ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கண்களுக்கு ஓய்வு... மனதுக்கு நிம்மதி!
ஓயாத படிப்பு ஓரளவு இதற்குக் காரணமாகலாம். அப்படியிருந்தால் எல்லாவிதமான படிப்பையும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நிறுத்திவிடவும்.


என் வயது 19. நிறைய படிக்கவேண்டிய நிர்பந்தத்தினால் பல நாட்களாக ஓயாத தலைவலியால் அவதிப்படுகின்றேன். கண்ணாடி போட்டும் பயனில்லை. கண், புருவம் போன்ற இடத்திலும், நெற்றிப்பொட்டிலும் கடுமையான வலி. தலைமுடியும் நரைக்கின்றது. இதற்கு என்ன செய்வது?கண்ணன், தாடிக்கொம்பு.
ஓயாத படிப்பு ஓரளவு இதற்குக் காரணமாகலாம். அப்படியிருந்தால் எல்லாவிதமான படிப்பையும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நிறுத்திவிடவும். ஏனென்றால் கண்கள் அளவுக்கு மீறி செயல்படும்போதும், கண்களில் ஏற்படும் அயர்வும் தானே நீங்காவிட்டாலும், இந்தத் தலைவலியானது தொடர்ந்து இருக்கக் கூடும். இரண்டுவகையிலும் கண்களுக்கு ஓய்வு உங்களுக்கு மிகவும் தேவை. கண்களில் உள்ள அழற்சி, அயர்வு இரண்டையும் நீக்கிக் கொள்வதற்கு தினமும் கண்களுக்கு இனிமையான குளிர்ந்த தோற்றமுள்ள பூங்கா முதலியவற்றில் பார்வையைச் செலுத்தலாம். வாய் நிறைய தண்ணீர் நிரப்பிக்கொண்டு கண்களைச் சுத்தமான தண்ணீரை விட்டு கழுவிக் கொண்டால், கண்களில் அயர்வு நீங்கும். தவிர்க்க வேண்டியவற்றில், இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், கடுமையான வெயில் மற்றும் கடுமையான பனியின்போது வெளியே செல்லுதல், கண்களின் தாங்கும் சக்திக்கு மீறிய மிகவும் வெளிச்சமான பகுதிகளை பார்க்க நேர்வது போன்றவற்றை நீங்கள் தவிர்ப்பது நலம்.
மற்றொரு வகை தலைவலி ஏற்படக் காரணமாக இருப்பது உடலின் உட்காங்கை எனப்படும் உடற்சூடு மற்றும் உடற்சோர்வு நீங்காது இருத்தல் ஆகியவையாகும். இதுபோன்ற நிலைகளில் கண்ணாடி போட்டுக் கொள்வது உதவாது. உடலில் சோர்வு நீங்குவதற்கு ஆயுர்வேதமூலிகைத் தைலங்களாகிய பலா அஸ்வகந்தாதி தைலம், பலா லாக்ஷாதி தைலம், மஹாமாஷ தைலம் போன்றவற்றில் ஒன்றை உடலெங்கும் வெதுவெதுப்பாகத் தேய்த்து, பிடித்துவிட்டு வெந்நீரில் குளிப்பதால் உடல் உறுப்புகள் சோர்வு நீங்கி ஓய்வு பெறும். இதுபோன்ற உபாதைகளால் ஏற்படும் தலைவலி நீங்குவதற்கு அஸ்வகந்தாதி சூரணம், அஸ்வகந்தாதி லேஹ்யம், ச்யவன ப்ராஸம், தசமூலாரிஷ்டம், அஸ்வகந்தாரிஷ்டம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி டானிக்காக தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கற்பூரசிலா சத்து பஷ்மம் என்ற மருந்தை வேளைக்கு மூன்று அல்லது ஆறு சிட்டிகை அளவு சிறிது நெய்யில் குழப்பிச் சாப்பிட்டு மேல் சுக்கு அல்லது ஜீரகம் போட்டுக் காய்ச்சிய வெந்நீர் சாப்பிட்டு வர தலைவலி நிற்கும். தலையில் நீர்க்கோர்வையினால் ஏற்படும் தலைவலிகளுக்கு அஸனவில்வாதி தைலம், அஸனஏலாதி தைலம், அஸனமஞ்சிஷ்டாதி
தைலம் போன்றவற்றில் ஒன்றை தலைக்குத் தேய்த்து குளிக்கப் பயன்படுத்தலாம். நரம்புகளில் ஏற்படும் வாயுவின் சீற்றத்தினால் ஏற்படும் தலைவலிகளுக்கு க்ஷீரபலா, பலா குடூச்யாதி, கார்பாஸாஸ்த்யாதி போன்றவை தலைக்குப் பயன்படுத்த உகந்தவை.
உடல் சூட்டினால் சிலருக்கு தலைவலி ஏற்படுவதுண்டு. கோரைக் கிழங்கு, சந்தனத்தூள், சுக்கு, வெட்டிவேர், பர்பாடகப்புல், விலாமிச்சை வேர், இவற்றைக் கிடைத்தமட்டில் சம எடையாகச் சேர்த்து பெருந்தூளாக இடித்து கொதிக்கும் வெந்நீர் 200 மில்லி லிட்டரில் இரண்டு, மூன்று டீ ஸ்பூன் இந்த தூளை போட்டு டீ போடுவதுபோல மூடி வைத்து, நன்கு ஆறியதும் தேவையானால் கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்துச் சாப்பிட உடல் தாபம் அடங்கி தலைவலி நீங்கும்.
மூக்கடைப்பினால் ஏற்படும் தலைவலியில் அனுதைலம் என்ற மூக்கில் விடும் சொட்டு எண்ணெய்யை இரண்டு மூன்று சொட்டுகள் இரு நாசி துவாரங்களிலும் விட்டுக்கொண்டு வர தலைக்கனம், மூக்கடைப்பு, தலைவலி நீங்கும். மூளை நன்றாக பலம் பெறும். இரவு சாப்பாட்டில் புளி, காரம் குறைப்பது, கிழங்கு வகைகள் ஆறிய உணவு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. குடிக்கச் சூடாக வெந்நீர், தலைக்கு இளஞ்சூடான தண்ணீரும், உடலுக்கு சற்று சூடான வெந்நீரும் உபயோகிக்கலாம்.
தலைவலி இருக்கும்போது இரு பொட்டுகளிலும் நாராயண தைலம், மஹாபலா தைலம், 101 ஆவர்த்தி க்ஷீரபலா தைலம், இவற்றில் ஒன்றை நெற்றிப் பொட்டில் தேய்த்துக் கொள்ள இதமாக இருக்கும்.
வாசனைகோஷ்டம் மற்றும் ரேவல் சீனிக் கிழங்கை பால்விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப் போட கடுமையான தலைவலி நீங்கும். ஜீரணசக்தி, உடல்அயர்வு நீங்கி ஓய்வு, பலம், கண்களின் ஓய்வு, மன நிம்மதி இவற்றைச் சரியாக பாதுகாத்துக் கொண்டால்தான் தலைவலி அறவே நீங்கும்.
(தொடரும்)
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...