/

"முதல்வன்' ஸ்டைலில் ஐந்து நாள் பிரதமரான இந்தியர்!

"முதல்வன்' படத்தில் ஒரு நாள் முதல்வராக இருப்பார் அர்ஜுன். ரகுவரனிடம் அந்தப் பதவியைக் கேட்டு வாங்கியிருப்பார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:12 pm

பிஸ்மி பரிணாமன்

"முதல்வன்' படத்தில் ஒரு நாள் முதல்வராக இருப்பார் அர்ஜுன். ரகுவரனிடம் அந்தப் பதவியைக் கேட்டு வாங்கியிருப்பார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் முதல்வர் பதவியென்ன ...

பிரதமர் பதவியையே ஒருவர் கேட்டு வாங்கியிருக்கிறார். அந்தப் பிரதமரும், ""ஒரு நாள் என்ன? ஐந்து நாட்கள் பிரதமராய் இருந்துக்கோ'' என்று விட்டுக் கொடுத்திருக்கிறார். ஆனால், ஒருநாள் முதல்வன் அர்ஜுன் மாதிரி, இந்த ஐந்து நாள் பிரதமர் அரசு செயல்படுவதில் அதிரடி மாற்றங்கள் எதையும் செய்யவில்லை .

கனடாவில் குடியேறி அந்த நாட்டுக் குடிமகனாகியிருக்கும் 19 வயதான இந்திய இளைஞனான பிரப்ஜோத் லக்கன்பால் தான், கனடா நாட்டின் ஐந்து நாள் கெüரவ பிரதமர்.

இந்தப் பிரதமர் பதவியை லக்கன்பால் சவால் விட்டுப் பெறவில்லை. ""சவுகரியப்படுமா?'' என்று வேண்டுகோள் விடுத்துப் பெற்றிருக்கிறார் .

""கனடா நாட்டின் பிரதமராக ஒரு நாள் வாழ்ந்துவிட வேண்டும். இது எனது ஆசை... விருப்பம்... கனவு''

என்று லக்கன்பால் சொன்னதும், அதிகாரப்பூர்வ பிரதமரான ஜஸ்ட்டின் ட்ரூடோ, ""சரி... ஒரு நாள் என்ன... ஐந்து நாள் கனடாவின் கெüரவப் பிரதமராக வாழ்ந்து மகிழுங்கள்'' என்று சம்மதித்ததுடன், தான் அமரும் பிரதமர் நாற்காலியில் அந்த இந்திய இளைஞனை அமரச் செய்து அழகும் பார்த்திருக்கிறார்.

லக்கன்பாலுவுக்கு 16 வயதில் புற்றுநோய் தாக்கியது. சிகிச்சை காரணமாக லக்கன்பால் ஆயுள் நீடிக்கிறது. Make  A  Wish    Canada என்ற தொண்டு நிறுவனம் கேட்டுக் கொண்டபடி, நோய் தாக்கம் காரணமாக வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் பலரும் தங்கள் விருப்பங்களை ஆசைகளைத் தெரிவித்தனர்.

""இதுவரை யாரும் நினைத்துப் பார்த்திராத, எத்தனை பணம் கொடுத்தாலும் நிறைவேற்ற முடியாத விருப்பத்தை நான் தேர்ந்தெடுத்தேன். ஆமாம்.. ஒரு நாள் கனடாவின் பிரதமராக வாழவேண்டும்... என்ற காஸ்ட்லியான விருப்பத்தைத் தெரிவித்தேன். ஆனால் அது சாத்தியப்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை. எனது விருப்பம், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட, எனது விருப்பத்தை நிறைவேற்றச் சம்மதித்தார்.

என் விருப்பத்தை நிறைவேற்ற பிரதமர் சம்மதித்ததும், பரவசம் அடைந்த நான் பெற்றோருடன், நாடாளுமன்றம் இருக்கும் ஒட்டாவா நகரத்திற்குப் பறந்தேன். 2016 பிப்ரவரி 17 புதன் கிழமை அன்று நான் நாடாளுமன்றத்தில் நுழைந்ததும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கை தட்டி வரவேற்றார்கள். என்னை கெüரவ செனட் உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். கனடாவின் முக்கிய அரசியல் தலைவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். சம்பிரதாயக் கை குலுக்கல்கள் என்றாலும் மனசு சந்தோஷத்தால் துள்ளியது.

பிறகு, ""வாங்க... பிரதமர் அறைக்குப் போகலாம்..'' என்றவாறே ட்ரூடோ, என்னைப் பிரதமரின் பிரத்யேக அறைக்கு அழைத்துச் சென்று அவர் அமரும் நாற்காலியில் அமர வைத்தார். என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!'' என்று கூறும் லக்கன்பால் ஐந்து நாட்கள் எங்கு தங்கினார் தெரியுமா?

ட்ரூடோ தங்கும் Chateau   Laurier ஹோட்டலின் சியூட்டில். தங்கும் செலவை அந்த ஹோட்டல் ஏற்றுக் கொண்டது. புதன் அன்று மதியம் ட்ரூடோ, லக்கன்பாலுக்கு விருந்து கொடுத்து கெüரவிக்கவும் மறக்கவில்லை .

லக்கன்பால் கனடா கவர்னரைச் சந்தித்துப் பேசியதுடன், பிரதமர் மட்டும் பறக்கும் பிரத்யேக ஜெட் விமானத்திலும் ஏறி ஒட்டாவா வானில் பறந்தார்.

லக்கன்பால் தொடர்கிறார் : ""ஒரு நாள் பிரதமர் ஆக வேண்டும் என்றுதான் கேட்டேன். என்னை கெüரவ செனட் உறுப்பினராக உறுதி மொழி எடுக்கச் செய்து, ஒரு நாள் கெüரவப் பிரதமர் ஆக்கியதுடன், ஐந்து நாட்கள் ஒட்டாவா நகரில் கெüரவ பிரதமராக வாழவும் செய்தார்... நகரைச் சுற்றிப் பார்க்கவும் செய்தார். என் கனவு, நான் கற்பனை செய்திருந்ததைவிட வெகு திருப்தியாக நிறைவேறிவிட்டது. நான் சட்டம் படிக்க விரும்புவதாகச் சொன்னபோது, ட்ரூடோ சில டிப்சுகள் தந்தார். ஹோட்டலில் தங்கியிருந்த போது, என் உருவப் படம் போட்டு பிஸ்கட்டுகளைத் தயாரித்து அதற்கு பிஜே குக்கீஸ் என்று பெயரும் வைத்து அசத்தினார்கள்.

ட்ரூடோ பிரதமர் அல்லவா.. ரொம்பவும் பிசி. அவர் இயங்குவதைப் பார்த்து, எனக்கும் அரசியல் பக்கம் சாய்வு வந்துள்ளது. படிப்பு முடிந்ததும், அரசியலில் இறங்குவேன். நிச்சயம்...கனடாவின் பிரதமர் ஆவேன்'' என்கிறார் லக்கன்பால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.