/

உதகைக்கு வந்த ஜி.யு.போப்பின் பேத்தி!

ஒரு தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்' - இது இங்கிலாந்திலுள்ள ஒரு கல்லறையின் மீது எழுதப்பட்ட வாசகம்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:35 pm

ஏ. பேட்ரிக்

ஒரு தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான்' - இது இங்கிலாந்திலுள்ள ஒரு கல்லறையின் மீது எழுதப்பட்ட வாசகம்.

இந்த கல்லறை, திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப்பினுடையது. ""இதைவிட தமிழே தெரிந்திராத ஒரு மனிதனுக்கு தமிழ் மொழி மீது ஏற்பட்ட பாசத்தை வெளிப்படுத்திவிட முடியாது'' - இந்த வார்த்தைகளைச் சொன்னவர் பிரபல மொழி அறிஞரான ஜி.யு.போப்பின் 80 வயதான பேத்தி காரல் புரூக்ஸ்.

தனது தாத்தாவான ஜி.யு.போப் கனடாவிலிருந்து தமிழகத்துக்கு இறைப்பணி ஆற்றுவதற்காக வந்து தமிழ் மீது கொண்ட அளவற்ற காதலின் காரணமாக மொழி அறிஞராக மாறியதை நேரிலும் வந்து பதிவு செய்துவிட வேண்டுமென்ற நோக்கோடு அண்மையில் உதகைக்கு அவர் வந்திருந்தார்.

ஜி.யு.போப் தனது 18 வயதில் கனடாவிலிருந்து தமிழகத்துக்கு வந்தவுடன் திருநெல்வேலியிலும், உதகையிலும் தொண்டாற்றியுள்ளார். இதில் உதகையில் அவர் இருக்கும்போதுதான் முதன் முதலாக ஓர் இசைப் பள்ளியைத் தொடங்கியுள்ளார். இந்தத் தகவல்கள் ஏட்டில் மட்டுமே இருந்ததால் அதை தனது குழந்தைகளுக்கு நேரிலும் காட்ட வேண்டுமென்ற எண்ணத்தோடு அண்மையில் உதகைக்கு வந்திருந்தார்.

அவரை வரவேற்ற உதகை அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் போ.மணிவண்ணன், உதகையில் போப் ஆரம்பித்த இசைப்பள்ளி தற்போது அரசு கலைக்கல்லூரியாக மாறியுள்ளதையும், இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக அவர் பயன்படுத்திய அறைதான் தற்போது தமிழ்த்துறையாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்ததையடுத்து, காரலின் கண்களில் ஆனந்தக் கண்ணீரே வழிந்தது. அதன் பின்னர் போப் பயன்படுத்திய நாற்காலியில் தானும் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

பின்னர் மணிவண்ணன் துணையுடன் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:

""மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறைப்பணிக்காக வந்தவர்கள் மத்தியில் மொழிப்பணிக்காகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மிகச் சிலரில் இவரும் ஒருவர்.

இங்கு எனக்கு அளிக்கப்பட்டுள்ள கவுரவம் அப்போது என் தாத்தாவுக்கும், அவரது தமிழ் தொண்டிற்கும் கிடைத்திருப்பதாகவே கருதுகிறேன். வெளிநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் ஆங்கிலத்தைத் திணிக்க முயற்சிக்காமல் இங்கிருந்த ஒரு மொழியை புதிதாகக் கற்றுக் கொண்டு அதில் முழு தேர்ச்சியும் பெற்றிருப்பது அவரது அர்ப்பணிப்புத் தன்மையைக் காட்டுகிறது.

அவர் தனது வாழ்க்கையின் குறிக்கோளாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருந்ததை இன்னமும் எங்கள் குடும்பத்தினர் பெருமையாகக் கருதுகின்றனர். இறைவனுக்கு முன்னர் அனைவரும் சமம் என்பதையே இதற்கு காரணமாகக் கொண்டுள்ளார். தமிழை கற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததோடு, சமய இலக்கியமான திருவாசகத்தையும் மொழிபெயர்த்துள்ளார் என்பது எங்களால் இன்றளவும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும்.

அவர் தனது வாழ்கையின் இறுதிக் கட்டத்தில் 3 விஷயங்களை மேற்கொள்ளச் சொல்லியுள்ளார். தான் இறந்த பின்னர் தனது இருபுறமும் தான் மொழி பெயர்த்த திருக்குறளையும், திருவாசகத்தையும் வைத்திருக்க வேண்டுமெனவும், தனது கல்லறையின் மீது இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என எழுதி வைக்க வேண்டுமெனவும், தனது கல்லறைக்காக ஆகும் செலவில் தமிழர்களின் பங்கும் இருக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். இறக்கும் வரையிலும் தன்னை ஒரு தமிழ் மாணவன் என்பதுடன், இறக்கும் வரை தான் தமிழ் படிக்க வேண்டுமென்பதையும் தனது லட்சியமாகக் கொண்டிருந்தார்'' என்றார்.

உடனிருந்த மணிவண்ணன் கூறுகையில், ""அக்காலத்தில் ஒலைச்சுவடிகளைச் சேகரித்து வைப்பதையே பெரிய பணியாக மேற்கொள்ளப்பட்டிருந்த சூழலில் அவற்றை அச்சு வடிவிலும் கொண்டு வர ஜி.யு.போப் முயற்சிகளை மேற்கொண்டது தமிழ் மொழி உள்ள வரைக்கும் மறக்க இயலாத ஒன்று. அவரது தமிழ்ப்பற்றின் காரணமாகவே ஆய்வுப்படிப்புகளுக்கு அவரது தமிழ்த் தொண்டை இதுவரை எடுத்து வருகிறார்கள்'' என்றார்.

உதகையில் ஆங்கிலேயர் அதிக அளவில் வசித்து வந்ததால், மேல் நாடுகளிலிருந்து இன்றளவும் மூதாதையர்களைத் தேடி என்ற பெயரில் பல வெளிநாட்டினர் சுற்றுலா வந்து செல்கின்றனர். ஆனால் மூதாதையர் கற்ற மொழியைத்தேடி குடும்பத்துடன் உதகைக்கு வந்திருந்த காரலை உதகை அரசு கலைக்கல்லூரியில் இருந்தோர் மட்டுமின்றி, உதகையில் அவரைக் கண்ட அனைவருமே பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.