நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அழிவின் விளிம்பில் உள்ள 5 மரங்கள்!

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில், உயிரியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் ஆர்.ராமசுப்பு.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:29 am

ஆ. நங்கையார் மணி

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தில், உயிரியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் ஆர்.ராமசுப்பு. விருதுநகர் மாவட்டம், சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த இவர், பசுமையான காடுகள் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், குமரி முதல் மஹாராஷ்ட்ர மாநிலம் வரையிலும் பல ஆய்வுகளைச் செய்துள்ளார்.

அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதன் மூலம், இயற்கை வளம் பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கான உறுப்பினராகவும் உள்ளார்.

இதுதொடர்பாக அவரிடம் பேசியபோது:

""சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்துள்ள இயற்கை வளம் பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பில், ஆசிய கண்டத்திலிருந்து 9 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். உலகின் அரிய வகைத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அதிகபட்சமாக ஆசிய நாடுகளிலேயே உள்ளன. இதில், பல விலங்குகளும், தாவரங்களும் அழியும் நிலையில் உள்ளன. அழிவின் அடிப்படையில், 3 பிரிவுகளில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அழிந்த உயிரினங்கள், மிகவும் அழிவை எதிர் நோக்கியுள்ள உயிரினங்கள் மற்றும் அழியும் தறுவாயில் உள்ள உயிரினங்கள். ஒவ்வொரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இறுதிக் கட்டத்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்க, இயற்கை வளம் பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆய்வு அறிக்கையினை ஐநா சபைக்கு அனுப்பி வைத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இயற்கை பாதுகாப்பு ஒருபுறம் இருந்தாலும், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற சுய நலமும் இதில் அடங்கியுள்ளதால், ஆய்வு அறிக்கையின் முக்கிய அம்சங்களை, ஐநா சபை கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என நம்புகிறோம்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் மட்டுமே வாழும் 5 வகையான தாவரங்கள் அழிவை எதிர் நோக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

நெல்லை மாவட்டம், அகஸ்தியர் மலையில் உள்ள கோதையாறு வனப் பகுதியில் மட்டுமே மஞ்சகஞ்சி மரங்கள் உள்ளன. மருத்துவம் மற்றும் மர சாமான்கள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதால், இந்த வகை மரங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன.

மஞ்சகஞ்சி மரத்திலிருந்து, ஹெச்ஐவி நோய்க்கு மருந்து தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானல் வனப் பகுதியில், ஒரே ஒரு காட்டு ருத்ராட்சம் மரம் உள்ளது. இது தவிர, உலகின் வேறு பகுதியில் இந்த மரம் இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. இதன் பழங்கள் பறவைகளுக்கு உணவாகின்றன. இலைகளில், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் வேதிப் பொருள்கள் உள்ளன.

மலம்பொங்கு என்ற மரத்தின் பட்டையிலிருந்து வடியும் திரவத்தில் மருத்துவ குணம் உள்ளதால், காணி இன மக்கள் அதைப் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். திரவத்திற்காக பட்டைகள் உரிக்கப்படுவதால், இந்த மரங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன.

தமிழகம் மற்றும் கேரள வனப் பகுதியில் மட்டுமே காணப்படும் மரம் காட்டு நாவல்.

இந்த மரத்திலிருந்து செய்யப்படும் தட்டில் சாப்பிட்டால், நீரழிவு நோயைக் குணப்படுத்த முடியும். மருத்துவரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதேபோல், மலை பொங்கு என்ற மரமும் அழிவின் விளிம்பில் உள்ளது.

இந்த 5 மரங்களையும் பாதுகாக்க பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில் ரூ.33 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. விதைகள் மற்றும் திசு வளர்ப்பு தொழில்நுட்ப முறையில் அழியும் நிலையில் உள்ள தாவரங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.