/

மூணாறு தேயிலைத் தோட்டங்களில்

அண்மையில் நடந்து முடிந்த கேரளா பஞ்சாயத்து தேர்தலில் தமிழ் நாட்டைச் சேர்ந்த கோமதி, தேவிகுளம் பஞ்சாயத்தின் தேவிகுளம் வார்டில் நின்று வெற்றி பெற்றுள்ளார். மூணாறு பஞ்சாயத்தில் இரண்டு தமிழ்ப் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அன்றாடம் காய்ச்சிகள். இவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விஷயம்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:36 am

பிஸ்மி பரிணாமன்

அண்மையில் நடந்து முடிந்த கேரளா பஞ்சாயத்து தேர்தலில் தமிழ் நாட்டைச் சேர்ந்த கோமதி, தேவிகுளம் பஞ்சாயத்தின் தேவிகுளம் வார்டில் நின்று வெற்றி பெற்றுள்ளார். மூணாறு பஞ்சாயத்தில் இரண்டு தமிழ்ப் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அன்றாடம் காய்ச்சிகள். இவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல என்பதுதான் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய விஷயம்.

இது ஒரு சாதாரண பஞ்சாயத்து தேர்தலில் கிடைத்த வெற்றிதானே? என்று தள்ளிவிட முடியாது.

ஏனென்றால், இந்தப் பெண்கள் எதிர்த்து நின்றது கேரளத்தில் பண பலம், தொண்டர் பலம், அதிகார பலம் இவற்றை ஏணியாக்கி விசுவரூப ஜாம்பவான்களாக இருக்கும் காங்கிரஸ், வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கோடிக்கணக்கான சொத்துகளைக் கொண்டிருக்கும் தேயிலைத் தோட்டங்களின் முரட்டு நிர்வாகிகளை. அதனால் தான் இந்த மூவரும் அகில இந்திய அளவில் ஆச்சரியக் குறியாய் உயர்ந்து நிற்கின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக வெறும் கூலித் தொழிலாளியாக இருந்த கோமதியும் அவர் கூட்டாளிகளும், திடீரென்று பஞ்சாயத்து தேர்தலில் குதிக்க என்ன காரணம்?

பஞ்சாயத்து உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் முடித்த கையுடன் நம்மிடம் பேசினார் கோமதி:

தமிழகத்தின் அண்டை மாநிலம் என்றாலும், கேரளம் பணம் குவிக்கும் தேயிலை, ஏலக்காய், மிளகு, ரப்பர் எஸ்டேட்டுகள் நிறைந்த மாநிலம். ஏலக்காய் மிளகு தோட்டங்களில் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக கூலிக்கு வேலை செய்து வந்தாலும்,

தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் பல தலை முறைகளாக தினக் கூலிக்கு வேலை செய்து வருகிறார்கள். இவர்களின் நிலை கொத்தடிமைகளை விட மோசமானது.

சென்ற மாதம் வரை தினக்கூலி 231 ரூபாய்தான். பல ஆண்டுகளாக தினக் கூலியை உயர்த்த.. போனûஸக் கூட்ட... நாங்கள் சார்ந்திருக்கும் தொழில் சங்கங்களைக் கேட்டுக் கொண்டோம். ""இன்று பேசுகிறோம்... நாளை முடிவாகும்.. கொஞ்சம் பொறுங்க...'' என்று சொன்னார்களே தவிர.. எங்கள் கோரிக்கைகளைக் கவனிக்கவில்லை.

காலை முதல் மாலை வரை வேலை... கடும் குளிரில் கொட்டும் மழையில், செங்குத்து மலைகளில் இருக்கும் தோட்டங்களில் வேலை... அட்டை பூச்சி எங்கள் ரத்தத்தை உறிஞ்சும். சில சமயம் நச்சுப் பாம்புகள் தீண்டும். கொடிய விலங்குகளான புலி, யானை தேயிலைத் தோட்டத்தில் புகுந்துவிடும். பலர் இந்த விலங்குகள் தாக்குதலில் இறந்து போயிருக்கிறார்கள். நாள் முழுவதும் கிள்ளும் தேயிலைக் கொழுந்துகளை கூடையில் போட்டு முதுகில் சுமக்க வேண்டும். நாள் முழுவதும் நின்று கொண்டுதான் வேலை. மாத விடாய் சமயத்தில் உயிர் போகும். ஒரு நாளைக்கு 25 கிலோ தேயிலை தளிர்கள் பறிக்க வேண்டும். அதில் தரம் குறைந்தது என்று சில கிலோ தளிர்களை விலக்கி விடுவார்கள். விலக்கப்பட்ட தளிர்களுக்கு ஏற்றவாறு கூலியைக் குறைப்பார்கள். அதே சமயம், விலக்கப்பட்ட தளிர்களை தேயிலைப் பொடியாக்க உபயோகித்துக் கொள்ளவும் மறக்க மாட்டார்கள். எப்படியாவது கூலியைக் குறைக்க வேண்டும் என்பது தான் கம்பெனியின் நோக்கம். மருத்துவ வசதி இல்லை. எங்களுக்குத் தரப்பட்டிருக்கும் லைன் வீடுகள் ஓர் அறை, ஓர் அடுப்பாங்கரை. அவ்வளவுதான். கோழிக் கூடுன்னு சொல்லலாம். குழந்தைகளைப் படிக்க வைக்கணும். சமைக்கணும். வீட்டு வேலைகளையும் செய்யணும். ஒவ்வொரு நாளும் ஒரு சுமையாக விடிந்து அஸ்தமிக்கிறது. வானத்தைத் தொடும் விலைவாசி உயர்வில் இந்த 231 ரூபா தினக் கூலி எந்த மூலைக்கு?... சொல்லிப் பார்த்தோம்... கேட்டுப் பார்த்தோம்... கோபத்தில் கத்திப் பார்த்தோம்... தொழிற்சங்கங்களும் சரி, தேயிலைத் தோட்ட நிர்வாகமும் சரி.. எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கவே இல்லை. பொறுத்தது போதும்... பொங்கி எழுவோம் என்று "பெம்பிளை ஒரும' (பெண்கள் ஒற்றுமை) என்ற அமைப்பை உருவாக்கி வேலை நிறுத்தம்.. சாலை மறியல் என்று பெண்கள் போராட்டத்தில் இறங்கினோம். தினக் கூலி 500 ரூபாய் வேண்டும் என்று ஒன்பது நாட்கள் நீண்ட போராட்டத்தில் மூணாறு நகர் ஸ்தம்பித்தது. எங்களின் கோரிக்கைகளை செய்தி ஊடகங்கள் சரிவர பொது மக்களிடம் கொண்டு செல்ல... கேரள மக்களின் ஆதரவு கிடைத்தது... இடது கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் கட்சி எல்லைகளைத் தாண்டி எங்களுக்கு முழு ஆதரவு தந்து ஒரு நாள் முழுவதும் எங்களுடன் போராட்டத்தில் பங்கு பெற்றார். எங்களது போராட்டம் இரண்டு நாட்களில் நின்று போகும் என்று கேரளத்தின் பிரதான அரசியல் கட்சிகள் கணித்திருந்தன. அதனால் எங்கள் போராட்டம், கோரிக்கைகளுக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் எங்கள் போராட்டம் தொடர்ந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட, சுற்றுலா பயணிகள் வருவது வெகுவாக குறைந்து போக.. மூணாறு நகரம் திணறி திக்கு முக்காடிப் போனது... பெண் தொழிலாளிகளின் ஒற்றுமை கண்டு, அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தர முன்வந்தன. நாங்கள் அந்த ஆதரவை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த போராட்டம் நிற்காது என்று அறிந்த கேரளா அரசும், தொழிற் சங்கங்களும், தேயிலை தோட்ட நிர்வாகமும் சேர்ந்து 300 ரூபாய் அளவில் ஊதியத்தைக் கூட்டினார்கள்.

தினக் கூலி மறு நிர்ணயம் தள்ளிக் கொண்டே போனது. தினக் கூலி 500 கிடைத்திருந்தால் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் எண்ணமே எங்களுக்கு வந்திராது. மேலும் தொழிற்சங்க பொறுப்பாளர்களும், மூணாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் தேயிலை தோட்ட நிர்வாகத்திடமிருந்து பங்களாக்கள், ரிசார்ட்டுகள் வாங்கிக் கொண்டுதான் வாய்மூடி இருந்திருக்கிறார்கள் என்று தெரிந்ததும், நாங்களும் ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்று பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்தோம். இருந்த நகைகளை அரிமுறி விலைக்கு விற்று தேர்தலில் போட்டியிட மனு செலவு, தேர்தல் பிரச்சார செலவினைச் செய்தோம். தேர்தலுக்குப் பிறகு எங்கள் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் பஞ்சாயத்து நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எங்கள் கன்னி முயற்சிக்கு இது பெரிய வெற்றிதான்.. இனி எனது குரல் ஒடுக்கப்பட்ட தேயிலைத் தொழிலாளர்களுக்காக எழும். இதுவரை எங்களின் குரல் செவிகளில் விழுந்தும் கேட்காதது மாதிரி இருந்தவர்கள், எங்கள் குரலை அலட்சியம் செய்யமுடியாது.''

கோமதிக்கு 37 வயதாகிறது. மூணாறில் பிறந்து வளர்ந்தவர். மூன்று மகன்கள். இவரது குடும்பம் நான்கு தலைமுறைகளாக மூணாறு பகுதி தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

""தேர்தலில் வெற்றி பெற்றதும், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லச் சென்ற போது, சில தொழிற்சங்கங்களின் தூண்டுதல் பேரில் என்னையும், என்னோடு வந்தவர்களையும் தாக்கினார்கள். ஆனால் நான் பிறரைத் தாக்கினேன் என்று பொய் வழக்கு போட்டுள்ளனர். நிச்சயம் நியாயம் வெல்லும்.... என் கவனத்தைத் திருப்புவதற்காக இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது... நான் பஞ்சாயத்து உறுப்பினர் ஆனாலும், தொடர்ந்து தேயிலை கிள்ளும் பணிக்கு போவேன்... சாண் வயிறுக்கு சாப்பாடு வேணுமே.. வீட்டுக்காரர் இந்த தொழில் செய்து வந்தவர்தான். இப்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார். தொழிலுக்குப் போவதில்லை. இந்த தேயிலைத் தோட்டம் தொழிலாளர்களுக்கு தவறாமல் தரும் பரிசுதான் இந்த சுகவீனம். தேநீர் குடிக்கும் போது, தேயிலத் தளிர் பறிக்க நாங்கள் படும் கஷ்டத்தைக் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள்...'' என்கிறார் கோமதி சோகமாக.

இன்று கேரளத்தின் புரட்சிப் பெண்ணாக கோமதியை கேரளத்து மக்கள் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.