நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

எவரெஸ்ட்டைத் தொட்ட தமிழர்!

உலகத்தின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் கூரிய முனையைத் தொட்ட முதல் தமிழர் என்ற பெருமையை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரபாகரன் பெற்றுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:31 pm

ந.முத்துமணி

உலகத்தின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் கூரிய முனையைத் தொட்ட முதல் தமிழர் என்ற பெருமையை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரபாகரன் பெற்றுள்ளார்.

வனப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியான எஸ்.பிரபாகரன், மே 20-ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் கூரிய முனையை அடைந்துள்ளார்.

இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட தமிழர், முதல் இந்திய வனப்பணி அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். 2011-ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியான எஸ்.பிரபாகரன், கர்நாடக மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டார்.

தற்போது கொப்பள் கோட்ட வன அதிகாரியாக பணியாற்றிவரும் பிரபாகரன், தனது இளமைக் கால கனவு நனவாகியிருப்பதாக பெருமை பொங்கக் கூறுகிறார்:

""எனது பள்ளிப் படிப்பை எஸ்ஆர்ஜிடிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில் பிஎஸ்சி (வனம்) படித்து முடித்து, 2011-இல் நடந்த யூபிஎஸ்சி தேர்வு எழுதி இந்திய வனப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியாக தேர்ச்சி பெற்றேன்.

2013-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் தகுதிகாண் அதிகாரியாகப் பணி நியமனம் பெற்றேன். தற்போது கொப்பள் கோட்ட வன அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். எனது இளமைக் காலம் தொட்டு விளையாட்டு மற்றும் சாகசங்களில் ஆர்வமாக இருந்தேன்.

கராத்தே கலையில் கறுப்பு பெல்ட் பெற்றிருந்தேன். கல்லூரி காலத்தில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, கபடி, கராத்தேயில் சிறந்து விளங்கினேன். எனது கல்லூரியில் மலையேறுதல் மற்றும் நெடும் நடைப்பயணக் குழுவின் செயலாளராக இருந்தேன்.

கபடி அணியின் தலைவராகவும் செயல்பட்டேன். மலையேறுவதில் தீராத காதல் கொண்ட நான் அவ்வப்போது மலையேறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஐஎஃப்எஸ் அதிகாரியாக மலைசூழ்ந்த குடகு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டதும், அதை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு மலையேறுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன்.

இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்ல 5 பேர் கொண்ட அகில இந்திய சேவைகள் பயணக் குழு அமைக்கப்பட்டது. அதில் நானும் ஒருவன்.

2015, மார்ச் 27-இல் எங்கள் பயணத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உற்சாகமாக இமயமலையின் உச்சத்தைத் தொடுவதற்கு பயணப்பட்டு 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் மலையேறிக் கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக நேபாளத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து எங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு ஊர் திரும்பினோம். ஆனாலும் இமயமலையின் உச்சியைத் தொடுவது என்ற கனவை நனவாக்காமல் விடுவதில்லை என்ற முடிவெடுத்து, நிகழாண்டு மீண்டும் எவரெஸ்ட்டை நோக்கி பயணப்பட்டேன்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த டிரான்ஸ்சென்ட் அட்வென்சர்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏப்.8-ஆம் தேதி நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் இருந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். கடந்த முறையை போல அல்லாமல் இந்தமுறை ஆபத்துகள் நிறைந்த வடக்குப் பாதையைத் தேர்ந்தெடுத்து பயணிக்கத் தொடங்கினோம்.

எங்கள் பயணக் குழுவில் மகாராஷ்டிர மாநிலத்தின் 2012-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி சுஹைல்சர்மா, தெலங்கானாவின் டிஎஸ்பி அதிகாரி ராதிகா, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பத்ரையா, ஐக்கிய அமீரக நாடுகளில் பொறியாளராகப் பணியாற்றும் மும்பையைச் சேர்ந்த பாலன்சிவராமன் கிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

விடாமுயற்சியுடன மலையேறி 8300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள முகாம்-3-ஐ மே 18-ஆம் தேதி அடைந்தோம். 8 ஆயிரம் மீட்டருக்கு மேல் பிராண வாயு இருக்காது. அதனால் 8 ஆயிரம் மீட்டருக்கு அதிகமான உயரமான மலைப் பகுதியை "மரண மண்டலம்' என்று அழைக்கிறார்கள்.

ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தாலும் அதுபற்றி கவலைப்படாமல் மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் மே 19-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மலையேறத் தொடங்கினோம். பலமான காற்று வீசாமல் ரம்மியமான வானிலை நிலவியது மலையேறுவதற்கு வசதியாக இருந்தது.

அந்த இரவு பயங்கரமானதாக இருந்தது. முழுநிலவு வெளிச்சத்தில் பாறைகளை கடப்பது சவாலாக இருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்பதற்கேற்ற குறுகிய நீண்ட கரைமேடுகளைக் கடந்து சென்றோம்.

2 ஆயிரம் உயரத்தில் அமைந்துள்ள ஆபத்தான பள்ளத்தாக்குகளைத் தாண்ட வேண்டியிருந்தது. செங்குத்தான மலைப் பகுதிகளை ஏறுவது திகைப்பாக இருந்தாலும் அந்த இரவுப் பொழுதில் மலையேறுவது இன்பமாக இருந்தது.

பல்வேறு சாகசங்களுக்கு இடையே 2016, மே 20-ஆம் தேதி அதிகாலை 6.45 மணிக்கு உலகின் உச்சமாக கருதப்படும் எவரெஸ்ட் உச்சியை அடைந்தோம். நிலப் பகுதியின் உச்சியில் நின்று கொண்டிருந்த போது ஏற்பட்ட அனுபவங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

எனது உணர்வலைகளை பெருமிதமும், கண்ணீரும், புன்னகையும் ஆக்கிரமித்திருந்தன. மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டதும் கண்களில் மலர்ந்த கண்ணீர் துளிகளை அணை போட்டு தடுக்க முடியவில்லை.

உறைபனியில் கண்கள் பனித்தன. உலகை மாறுபட்ட கோணங்களில் கண்டுகளித்தேன். இமைகளை மூடினால் இமயம் விரிவதை காண முடிந்தது. இமைகளைத் திறந்தால் பனிமலை பூப்பதை காண நேர்ந்தது.

எவரெஸ்ட் மலையின் உச்சத்தைத் தொட வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். அந்த கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சி என் உள்ளத்தை நிறைத்திருக்கிறது. எவரெஸ்ட் மலை உச்சியில் 15 நிமிடங்களை கழித்தோம். அது எனது உள்ளத்தில் நீங்காத நினைவுகளாக நிலைத்திருக்கும்.

உச்சியைத் தொட்டுவிட்டாலும் அங்கிருந்து திரும்புவது, ஏறுவதைவிட சவாலானதாகும். கீழே இறங்கும் போதுதான் விபத்துகள் நேர்வது இயல்பாம்.

மலையேறி அயர்ந்திருக்கும் உடல் ஒத்துழைக்காவிட்டால், மிகவும் கடினப்பட்டு மலை இறங்கினோம். இமயமலைக்குச் சென்று திரும்பிய அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

எனது சொந்த ஊர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்புழுதியூர் கிராமம் ஆகும். என் தந்தை சிவாஜி, ஓய்வுபெற்ற சிவில் பொறியாளர். தற்போது கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார்.

என் தாய் எலிசபெத், குடும்பத் தலைவியாக இருக்கிறார். என் சகோதரர் கலைச்செல்வன், இணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவருகிறார்.

அடுத்த ஆண்டு திபெத் நாட்டில் இமயமலைத் தொடரில் 8210 மீட்டர் உயரத்தில் உள்ள சோ-ஓயு மலையை ஏறும் எண்ணம் இருக்கிறது.

நான் பணியாற்றும் கொப்பள் மாவட்டத்தில் இளம் தலைமுறையை மலையேறுதலில் பயிற்றுவிக்க திட்டமிட்டிருக்கிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.