காவல்துறை அதிகாரி நடத்தும் குட்டீஸ்களுக்கான நூலகம்!
அந்த தயாள மனம் படைத்த தமிழ்நாட்டுக்காரர், அமெரிக்காவிலிருந்து 2014 இறுதியில் திருப்பூர் வந்தபோது ஏதோ விஷயமாக உதவி காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.


அந்த தயாள மனம் படைத்த தமிழ்நாட்டுக்காரர், அமெரிக்காவிலிருந்து 2014 இறுதியில் திருப்பூர் வந்தபோது ஏதோ விஷயமாக உதவி காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
வரும்போது, காவல்துறை கமிஷனர் அலுவலகத்தின் அருகே சில பள்ளிகள் இயங்கி வருவதைக் கண்டார். அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக ஒரு நூலகம் ஒன்றினைத் துவங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்ற, உதவி காவல்துறை கமிஷனரிடம் நூலகம் பற்றிப் பேசினார். அவரும் சிறுவர், சிறுமியருக்கான நூலகத்தைத் தனது அலுவலகத்தில் தொடங்க ஒத்துக் கொண்டார்.
சிறுவர், சிறுமியருக்கான நூல்களுக்கு எங்கே போவது?... கேள்வி எழுந்தது.
""கவலை வேண்டாம். நான் அமெரிக்கா போனதும் தேவையான தரமான நூல்களை அனுப்பி வைக்கிறேன்'' என்று சொல்லி எழுந்தார் அந்தப் பணக்காரர்.
அந்தச் சம்பவத்தை, வேலைப் பளு காரணமாக கமிஷனர் மறந்தே போனார். சில மாதங்கள் நகர்ந்தன. ஒருநாள், உதவி காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு மிகப் பெரிய பார்சல் வந்திறங்கியது. என்னவாக இருக்கும்..என்று எல்லோரும் மலைத்து நின்றார்கள். சொன்னது மாதிரியே, அந்த தனவான் சுமார் 5000 புதிய நூல்களை திருப்பூர் உதவி காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.
பார்சலைப் பிரித்ததும், அனைவரும் அசந்து போனார்கள். புதிய புத்தகங்களின் வாசனை ஒருபுறம் தூக்க, வண்ண வண்ண நிறங்களில் கவர்ச்சிகரமான அட்டை... தரமான தாள்கள். பக்கங்கள் அதிகம் இருந்தாலும் எடை குறைவானதாயும் பிரமாதமாகப் பைண்டிங் செய்யப்பட்ட பல்வேறு தலைப்புகளில் சிறு மாணவ மாணவிகளுக்கான புத்தகங்கள். உடனே தலைப்பு, பொருள் வாரியாகப் பிரித்து வரிசை எண் போட்டு, அங்கிருந்த செல்பில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டன. இப்படி ஒரு நூலகம் தொடங்கப்பட்டிருப்பது பற்றி, திருப்பூர் நகர எல்லா பள்ளிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. இந்த 5000 நூல்களில் 2000 நூல்கள் உள்ளூர் ரோட்டரி கிளப்பிற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. என்சைக்கிளோபீடியாவிலிருந்து சித்திரக் கதைகள், சிறுகதை, பல்வேறு வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் இந்தத் தொகுப்பில் அடங்கும்.
மேலை நாடுகளில் சிறுவர், சிறுமியர் வாசிக்கவோ, படிக்கவோ அல்லது தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளவோ, நூல்களைத் தொடுவதில்லை. வாசிப்பதில்லை. நூலகங்களுக்கும் போவதில்லை.
எல்லாம் இன்டர்நெட் இ புக்கில் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த நிலைமை இங்கு வர இன்னும் கொஞ்ச நாள் பிடிக்கும் என்பதால், இந்த அருமையான புத்தகங்கள் திருப்பூர் சிறுவர் சிறுமியர்க்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்'' என்கிறார் உதவி கமிஷனர்.
நூலகம் ஆரம்பித்து ஒரு மாதம் ஆகிறது. பள்ளி மாணவர்களிடமிருந்து நல்ல வரவேற்பு. சுற்று வட்டாரப் பள்ளிகளிலிருந்து தலைமை ஆசிரியரிடமிருந்து அறிமுகக் கடிதம் கொண்டுவரும் மாணவ, மாணவியருக்கு நூல்கள் வாசிக்கத் தருகிறோம். வீட்டுக்கும் எடுத்துப் போய்ப் படிக்கலாம். 15 நாட்கள் வரை புத்தகங்களை வைத்துக் கொள்ளலாம். என்ன? எல்லா நூல்களும் ஆங்கிலத்தில் உள்ளன. இந்த நூலகத்தைப் பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை என்ற உதவி காவல்துறை கமிஷனர் அவர் பெயர், படம் எதையும் போட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். கூடவே, நூல் தந்த தனவந்தரின் பெயரையும் சொல்லவில்லை.
வலது கையால் செய்யும் உதவி, இடது கைக்குத் தெரியக்கூடாது என்ற நல்ல எண்ணம் காரணமாக இருக்கலாம். உதவி காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ்காரர்களுக்கு நூலகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், சிறு மாணவர்களுக்கான நூலகம், உதவி காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் இயங்குவது ஒரு வித்தியாசமான விஷயம்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...