நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

குவைத் கிரிக்கெட் அணியில் நாமக்கல் இளைஞர்!

இந்திய கிரிக்கெட்  அணியில் விளையாட வேண்டும் என்ற கனவோடு நான்காம் வகுப்பு படிக்கும்போதே கையில்  கிரிக்கெட் மட்டையைச் சுழற்றிய ஏழைக் கைத்தறி நெசவாளரின் மகன் தான் தற்போது சர்வதேச

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:28 am

ஆர். ரமேஷ் கிருஷ்ணன்

இந்திய கிரிக்கெட்  அணியில் விளையாட வேண்டும் என்ற கனவோடு நான்காம் வகுப்பு படிக்கும்போதே கையில்  கிரிக்கெட் மட்டையைச் சுழற்றிய ஏழைக் கைத்தறி நெசவாளரின் மகன் தான் தற்போது சர்வதேச தகுதிப்போட்டிக்குச் செல்கிறார். 

நாமக்கல்  மாவட்டம்,   ராசிபுரம்  அருகேயுள்ள பாச்சல் கிராமத்தில் வசிக்கும் கைத்தறி நெசவாளர் வரதப்பன் - சாந்தி தம்பதியின் இளைய மகன் சங்கர். பள்ளியில் படிக்கும்போதே  பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். அதிலும் கிரிக்கெட்  மீது  சிறுவயது முதலே ஆர்வம் அதிகம்.

பொறியியல் பட்டப்  படிப்பு  படிக்கும்போது, மாவட்ட அளவிலான  கிரிக்கெட் போட்டிகளில்  அதிக ரன்களைக் குவித்து விளையாடுவார்.   குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி  என்பதால், வேலைக்குச் சென்றால்தான் பெற்றோரைக் கவனித்து,  வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற சூழல்.

அப்போதும் தனது கிரிக்கெட் ஆர்வத்தை விடாமல் உள்ளூரில் வேலை பார்த்தவாறு விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

பொறியியல்  பட்டப் படிப்பு முடித்து,  பின்னர் எண்ணெய் வளம் நிறைந்த குவைத் நாட்டின் முன்னணிக்  கட்டடங்கள் மற்றும் எண்ணெய்க் கிடங்குகள் கட்டுமான நிறுவனமான சஆபஇ-இல்  2015 -ஆம் ஆண்டு முதல் தரக் கட்டுப்பாட்டு பொறியாளராக வேலைவாய்ப்பு பெற்று பணியாற்றி வருகிறார்.

அங்கும்  கிரிக்கெட்  மீதான தாகம் தீராமல், வேலை நேரம் முடிந்து, தங்கும் அறைக்குச் செல்லும் முன்பாக சொந்தமாக இரவு நேரங்களில் பயிற்சி எடுத்தார். இவரின் கிரிக்கெட் ஆர்வத்தை  அறிந்த அவரது குவைத் சஆபஇ நிறுவனம்,  இவரை கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட  ஊக்குவித்தது. மேலும், சங்கர் வரதப்பனின் விருப்பத்தை  நிறைவேற்றும் வகையில் அந்நிறுவனம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. குவைத்தில் 2016 - ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.  57 பந்துகளில் 169  ஓட்டங்கள் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து  குவைத் லீக் போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் வந்தன. குவைத் கிங்ஸ்  கிளப் அணியில் சங்கர் வரதப்பன் சேர்ந்து விளையாடி, டிவிஷன்  சி,  டிவிஷன் பி- நிலையில் இருந்து அந்த அணியை  ஏ  -  டிவிஷனுக்கு முன்னேற்றினார்.  அந்த அணியின் கேப்டன் முகமது ரபியின்  சிறந்த பயிற்சி, சங்கர் வரதப்பனுக்கு மேலும் ஊக்கம் அளித்தது.  விளையாடிய பல்வேறு போட்டிகளிலும் மேன் ஆப் தி மேட்ச் ஆக தேர்வானார்.  2018,  2019 போட்டிகளில் குவைத் தேசிய கிரிக்கெட் இயக்குநரின் சிறந்த வீரருக்கான சான்றிதழ், விருதும் பெற்றார். 

இதை அடிப்படையாக வைத்து குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் சங்கர் வரதப்பனுக்கு இடம் கிடைத்தது.   அந்த அணியில் இதுவரை பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் வீரர்கள்தாம் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதனை முறியடித்து முதன்முதலாக தமிழர் ஒருவர் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. குவைத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக  இவர் விளையாடி வருகிறார். 

மேலும், சிங்கப்பூரில்  ஜூலை 22 முதல் 28-ஆம் தேதிவரை,  நடைபெற உள்ள ஐஇஇ ப - 20 உலகக் கோப்பை ஆசிய மண்டலத் தகுதி இறுதிப் போட்டியிலும் விளையாட உள்ளது. இதில் குவைத் அணி வெற்றிபெற்றால், 2020 - ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐஇஇ ப - 20 உலகக் கோப்பைப்  போட்டியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வாய்ப்பு சங்கர் வரதப்பனுக்குக் கிடைக்கும்.

இது குறித்து சங்கர் வரதப்பன் கூறுகையில்,   ""பள்ளியில் படிக்கும் போதே கிரிக்கெட்  ஆர்வம் எனக்கு அதிகம். பல நேரங்களில் பள்ளிக்கு விடுமுறை எடுத்தும் கூட கிரிக்கெட் விளையாடுவேன். பின்னர் பொறியியல் பயிலும் போது விசைத்தறித் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் நிலை அறிந்து வேலைக்குச் செல்வது என முடிவு எடுத்தேன். ஆனாலும் எனக்கு உள்ள ஆர்வத்தால் குவைத் நாட்டில் பணிக்கு இடையே கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது.  எனக்கு இந்திய ஐபிஎல் விளையாட்டில் விளையாட வேண்டும் என்பதே விருப்பம்'' என்றார்.

இலக்கை அடையவேண்டும் என்ற லட்சியமும், தொடர்ந்த விடா முயற்சியும் இருந்தால் வெற்றிபெற முடியும் என்பதற்கு தமிழகத்தின் கிரிக்கெட் வீரர் சங்கர் வரதப்பன்  எடுத்துக்காட்டாக உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.