படித்தது எம்பிஏ... வளர்ப்பது முயல்!
படித்து முடித்ததும், வேலை வரும் என்று காத்திருக்காமல், வேலைக்காக அலையாமல், பார்த்த வேலையையும் உதறி விட்டு சொந்தக் காலில் நின்று கை நிறையச் சம்பாதிக்கிறார் மதுரை இளைஞர் சபரிநாதன். எம்பிஏ படித்த


படித்து முடித்ததும், வேலை வரும் என்று காத்திருக்காமல், வேலைக்காக அலையாமல், பார்த்த வேலையையும் உதறி விட்டு சொந்தக் காலில் நின்று கை நிறையச் சம்பாதிக்கிறார் மதுரை இளைஞர் சபரிநாதன். எம்பிஏ படித்த அவர் செய்யும் தொழில் முயல் வளர்ப்பு. ஆச்சரியமாக இருக்கிறதா?
""இந்தத் தொழிலுக்கு மிக முக்கியம் தன்னம்பிக்கை. என்னாலும் முடியும் என்ற துணிவுடன் இறங்க வேண்டும். தொடக்கத்தில் நஷ்டம் வரும். அதை எதிர்பார்த்தே இந்தத் தொழிலில் இறங்க வேண்டும். தொழிலில் லாபம் நஷ்டம் ஏற்படுவது சகஜம் என்ற புரிதல் இருந்தால் இந்தத் தொழிலும் நின்று தொழில் நடத்தி வெற்றி பெறலாம். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் ஆடு வளர்ப்பில்தான் தொடங்கினேன். தொழிலுக்குப் புதிது என்பதால் நஷ்டம் தவிர்க்க இயலாமல் போய்விட்டது. சுருண்டு விடாமல், அடுத்து என்ன என்று சிந்தித்தபோது "முயல் வளர்ப்பு' முறுவலித்தது.
மதுரைக்கு அருகில் அழகர் கோவிலுக்குப் பக்கத்தில் அரும்பனூர் கிராமத்தில் " ஸ்ரீ சாஸ்தா முயல் பண்ணை' என்ற பெயரில் ஆறு ஆண்டுகளுக்கு முன் தொடங்கினேன். இருபது முயல்களுடன் ஆரம்பித்த பண்ணை, ஆடிப் பெருக்கு மாதிரி சுமார் ஆயிரத்து ஐநூறாக பெருகியிருக்கிறது. உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் என்று எனது பண்ணை முயல்கள் போய்க் கொண்டிருக்கின்றன. முயல்களுடன், வாத்து, ஆடு, நாட்டுக் கோழி, வான் கோழி, காளான் என்று பண்ணையை விரிவாக்கம் செய்திருக்கிறேன். எனது பண்ணைக்குப் பக்கத்தில் புறவழிச்சாலை வருவதால், பண்ணையை சிவகங்கைக்கு அருகில் இடமாற்றம் செய்து இன்னமும் பெரிய அளவில் செய்யப் போகிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
எம்பிஏ முடித்திருந்த என்னிடம் ""படிப்பிற்கேற்ற வேலையா செய்யற?'' என்று கேட்காதவர்கள் இல்லை. இந்த தொழிலுக்கும் நிர்வாகத் திறமை வேண்டும். சரியான முடிவெடுக்கக் கூடிய வல்லமை வேண்டும். அதை எனது படிப்பு தந்திருக்கிறது. நானும் மாதம் நாற்பதாயிரம் சம்பாதிக்கும் வேலையில் இருந்தவன்தான். நான் வேலை பார்த்த அலுவலகத்தில் "ஆடு வளர்ப்பது' குறித்த திட்ட வேலைகளைச் செய்யச் சொன்னார்கள். அதற்காக கால்நடைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களை, ஆடு வளர்ப்பவர்களை சந்தித்து தகவல்கள் சேகரித்து சுமார் ஐநூறு பக்கத்திற்கு திட்ட அறிக்கையைத் தயார் செய்து அலுவலகத்தில் சமர்ப்பித்தேன். ஆனால் அந்த திட்ட அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
நான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் வேலையை ராஜினாமாச் செய்து விட்டு மூன்று லட்ச முதலீட்டில் நாற்பது ஆடுகளுடன் சிறிய அளவில் தொடங்கினேன். தொடங்கிய சில மாதங்களில் ஆடுகள் இறந்து போயின. என்னைப் பொறுத்த வரையில் பெரிய நஷ்டம்தான். அந்த தருணத்தில் முயல் வளர்ப்புப் பற்றி தெரிந்து கொண்டேன். ஆனால் முயல் வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் பொருளாதாரரீதியாக வளர்ச்சியடையவில்லை என்பதையும் அறிந்தேன். முயல் வளர்ப்பில் தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்கினேன். சில விஷயங்கள் விளங்கியது. அந்த தைரியத்தில் கையில் மிஞ்சிய ஐம்பதாயிரத்துடன் ஐம்பதாயிரம் கடன் வாங்கி ஐந்து யூனிட் முயல்களை வாங்கினேன். ஒரு யூனிட்டில் ஏழு பெண் முயல்களும் மூன்று ஆண் முயல்களும் இருக்கும். ஐம்பது முயல்கள் 220 ஆக உயர்ந்தன. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் சுமார் நூற்றி ஐம்பது முயல்கள் இறந்து போயின. அதனால், முயல்களை விற்பதை விட, பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்தினேன். கால்நடை மருத்துவருடன் கலந்தாலோசித்தேன். பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தேன். அதனால், முயல் குட்டிகள் இறந்து போவது குறைந்தது. அதனால் வியாபாரத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அது உற்சாகம் தந்தது.
முயல் பண்ணை அமைத்து அதை எப்படி பராமரிப்பது என்று சொல்லித்தர தொடங்கினேன். சுமார் இருநூறு பேர்களுக்கு முயல் வளர்ப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்து முயல் பண்ணைகளை நடத்த வைத்திருக்கிறேன். எனது பண்ணையில் முயல்களுடன் ஆடு, நாட்டுக் கோழி, வான் கோழி, வாத்து, காளான் உற்பத்தி என்று விரிவானதால் மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வருவாய் வருகிறது.
முயல்களை வீட்டு மொட்டை மாடியில் கூட கூண்டு அமைத்து வளர்க்கலாம். வெயிலின் உக்கிரம் உணர முடியாதபடி மொட்டைமாடியில் மேல் கூரை அமைய வேண்டும். தளம் அல்லது தரையிலிருந்து இரண்டு அடி உயரத்தில் கூண்டின் கீழ்த்தட்டு அமைய வேண்டும். அப்போதுதான், முயலின் கழிவுகளை அப்புறப்படுத்தி கழுவிவிட முடியும். கூண்டு பத்தடி நீளம், நான்கடி அகலம் இரண்டரை அடி உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். அதை, 2ல2ல2 அடி கன சதுரத்தில் சிறிய அறைகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். நெல். கோதுமை தவிடுகளை நன்றாகக் குழைத்து காலையில் உணவாகக் கொடுக்கலாம். காலை உணவு முடிந்ததும் கொஞ்சம் தண்ணீர் கூண்டினுள் வைக்க வேண்டும். மாலையில் முட்டைகோஸ், காலிஃபிளவர் இலைகளைப் போட வேண்டும்.
பெண் முயலின் சிறப்பே அது அடிக்கடி குட்டி போடுவதுதான். ஓர் அமாவாசை போய் அடுத்த அமாவாசை வரும் போது முயல் குட்டி போட தயாராகிவிடும். பெண் முயல் பருவம் அடைவது பிறந்த ஆறாவது மாதத்தில். ஆண் முயல் ஒன்பதாம் மாதத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகும். பெண் முயல் சுமார் நாலரை வயது வரை குட்டிகள்போடும். முயலின் கர்ப்ப காலம் முப்பது நாட்கள் மட்டுமே. ஒரு பிரசவத்தில் ஆறு முதல் எட்டு குட்டிகள் வரை போடும். பிரசவம் முடிந்ததும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். என்றாலும் ஐந்து முதல் ஏழு நாட்கள் இடைவெளி விடுவது நல்லது. பிறக்கின்ற குட்டிகள் கண் திறந்து பார்க்க ஏழு முதல் பத்து நாட்கள் பிடிக்கும். அதுவரை தாய்ப்பால்தான் உணவு. குட்டி பிறந்து இருபத்திரண்டு நாட்கள் ஆகிவிட்டால் தாயிடமிருந்து பிரித்து வேறு கூண்டில் விட்டுவிடலாம். ஒரு கூண்டில் ஐந்து குட்டிகள் வரை தங்கச் செய்யலாம். முயல்கள் குட்டிகளாக இருக்கும் போது அடிக்கடி அஜீரணக் கோளாறு ஏற்படும். அதன் காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்படும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முயல் பண்ணை அமைத்த முதல் ஆறு மாதம் வருமானத்தை அது ஒரு ரூபாய் என்றாலும் அதை நினைத்துப் பார்க்கக் கூடாது. முயல்கள் புதிய சூழலுக்கு பொருத்தப்பட குறைந்தது பதினைந்து நாட்கள் பிடிக்கும். பிறகு அது கருவுற வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு பிறக்கும் குட்டி இரண்டு கிலோ எடையைப் பெற வளர நான்கு மாதங்கள் தேவைப்படும். ஆக மொத்தம் முயல் பண்ணை தொடக்கி முதல் ஆறு மாதத்திற்கு வருமானம் ஒன்றுமே இருக்காது. ஒரு பிரசவத்தில் சராசரி மூன்று குட்டிகள் பிறக்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட, ஒரு யூனிட்டில் உள்ள ஏழு பெண் முயல்கள் 21 குட்டிகள் போடும். அந்த 21 குட்டிகள் நான்கு மாதங்களில் இரண்டு கிலோ எடையைப் பெறும். அவற்றை விற்றால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும். முயல்கள் பெருகப் பெருக வருமானமும் பெருகும்... ஆமாம்... முயலாலும் முன்னுக்கு வர முடியும்'' என்கிறார் சபரிநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...