்டை, சேட்டை என்றும் வழங்கப் பெற்ற தமிழரின் தனித்தெய்வமான சேஸ்டா தெய்வம் வெட்ட வெளியில் கோயிலின் வடமேற்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய அங்கங்களைக் கொண்டவையாகவும் இருக்கின்றன. 

செளந்தரநாயகி அம்மன் கோயில் கி.பி.13ஆம் நூற்றாண்டு கட்டட அமைப்பைக் கொண்டதாகவும், வர்க்க வேலைப்பாடுகள் இல்லாது சாதாரண முறையில் கட்டப்பட்டுள்ளது. முதலாம் இராஜராஜனின் 30-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் அகத்தீசுவரமுடைய நாயனாற்கு மகாபிரதாணி தெண்நாயக்கர் என்பவர் ஏதோ தர்மம் செய்ததை குறிப்பதற்காக வெட்டப்பட்ட கல்வெட்டு, முற்றுப்பெறாததால் முழுச்செய்தியையும் அறிய முடியவில்லை. மேலத்தணியத்துள்ள அம்மன் கோயிலுள்ள மற்றொரு கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு அதில் "உறத்தூர் கூற்றத்து தளக்கா உடையான்' என்பவர் வண்ணான் குளத்து வயலில் நிலக்கொடை கொடுத்தமையைத் தெரிவிக்கிறது. மேற்படி அம்மன் கோயிலுள்ள எம்மண்டலமுங் கொண்ட குலசேகரின் கல்வெட்டு கொட்டிநாயக்கர் மேற்படி கோயிலில் அமுது படைக்க நிலக்கொடை கொடுத்தமையைத் தெரிவிக்கிறது. மேலத்தணியம் ஊரணிக் கரையில் நடப்பட்டிருக்கும் எம்மண்டலமுங் கொண்ட குலசேகரன் 18-ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டில் வேம்பனூர் தென்கடை நீரினை அப்பகுதி நாட்டவரும் கிராமங்களும் உடைப்பு அடைத்ததைத் தெரிவிக்கிறது. அகத்தீசுவரர் கோயிலின் அம்மன் கோயிலுள்ள மாறவர்மன் பராக்கிரம பாண்டியனின் 9-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஊரார் வரி கொடுக்க இயலாமையால் அவ்வூர் பெரிய குளத்து வயலில் உள்ள ஊர் பொது நிலத்தினை கோயிலுக்கு தேவதானமாக விற்றமையைத் தெரிவிக்கிறது. சுப்பிரமணியர் கோயிலுள்ள கி.பி.15ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குமரர் கோயில் திருவிளக்குக்குக் கட்டளை இட்டமைக்கானது. மேற்படி அகத்தீசுவரர் கோயில் சுவாமி கோயில் வாசற்படிக்கருகிலுள்ள கல்வெட்டு தச்ச நட்டுவன் மகளுக்கு மாணிக்கம் என பெயர் கொடுத்து நிலக்கொடையும் அளித்தமைக்குரியது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. 

இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் தற்போது மிகவும் சிதிலமடைந்து இருக்கிறது. உள் மண்டபம் சரிந்த நிலையில் காணப்படுகிறது. அதைவிட கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் கோயிலின் உள்ளே விரிசல் ஏற்பட்டுள்ளது.  ஆகவே இக்கோயிலைப் பாதுகாக்க வேண்டும் என்பதே   பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.