/

ஆஸ்கர் விருது பெறும் தமிழர்!

நடிப்பு, சிறந்த திரைப்படம், பட இயக்கம், தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:45 pm

பிஸ்மி பரிணாமன்

நடிப்பு, சிறந்த திரைப்படம், பட இயக்கம், தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2016இல் இந்தியாவைச் சேர்ந்த இருவர் சினிமாவில் தொழில்நுட்பத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் ராகுல் தாக்கர். மற்றொருவர் கோவையில் கல்வி பயின்று இன்று அமெரிக்காவில் பணியாற்றி வரும் 44 வயது கோட்டலங்கோ லியோன். இந்த விருது ஆஸ்கார் விருது விழாவிற்கு முன்னதாகவே, ஒரு சிறு விழா ஒன்றில் இவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

லியோனின் பூர்வீகம் தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடி. 1971இல் தூத்துக்குடியில் பிறந்தவர். தென்மாவட்டத்தைச் சேர்ந்த இவரது தந்தை லுôர்து, தாயார் ராஜம் ஆசிரியர் பணிக்காக கோவைக்கு வந்து, கோவை புறநகரில் சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையத்திற்கு குடிபெயர்ந்தனர். கள்ளப்பாளையம் அரசு பள்ளியிலும், கதிரி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளி படிப்பு.

கோவையில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுôரியில், 1992இல் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பட்டம் பெற்ற லியோன், மேற்படிப்பை அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

தற்போது இவர் அமெரிக்காவில் சோனி இமேஜ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் முதுநிலை மென்பொறியாளராக 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் கோட்டலங்கோ லியோன், மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதியுடன், அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வருகிறார்.

""குழந்தைப் பருவம் முதலே கணிதம், அறிவியலில் எனக்கு ஆர்வமுண்டு. கல்லூரியில் கணித பாடத்தில் சேர இருந்த என்னை நீ கணினி விஞ்ஞானம் படி... முன்னுக்கு வருவாய் என்று வழிகாட்டியது திலகவதி ஆசிரியை. அவர் சொன்னது போலவே கணினி பாடம் எடுத்தேன். தொழில் அதிபர் வரதராஜன் எனது படிப்பிற்கு உதவி செய்தார். டில்லியில் சில காலம் அனிமேஷன் வேலை செய்தேன். அப்போது வெளியான "ஜூராசிக் பார்க்' திரைப்பட தொழில்நுட்பக் காட்சிகள் என்னைப் பெரிதும் ஈர்த்தன. ரசித்துப் பார்த்தேன், "ஜூராசிக் பார்க்' படம் மாதிரி நாமும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனது நண்பர்கள் மேல்படிப்பு படிக்க என்னை அமெரிக்காவுக்கு அழைத்தார்கள். எனக்கு இமேஜிங், விஷுவல் எபெக்ட், கிராஃபிக்ஸ் ஆகியவற்றில் நாட்டம் இருந்தது. அந்தப் படிப்பிற்கான நல்ல அமெரிக்கக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க நண்பன் நடராசன் உதவினார். அமெரிக்கா சென்று கணினி விஞ்ஞானத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றதும், இமேஜிங், விஷுவல் எபெக்ட், கிராஃபிக்ஸ் தொடர்பான வேலைக்காக பட ஸ்டுடியோக்களுக்கு மனு செய்தேன். வேலை கிடைத்தது... கொஞ்சம் அனுபவம் கிடைத்ததும் சோனி இமேஜிங் நிறுவனத்தில் சேர்ந்தேன். அந்த நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன்.

தொடக்கத்தில், இமேஜிங், விஷுவல் எபெக்ட், கிராஃபிக்ஸ் தொடர்பான மென்பொருள்கள் அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு சில சிரமங்களைத் தந்தது. அனிமேஷன் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மாதிரி புதிய மாற்று மென்பொருள் கண்டுபிடிக்கும் பொறுப்பு எனது குழுவினருக்குத் தரப்பட்டது. மூன்று மாதத்தில் மாற்று மென்பொருளைத் தயாரித்தோம். எட்டு ஆண்டு காலமாக, தொழில்நுட்ப மாற்றம், தேவைகளைப் பூர்த்தி செய்யவதற்காக, அந்த மென்பொருளை அவ்வப்போது மேம்படுத்தியிருக்கிறோம். தொடர்ந்து அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

திரைப் படம் என்பது பெருங்குழு ஒன்றின் கூட்டு முயற்சி. படம் பிடிப்பதுடன் எல்லாம் முடிந்து போவதில்லை. படப்பிடிப்பிற்கு பின், ஸ்டுடியோவில் பல மாதம் இமேஜிங், விஷுவல் எபெக்ட், கிராஃபிக்ஸ் என்று வேலைகள் இருக்கும். படக் காட்சிகள் இப்படி அமைய வேண்டும் என்று பட இயக்குநர் உருவகம் செய்து வைப்பார். அதை, படக் குழுவினர் கச்சிதமாக உருவாக்கித் தர ஒத்துழைக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் ஸ்டுடியோவில் கணினியின் துணையோடு செய்து முடிக்கிறோம். இந்தத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தொழில் நுட்பத்திற்கு ஆஸ்கர் விருதினை ஏற்படுத்தி வழங்கி இருக்கிறார்கள். என்ன... ஆஸ்கர் விழாவில் வழங்காமல், அதற்கு முன்னமே வழங்கிவிட்டார்கள். ஆஸ்கர் விருது வழங்குவதில் தரப்படும் ஆஸ்கர் உருவத்தின் மினி சிலை, தொழில் நுட்பப் பிரிவிற்கு தரப்படுவதில்லை. சான்றிதழ் மட்டும் வழங்கப்படும். ஆஸ்கர் அங்கீகாரம் கிடைப்பது பெரிய விஷயம். அது எனக்கும் எனது குழுவினருக்கும் கிடைத்திருக்கிறது.

தமிழ்ப் பட உலகம் எல்லாவிதத்திலும் முன்னேறியுள்ளது. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களைத்தான் இங்கு பார்க்க முடியும். இப்போது தமிழகத்தில் படம் வெளியாகி இரண்டு வாரங்களில் இங்கே பார்க்கலாம். காட்சிகள் மலைக்க வைக்கின்றன. இமேஜிங், விஷுவல் எபெக்ட், கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு தமிழ் படங்களில் அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். அப்படிச் செலவு செய்து எடுக்கும் படங்கள் லாபம் தந்தால் அது ஓ.கே.தான். தரமான வித்தியாசமான கதையைப் படமாக்கினால் போதும். படம் வெற்றி பெறும். தொழில் நுட்பத்தில் ஹாலிவுட்டுடன் போட்டி போடுவதற்காக இமேஜிங், விஷுவல் எபெக்ட், கிராஃபிக்ஸ் வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

மனைவி தமிழ்நாட்டுக்காரர்தான். வீட்டில் தமிழ்தான் பேசுவோம். இங்கே தமிழை பள்ளியில் சொல்லித்தரும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். எனது வெற்றியில் பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்க்கும், உதவிய நல்ல உள்ளங்களுக்கும் பங்கு உண்டு என்று சொல்லும் லியோன், ஸ்பைடர் மேன், மென் இன் பிளாக், ஓட்டல் டிரான்ஸ்ல்வேனியா, தி ஸ்மர்ப்ஸ், கிளவுடி வித் தி சான்ஸ் ஆப் மீட்பால்ஸ், ஓபன் சீசன் அண்ட் ஸ்டூவர்ட் லிட்டில் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.