இழப்பு
அப்பாவால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருந்ததில்லை. அவருண்டு, அவர் வேலையுண்டு என்று இருப்பார்.


அப்பாவால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருந்ததில்லை. அவருண்டு, அவர் வேலையுண்டு என்று இருப்பார். ஒரு வாய் தண்ணீர் வேண்டுமென்றாலும் எழுந்து போய் எடுத்துக் குடித்து விட்டு வந்து உட்கார்ந்து கொள்வார். அம்மாவிடம், ""தண்ணி கொண்டா'' என்று கேட்டு இவன் பார்த்ததில்லை. அம்மாவும், ""நான் கொண்டு வந்து தரமாட்டேனா இதுக்காக எழுந்து போகணுமா?'' என்று கேட்டதில்லை. ஆனால் பல முறை அம்மாவுக்கு அப்பா எடுத்துக் கொடுப்பதைக் கண்டதுண்டு. அதற்குப் பெயர் அந்நியோன்யமா அல்லது வேறு என்ன என்று தோன்றும் இவனுக்கு.
""ஏம்மா, ஒரு நாளைக்காச்சும் நீ அப்பாவுக்குத் தண்ணி கொண்டு கொடுத்திருக்கியா? இப்டி அப்பாட்டக் கேட்கிறியே, உன்னைவிட வயசானவரில்லையா'' என்றான்.
""அதுனால என்னடா ரமணா, வேறே யார்ட்டக் கேட்பா? நீ பேசாம இரு'' என்றார் அப்பா.
""ஏன், என்கிட்டக் கேட்கலாமில்லே? வலிய உன்னை எழுப்பணுமா?''
""நான் எடுத்துக் கொடுத்துக் குடிச்சாத்தான்டா உங்கம்மாவுக்குத் திருப்தி. வாய்விட்டுக் கேட்கிறா... அப்டிக் கேட்கிறதுக்கு ஒருத்தி இருக்காளே, அதை நினைச்சு சந்தோஷப் படணும். மனுஷாளோட அருமையை அவா இருக்கிறபோதே உணர்ந்துக்கணும். அவளுக்கு என்னை விட்டா வேறே யார் இருக்கா? இதுல நானென்ன குறைஞ்சா போகப் போறேன்?''
அப்பாவின் பேச்சை அம்மா கேட்டுக் கொண்டுதான் இருப்பாள். ஆனால் ஒரு வார்த்தை பதிலுக்குச் சொல்ல மாட்டாள். முகத்தில் ஈயாடாது. எந்த உணர்ச்சியும் புரிந்து கொள்ள ஏலாது. அப்பாவின் இரக்கம் தோய்ந்த மனதை, அன்பு கலந்த வார்த்தைகளை அவள் உணர்ந்திருக்கிறாளா? அப்பா அளவுக்கு அம்மா இறங்கி வந்து பார்த்ததில்லை. சற்று கெத்து அதிகம். ரெண்டு பேரும் வேலை பார்ப்பவர்கள்தான். சம்பளம், அதிக பட்சமாக பத்தாயிரம் வித்தியாசம் இருக்கலாம். அம்மா அதிகமாய்த்தான் வாங்கினாள். அதனால் அப்பாவின் மேல் அலட்சியமோ என்று நினைத்திருக்கிறான். அதனாலேயே அப்பா தணிந்து போகிறாரோ என்றும் தோன்றும். அதுபற்றி அவர்கள் என்றும் பேசிக் கேட்டதில்லை. தானும் சம்பாதிக்கிறோம் என்கிற எண்ணம் அம்மாவுக்கு இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் வீட்டுக்குள் அதுவும் அப்பாவுக்கு நடுவே ஏனிந்த எண்ணம்?
திடீர், திடீரென்று கையில் புதிய சேலைகளோடு வந்து நிற்பாள்.
""ஆபீசில் கொண்டு வந்தான், அஞ்ஞ்சு தவணை'' என்று நீட்டிச் சொல்லிக் கொள்வாள். பெரிய லாபத்தைக் கட்டிக் கொண்டுவந்துவிட்ட மாதிரி. ""எதுக்கு இன்ஸ்டால்மென்ட்ல எடுக்கிறே? ரெடி கேஷாக் கொடுத்து கடைல போய் எடுத்தா ஆச்சு. தவணைல தர்றவன் கரெக்ட் ரேட்டுக்குத் தருவானா? இருநூறு கூட அதிகமாயிருக்கலாம். சரக்கும் தரமா இருக்கணுமே'' என்றார் அப்பா.
அவர் பேச்சின் நியாயத்தை அம்மா என்றுமே புரிந்து கொண்டதில்லை. "நீ என்ன சொல்றது, நா என்ன கேட்குறது' என்கிற நிலைதான்.
""எல்லாரும் எடுக்கிறா, நானும் எடுத்தேன்'' என்று மொட்டையாய் பதிலிறுத்தாள் அம்மா. எடுக்கத்தான் செய்வேன் என்று அர்த்தம் அதற்கு. விட்டுவிட்டார் அப்பா. அம்மாவின் வழக்கமாகி விட்டது அது. எடுத்து வந்த சேலைகளை அப்பாவிடம் காண்பிப்பது கூட இல்லை. கொண்டுபோய் பீரோவில் வைத்து விடுவாள். அப்பாவும் கண்டு கொள்ள மாட்டார்.
"சும்மாப் போட்டு மனசக் கசக்கிண்டு... எதுக்கு இது?' அப்பாவின் எண்ணம். "இந்த உலகத்துல யாரையும் சொல்லித் திருத்த முடியாது. அவா அவா பட்டுத்தான் திருந்தணும்'
அப்பாவின் எந்தப் பேச்சையும் அம்மா கேட்பதில்லை. ரெண்டுபேர் சம்பாதிக்கிற இடமெல்லாம் இப்படித்தான் இருக்குமோ சந்தேகப்பட்டான் இவன். தான் நினைத்தால், அதைச் செய்து விட வேண்டும் என்று துடித்தாள். அது நியாயமாய் இருந்தால் அப்பா உடனே, ""சரி, கிளம்பு'' என்பார். அல்லாதபட்சத்தில் அவரிடமிருந்து பதிலே வராது. அமைதிதான் அவரது மறுப்பு. அது புரிய, அம்மாவின் பிடிவாதம் இறுகும். அம்மா ஆள் வளர்ந்திருக்கிறாள். அறிவு வளரவில்லை என்று தோன்றும் இவனுக்கு.
""நா சொல்லிட்டேயிருக்கேன்... நீங்க பாட்டுக்குப் பேசாம இருந்தா எப்டி?''
""இப்போ அது அவசியம்தானான்னு யோசி..எனக்கென்னவோ சரியாப்படலை''
""எல்லாரும் கார்ப்பரேஷன் லாரிக்குக் காத்துண்டிருக்கா. அது என்ன தண்ணியோ? என்னைக்கு அந்த டேங்கை அவன் கழுவினானோ? வேலைக்கு ஆள் போட்டாலும் புண்ணியமில்லை. ஒரு அக்வாகார்டு வாட்டர் ஃபில்டரை வாங்கி மாட்டுங்கோ. அதுதான் சரிப்படும்''
அப்பாதான் போய் தண்ணீர் கொண்டுவந்து கொண்டிருந்தார். எங்கெங்கிருந்தோ பிடித்து வருவார். அதைக்கூட அம்மா கேட்க மாட்டாள். "கொண்டுவரட்டுமே, சுருங்கியா போறார்' என்ற நினைப்பு.
""பன்னெண்டாயிரம் செலவழிச்சு வாங்கித் தொங்க விடுறது பெரிசில்லே. அது தொடர்ந்து உபயோகப்படுமாங்கிறதை யோசிக்கணும். தண்ணியைச் சுத்தப்படுத்தி, குறிப்பிட்ட அந்தப் பர்சன்டேஜூக்குள்ள இருக்காங்கிறதைப் பார்க்கணும். இந்த ஏரியாத் தண்ணி அந்தக் க்வாலிட்டில இல்லைங்கிறாங்க. பல வீடுகள்ல அந்த மெஷின் சும்மாக் கெடக்கு. எட்டு லிட்டர் தண்ணி கிடைக்க, பதினாறு லிட்டர் தண்ணி வீணாகும். எலெக்ட்ரிசிடி வேறே. அப்டியும் கிடைக்கிற சுத்தப்படுத்தின தண்ணி, டேஸ்டே இல்லை. கடுக்கிறதுங்கிறாங்க. சாதம் மஞ்சளா வருதுங்கிறாங்க. நல்லா யோசி''
""சரி, யோசிக்கிறேன். நீங்க ஒரு வாரத்துக்குக் ஹோட்டல்ல சாப்பிடுங்கோ'' என்றாள் அம்மா பட்டென்று. அப்பாவின் முகம் வாடிப் போனது. அம்மாவின் பேச்சு தெறித்து விழும். கொதித்திருக்கிறான் இவன். "மட்டு மரியாதை இல்லையா, என்ன பட்டுத்தெறித்த பேச்சு?'
""ஏம்மா நீ இப்படி இருக்கே? ரொம்பவும் எடுத்தெறிஞ்ச பேச்சும்மா. அப்பாட்டயே இப்டிப் பேசினேன்னா வெளில எப்டியிருப்பே? அங்கமட்டும் வாலச் சுருட்டிக்குவியோ?''
""நீ ஒண்ணும் சொல்ல வேணாம். ஜோலியப் பார்த்துண்டு போ''
இவனுக்கு வெறுத்துத்தான் போனது. அதனால்தான் அப்பா இப்படி அமைதியானவராகிவிட்டாரோ? துஷ்டனக் கண்டா தூர விலகு என்கிற கதைதான். அப்பா ஒன்று சொல்லி அம்மா கேட்டதாய்ச் சரித்திரமில்லை. எடுத்ததற்கெல்லாம் வாக்குவாதம்தான், சண்டைதான். அமளி துமளிப்படும் வீடு.
அப்பா நண்பர்களுடன் சேர்ந்து டூர் போனபோது எடுத்த பழைய புகைப்பட ஆல்பங்களையெல்லாம் பார்த்திருக்கிறான். நல்ல ஜாலியான டைப்பாகத்தான் இருந்திருக்கிறார். வாய்விட்டு அம்புட்டுப் பல்லும் தெரியும் விதத்தில் அவர் சிரித்துக் கொண்டிருக்கும் வெடிச்சிரிப்பு மறக்க முடியாதது. கூட்டத்திற்கே விதூஷகனோ என்று நினைப்பான். அந்தச் சிரிப்பு, புகைப்படங்களோடு நின்று போனது கடைசியாய். அப்பா சிரிப்பை எப்போது பார்த்தோம் இவனுக்கே சந்தேகம்தான். நிஜ வாழ்க்கையில் தன்னைப் பெரிதாக முன்னிறுத்திக் கொள்ளாத போக்கு. எதிலுமே விட்டுக் கொடுக்கும் முதல் ஆளாக அப்பாதான் நின்றார். ஒன்றிலாவது அம்மா அட்ஜஸ்ட் ஆனதாய்ச் சரித்திரமில்லை. விதூஷகன் போன்ற வார்த்தைகள் சிலவற்றையுமே அவர் படிக்கும் புத்தகங்களிலிருந்துதான் கற்றுக் கொண்டான். பழம் பெரும் தமிழ் வார்த்தைகள் என்றாலும் அவை எத்தனை கனப் பொருத்தமானவை என்று தோன்றும். அவைதான் அப்பா படிக்கும் புத்தகங்களைத் தேட வைத்தது.
கல்யாணத்திற்கு முன்பு நண்பர்களோடு சேர்ந்து சொந்த ஊரில், கோயில் விசேஷங்கள், திருவிழாக்கள், பள்ளி நிகழ்ச்சிகள் என்று அப்பா டிராமா போட்டிருப்பதும், அதிலெல்லாம் வில்லன், காமெடியன், பாத்திரங்கள் ஏற்று நடித்திருப்பதும், வேலைக்கு வந்த பின்புஅத்தனையும் மொத்தமாய் நின்று போனதும் அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறான். அடையாளத்திற்கு அவர் வைத்திருந்த சில புகைப்படங்களே இன்று சாட்சிகள். இப்போது அவருக்குத் துணையாய் இருப்பது விரும்பிப் படிக்கும் புத்தகங்கள்தான்.
அம்மா, பெயருக்கு வெறும் வாழ்க்கைத் துணை. ஊருக்குத் தெரிய. சமூகத்திற்குப் பயந்த கட்டுப்பாடு. வழி வழி வந்த அறம். குடும்ப அமைப்பின் நெறிமுறை. ""அடேயப்பா ரெண்டு பேருக்குள்ளயும் என்னவொரு அந்நியோன்யம்?'' ஊர் அப்படித்தான் சொன்னது. சுமுகம் என்றால் என்ன? சதா கீரியும், பாம்புமாய் நிற்பதா? அப்படிச் சொல்லக் கூடாதுதான். அப்பா எலியாய்த்தான் பதுங்கினார். அம்மாதான் பூனையாய்க் கருவினாள். அப்படி பயப்படுவது தேவையில்லை என்றுதான் தோன்றியது. அதை பயமில்லை என்றார் அப்பா.
""பின் வேறென்ன?''
""பரஸ்பரம் இருவருக்கிடையிலான தாம்பத்யத்தின் சங்கீதம்'' என்பார். இவன் சிரிப்பான். ""புரியலை
யேப்பா'' என்றான் ஒரு முறை. ""நீ கல்யாணம் பண்ணுஅப்புறம் புரியும் எல்லாம்'' என்று முடித்து விட்டார். அப்பா அம்மாவை முழுமையாக நேசிக்கிறார் என்றுதான் தோன்றியது. முறையான திருமணத்திற்குப் பின் மனைவியைக் காதலிக்கும் முறைமை. அதுதான் வாழ்க்கையின் தத்துவம். அந்த அளவுக்கான ரெஸ்பான்ஸ் அம்மாவிடம் இல்லை. விலையற்றுப் போகிறார் அப்பா என்று தோன்றியது. அப்பாவின் நேசிப்புக்கும் காரணங்கள் இருந்தன.
அவர் ஒரு புத்தக விரும்பி. தரமான வாசகர். அதுவே காரணம். அது அவரைப் பக்குவப்படுத்தியிருந்தது. அவர் ஓர் இலக்கிய வாசகர். வாசிப்பை உழைப்பாய்க் கருதிப் படிக்கக் கூடியவர். ஆழமான வாசிப்புண்டு. மேம்போக்கான நுனிப்புல் மேயும் போக்கு இல்லை. அந்தக் கால எழுத்தாளர்களிலிருந்து இன்றுவரை உள்ள இளம் படைப்பாளிகள் வரை அறிந்து வைத்திருந்தார். யார், யார் என்னென்ன குறிப்பிட்ட படைப்புக்களில் தங்களின் முத்திரையைப் பதித்திருக்கிறார்கள் என்று சொல்வார். எந்தெந்தத் தேர்ந்த படைப்பாளிகளின் எழுத்துகள் இன்று நீர்த்துப் போய்க் கிடக்கின்றன என்பதையும் குறிப்பிடுவார். ஒரே வட்டத்துக்குள் யாரெல்லாம் சுழல்கிறார்கள் என்பார். நாவல் என்கிற பெயரில் எம்புட்டுக் குப்பைகள் வாசிப்பு சுகத்திற்காக எத்தனை கதைகள் என்று எடுத்து விடுவார். அவரின் எல்லை மிகவும் விரிவானது. அந்த ஆர்வத்தைப் பார்த்துத்தான் இவனும் படிக்க ஆரம்பித்தான். அவர் தேர்ந்தெடுத்து வாங்கி வரும் புத்தகங்கள் தரமாய் இருப்பதாகத் தோன்றின. எது நல்ல எழுத்து என்று அறிந்து வைத்திருந்தார் அப்பா. ""இதப் படி'' என்று அவர் தருவதை, பொக்கிஷமாய் உணர்ந்தான். பல தரப்பட்ட மனிதர்களை, இந்த சமூகத்தை, படிப்படியாக உள்வாங்க ஆரம்பித்தான் இவன்.
""இலக்கியம் மனுஷ மனங்களை விரிவு படுத்தும் இந்த சமுதாயத்தையும், அதோட நிகழ்வுகளையும் அறிஞ்சு, நம்மை மிகச் சிறந்த விவேகியாக மாத்தும். ரொம்ப அமைதியானவனா ஆக்கி விட்ரும். எல்லாமுமாத்தான் இந்த உலகம் இருக்கும்ங்கிற பக்குவத்தை எட்ட வச்சு, மன முதிர்ச்சி உள்ளவனா மாத்திடும். வாழ்க்கைல அனைத்து அனுபவங்களும் மனுஷாளுக்குக் கிட்டுறதில்லை. ஆனா அந்த மாதிரிக் கிடைக்காத அனுபவங்களை அடைஞ்ச, அனுபவிச்ச, பெரியவங்க எழுதி வச்ச புத்தகங்களைப் படிக்கிறபோது, நமக்கும் அந்த அனுபவம் சாத்தியமாறது. அதுதான் படிப்படியா நம்மை முழுமையான மனுஷனா மாத்துது. அந்த எல்லையைத் தொட்டுட்டோம்னு வச்சிக்கோ. அப்புறம் எதிராளிகளோட உணர்ச்சி வசப்பட்ட பேச்சுக்களையெல்லாம், டென்ஷன்களையெல்லாம் பார்த்தும், கேட்டும், அமைதியா மனசுக்குள்ள சிரிக்கத்தான் தோணும். எல்லாத்தையும் ஆழ்ந்த அமைதியோட எதிர்நோக்குறது இருக்கே அந்த இன்பமே தனி. நிர்மலமான தடாகமா மாறிடும் மனசு''
அப்பா பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். வீட்டில், உறவுகளுக்கு மத்தியில், அலுவலக நண்பர்களுக்கு இடையில் என்று அப்பா அதிகம் பேசிக் கேட்டதேயில்லை. மற்றவர்கள் பேசுவதைத்தான் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். கீன் அப்சர்வேஷன் என்று நினைப்பான். அமைதியே உருவாய்ப் பிறரை உள் வாங்குவதில் அப்பாவுக்கு ஈடேயில்லை. ஆனால் எவரையும் குறைத்து மதிப்பிடவே மாட்டார். ""எல்லார்ட்டயும் எதாச்சும் இருக்கும், இந்த உலகத்துல ஜனிச்ச புல், பூண்டு ஒண்ணொண்ணுக்கும் ஒரு உபயோகம் இருக்கு எதுவும் வீணாப் போறதில்லே. எல்லாத்தையும் மதிக்கக் கத்துக்கணும்''. ஒரு தேர்ந்த சந்நியாசியின் மனநிலையில் மழையாய்ப் பொழிவார் அப்பா. வானப்ரஸ்த நிலை. ""நான் என்னிக்கோ சட்டையை உரிச்சவன்டா'' என்றார் ஒருநாள். அந்தப் பேச்சு அடிக்கடி இவன் மனதைப் பாடாய்ப் படுத்தும்.
அதுவே அவரை ஒதுக்கியது. தனியனாக்கியது. நம்மால் எதற்கு அடுத்தவர்களுக்கு சிரமம் என்ற நினைப்பு தீவிரமாய் உண்டு. யோகியின் மனநிலை. அம்மாவின் கோபதாபங்களின் முன்னால், ஒரு மென்சிரிப்பு. மிக எளிதாக அதனை ஒதுக்கிவிட்டுச் செல்லும் பாங்கு.
""யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்காமல் சீக்கிரம் போய்ச் சேரணும்'' இதுதான் சமீபமாய் அப்பா அடிக்கடி சொல்லிக் கொள்வது.
படுக்கையில் விழுந்து விடுவோமோ? என்று பயந்தார். கைகளையும், கால்களையும் அடிக்கடி உதறிவிட்டுக் கொள்வதைப் பார்த்தால், அந்த நினைப்பிலேயே இருக்கிறாரோ என்று தோன்றும்.
கீழே அமர்ந்து எழும்போது,""அம்மாடி என்ற முனகல் வரக்கூடாது'' என்பார். அந்தத் தடுமாற்றம் வந்துவிட்டால் முதுமை எட்டி விட்டது என்று அர்த்தமாம். ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தன. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஐந்து வயது வித்தியாசம். அதனாலேயே அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வருகிறதோ என்று நினைப்பான் இவன்.
போஸ்டலில் செக்ஷன் சூப்பிரன்டென்டாக இருந்தார் அப்பா. நகரின் பரபரப்பான முக்கிய இடம். கெüன்டர்களில் கூட்டம் மொய்க்கிறது என்றால் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டார். எழுந்து சென்று இருப்பவர்களுக்கு உதவி செய்வார். பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு, ""உங்களுக்கு என்ன? உங்களுக்கு என்ன?'' என்று கேட்டு பதிவுகளையும் பார்சல்களையும் கணினியில் பதிவு செய்து, காசை வாங்கிப் போட்டு, ரசீதை சரக் சரக்கென்று கிழித்துக் கொடுத்து, சட்டுச் சட்டென்று கூட்டத்தைக் குறைத்து விடுவார்.
""நான் பார்த்துக்கிறேன் சார். நீங்க போங்க'' என்றாலும் கேட்க மாட்டார்.
""ரொம்பக் கூட்டமா இருக்கே. இன்னைக்கு டி.என்.பி.எஸ்ஸி., அப்ளிகேஷன்ஸ் வேறே அதுக்கு போஸ்டல் ஆர்டர் வேறே. பரவால்ல இருக்கட்டும்'' என்று எந்த கெüரவமும் பார்க்காமல் அவர் கெüன்டர்களுக்கு உள்ளே இயங்குவது, வெளியே நிற்கும் பொதுஜனத்தை வாயடைக்க வைத்து விடும்.
""நா இருக்கிறவரைக்கும் இந்தக் காம்ப்ளெக்சுல எந்தக் கம்ப்ளெயின்டும் வரக்கூடாது. உங்க எல்லாருக்கும் உதவறதுக்குத்தான் நா இருக்கேன். பேசாம உட்கார்ந்துண்டு வேடிக்கை பார்க்கிறதுக்கில்லே. வெறுமே கண்காணிக்கிறதுக்கில்லை. வாயால விரட்டுறதுக்கில்லே. நானும் நிறையச் செய்த மாதிரி இருக்கணும். எல்லாரையும் அட்மினிஸ்டர் பண்ணின மாதிரியும் இருக்கணும். அப்பத்தான் நீங்க எல்லாரும் உற்சாகமா வேலை பார்ப்பேள். இது சிம்பிள் சைக்காலஜி''
அப்பா இருக்குமிடத்தில் பலரும் வேலை பார்க்க ஆசைப்பட்டார்கள். எழுத்தர்கள் ஒரு சிலர் அவரிடமே வந்து மாறுதலுக்குக் கோரிக்கை வைக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறான் இவன். எப்போதோ ஓரிரு முறை போனதுதான். பெரும்பாலும் ஆபீசுக்கெல்லாம் வரக் கூடாது என்றுதான் சொல்வார். அப்படியும் தவிர்க்க முடியாமல் அமைந்த சில வேளைகளில், அப்பாவின் மேல் பிரியமுள்ள பணியாளர்களை, மரியாதை கொண்ட நண்பர்களை, அவர்களுக்கு மத்தியில் அவரின் மலர்ந்த முகத்தைப் பார்த்து வியந்திருக்கிறான். இந்த அளவுக்கான சிரிப்பும், கும்மாளமும் வீட்டில் இருந்ததில்லையே என்பதை நினைத்த போது அதற்குக் காரணம் அம்மாதான் என்பது உறுதிப்பட்டது.
ரெண்டு பேர் சம்பாதிக்கும் வீடு. போதிய வருமானம் வருகிறது, சேவிங்க்ஸ் இருக்கிறது, சொந்த வீடு இருக்கிறது. ஒரு பிள்ளை, நான் இருக்கிறேன். அப்படியிருந்தும் தேவையான மகிழ்ச்சியில்லையே வீட்டில் என்பதை நினைக்கும் தறுவாய்களில் ரமணனுக்கு மிகவும் வேதனையாய் இருக்கும். முடிவில் அப்பாவின் மேல்தான் பரிதாபம் எழும். வெறும் பணம் மட்டும் நிம்மதியைக் கொடுக்காது என்பதற்கு இதைவிட வேறு என்னதான் உதாரணம் வேண்டும்? அது இல்லாத எத்தனையோ ஆயிரம் குடிசைகளில் எவ்வளவு நிம்மதி தவழ்கிறது. அவர்களை அன்றாடங் காய்ச்சி என்கிறோம் நாம்.
அப்பாவின் சகிப்புத்தன்மையில்தான் குடும்பத்தில் ஒற்றுமை என்பது அமைதியான புயலாய் எழும்பத் திராணியில்லாமல் அமுங்கிக் கிடக்கிறதோ என்று பல சமயங்களில் தோன்றியிருக்கிறது. அதையும் ஒரு நாள் உணரத்தான் செய்தான். அன்றுதான் அப்பாவிடமிருந்து வெளிப்படையான அந்தப் பேச்சைக் கேட்டான். அதுதான் அவரின் உண்மையான சொரூபம் என்று தெரிந்தது. நெஞ்சின் ஆழத்தில் அழுந்திக் கிடந்த குமுறல் அன்று வெடித்தது.
""இந்த பார்..நா இந்த சமூகத்துக்காக உன்னோட வாழ்ந்திட்டிருக்கேன். தப்பு தப்பு. இருந்திட்டிருக்கேன். வாழலை. சேர்ந்து இருக்கிறவங்களெல்லாம், சேர்ந்து வாழறதா அர்த்தமில்லை... நமக்குக் கல்யாணம் ஆகி இருப்பத்தாறு வருஷம் ஆச்சு. ஒரு பையன் இருக்கான். நம்ம வாழ்க்கை முடிஞ்சு போச்சு. இனி அவனோட லைஃப்தான் முக்கியம். அதை அமைச்சுக் கொடுக்க வேண்டியது நம்மளோட கடமை. இதுக்கு நீ ஒத்துழைக்கிறியோ இல்லியோ, நான் அதைக் கண்டிப்பா செய்து முடிப்பேன். அவன் நமக்குக் கிடைச்ச நல்ல பையன். உன்னையும், என்னையும் புரிஞ்சிண்டு இன்னை வரைக்கும் நம்மளோட பாலன்ஸ் பண்ணின்டிருக்கிற பெரிய ஞாநி அவன். இன்னொரு பிள்ளையாயிருந்தா எப்படியோ தொலைங்கன்னு என்னைக்கோ நம்மளை விட்டுப் பிரிஞ்சு போயிருப்பான். ஆனா இவன் அப்படியில்லை. உன் பிள்ளை நம்மளை வச்சு, தன் வாழ்க்கையைப் புரிஞ்சிண்டவன். தான் எப்படித் தன்னோட வாழ்க்கையை லீட் பண்ணனும்னு அறிஞ்சிண்டவன். ஏதோவொரு வகைல நாம அவனுக்கு நன்மைதான் செய்திருக்கோம். ஆகையினால உன்னால ஏற்படுற எந்த அவமானங்களும் இனி எனக்கு ஒரு பொருட்டில்லை. ஏன்னா என்னோட மையப் புள்ளி என் மகன்தான். அவனோட மகிழ்ச்சியான வாழ்க்கைதான். இதே ரீதில எல்லாத்தையும் புரிஞ்சிக்க முடியும்னா முயற்சி பண்ணிப்பாரு. இல்லையா விட்ரு. ஐ டோன்ட் கேர். எனக்கு எந்த நஷ்டமும் நேர்ந்துட்டதா நா நினைக்கலே. நினைக்கத் தயாரில்லே. ஏன்னா என்னோட ஒரே எய்ம் எம்பையனோட பெஸ்ட் லைஃப். ஹேப்பி லைஃப். தட் இஸ் த ஒன்லி எய்ம். மை ஆம்பிஷன்மை கோல்'' அப்பா சொல்லி முடித்தார்.
""அம்மா அமைதியாய் நின்றாள். காது கொடுத்துக் கேட்டாளா என்பதே சந்தேகமாயிருந்தது, மூஞ்சியை ஒரு பக்கமாய்த் திருப்பிக் கொண்டு அவள் நின்ற கோலம்... அடடா... என்னவொரு அலட்சியம் நல்லதாப் போச்சு. நமக்குப் பொறுப்பு விட்டுது என்று நினைத்து விட்டாளோ? அன்றாட மகிழ்ச்சி, திருப்தி என்பதை வலிய இழந்து நிற்கிறோம் என்பதைக் கொஞ்சமேனும் உணர்ந்தாளா? கேள்விதான் இன்றுவரை தொக்கி நிற்கிறது. எல்லாமும் இருக்கிறது. ஆனால் எதுவும் இல்லை. இருந்தும் இல்லாத அமானுஷ்ய நிலை. மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
""குடிக்கத் தண்ணி கொடுங்கோ'' என்று சகஜமாய் உரத்துக் கேட்கும் உரிமை மட்டும் எங்கிருந்து வருகிறது? அதில் கூட ஒரு நைச்சியம் இல்லியே. எடுத்துக் கொடுக்கும் அப்பாவிடம் இருக்கும் கருணை, அன்பு, நேயம் அம்மாவிடம் எங்கே போனது? அப்பாவைப் பொறுத்து மட்டும் அது ஏன் காணாமல் போகிறது? விடையில்லை.
இவங்க வாழ்க்கையே புரியாத புதிருப்பா.. கடியாக் கடிக்கிறாங்களே... ப்ராக்டிகலா போற டெய்லி ரொட்டீனை ஏனிப்படி அநாவசியமாக் கெடுத்துக்கிறாங்க? டேக் இட் ஈஸிங்கிறதே ஏன் இவங்ககிட்டே இல்லாமப் போச்சு ?
எலியும் பூனையுமா இருப்பாங்களாம். எடுத்ததுக்கெல்லாம் அடிச்சிப்பாங்களாம். அர்த்தமில்லாமப் பேசிப்பாங்களாம். ஆகாசத்தப் பார்த்துப்பாங்களாம். முதுகுக்கு முதுகு முறுக்கிப்பாங்களாம். ஆனா அதுக்குப் பேரு குடும்பமாம். வாழ்க்கையாம். வீடுன்னா அப்டித்தான்னு சொத்தையா ஒரு கமென்ட் வேறே. ஒரே கசமுசாவால்ல இருக்கு. ப்ளடி ஃபூல்ஸ்..
யப்பா சாமி... மண்டையப் பிச்சிக்கலாம் போலிருக்கு. ஆளவிடுங்க. உங்க கேட்டகரியே சப்பையாத் தெரியுது எனக்கு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸரியான லூஸþங்க... இளைய தலைமுறை தலையைச் சிலுப்பிக் கொள்கிறது. கலைந்த முடியால் முகத்தை மூடிக் கொள்கிறது.
சொல்லிக் கொண்டே தட்டு எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்த ரமணன், ""யம்மா. எனக்குச் சாப்பாடு போடு. பயங்கரமாப் பசிக்குது..'' என்று வீடே அதிரும்படி கத்தினான். சந்தியாவும், ரங்கநாதனும் அடுப்படியை நோக்கி ஒரே சமயத்தில் வேகமாய் ஓடி வந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...