/

வாழ்க்கை வாழ்வதற்கே!

எப்படித் தேடிக் கண்டு பிடித்து வந்தாள் என்று தெரியவில்லை. கோயிலில் வைத்துப் பார்த்தபோது இருப்பிடத்தைச் சொன்னோமோ என்று

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:30 am

உஷாதீபன்

எப்படித் தேடிக் கண்டு பிடித்து வந்தாள் என்று தெரியவில்லை. கோயிலில் வைத்துப் பார்த்தபோது இருப்பிடத்தைச் சொன்னோமோ என்று தோன்றியது. வெறுமே ஓரமாய் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு, ""வச்சுக்கோங்க'' என்று பணம் கொடுத்துத் திரும்பியதுதான். பெயர் மட்டும் சொன்னதாக ஞாபகம்.
 ""என் பேரனின் பேரும் சுந்தர் தான்'' பாட்டியின் முகத்தில் பூரிப்பு. அதே பெயர் கொண்ட எவனோ ஒருவனைப் பார்த்ததற்கா இவ்வளவு மகிழ்ச்சி? கன்னத்தை வழித்துச் சொடுக்கிக் கொண்டாள். உடனே வா ஒருத்தரோடு இப்படிப் பழக முடியும்?
 ஒரு வேளை அந்தப் பெயரே அவளை ஈர்த்து, இங்கு அழைத்து வந்து விட்டதோ? என்னவோ? ஏதோவோர் சக்தி என்று சொல்வார்களே, அப்படியிருக்கலாம்.
 அந்தப் பாட்டியைப் பார்த்தபோது இவனுக்கு அப்பாவைப் பெற்ற மரகதம் பாட்டியைத்தான் ஞாபகம் வந்தது. அச்சு அசலாக அப்படியேவா? ஆனால் இந்தப் பாட்டி சற்றுக் கறுப்பு. வயசு கூடக் காரணமாய் இருக்கலாம். அந்த முகத்தின் வாட்டத்தைக் கண்டு மனசே அதிர்ந்து போனது. வெளியே கூட்டிப் போய் டிபன் வாங்கிச் சாப்பிட வைத்து, மீண்டும் கோயிலுக்குள் வந்து அந்த மண்டப நிழலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தது. விட்டு வரவே மனசில்லை.
 "அய்யோ, அந்தப் பாட்டி இனிமேல் எங்கு போவாள்? எங்கு படுப்பாள்? எது அவள் இடம்? ஓர் இடம் என்று இல்லையென்றாளே? கடவுளே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, பிறகு எப்படிப் புறப்பட்டு வந்தோம்?' இந்த நிமிஷம் வரை அதே நினைவுதான். ஆனால் இதோ பாட்டி தன் முன்னால் எந்த சக்தி இழுத்து வந்தது அவளை? என்னவொரு ஆச்சரியம்!
 எங்கெங்கிருந்தோ புறப்பட்டு, நாலைந்து பேராகச் சேர்ந்து, ஏற்கெனவே பழகிய இடம் போல் வீடு வீடாக ஏறி இறங்கி கோயில் கொடை பெற்றுச் செல்லும் தீட்சிதர்களை அடிக்கடி எங்கள் தெருவில் நான் சமீபமாய்ப் பார்க்கிறேன். அதுபோலவே இந்தப் பாட்டியும் அறிந்த, பழகிய வீதி போல, வீடு போல வந்துவிட்டாளே?
 ""சீதா, பாட்டிக்குக் கொஞ்சம் சாம்பார் விடேன். வெறும் தோசையைச் சாப்பிடுறா பாரு..'' தயங்கியவாறே சொன்னான் சுந்தர்.
 ""இருக்கட்டும், போறும்'' - அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே மறுத்தாள் பாட்டி.
 ""கையைத் தள்ளிக்கிங்கோ'' படக்கென்று பாத்திரத்தினை அப்படியே கவிழ்த்தாள். இவ்வளவுதான். இதுக்கு மேலே இல்லை என்பதான அடையாளம் அது. அப்பொழுதுதான் கவனித்தேன் நான்.
 ""ச்சே. என்ன சீதா இது?'' கைப் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்.
 ""ஏன் என்ன ஃபிரிட்ஜ்ல வச்ச நேத்திக்கு சாம்பாரை நாம சுட வச்சு விட்டுக்கிறதில்லையா? தூரவா கொட்டறோம் பருப்பு சாம்பாராக்கும். கிலோ தொண்ணூத்தெட்டு ரூபா..ஞாபகமிருக்கட்டும்''
 புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அனைத்துமறிவோம் என்பதுபோல் கேட்டது, கேட்காதது எல்லாவற்றுக்கும் சேர்த்து பதில் சொல்லி விடுவாள். சுருக்கமாய்ச் சொன்னால் சற்று வாய் ஜாஸ்தி.
 ""சரி, அதை நாம விட்டுக்கலாமே.. ஒரு வயசான பாட்டி வீடு தேடி வந்திருக்கா. இருக்கிற இருப்புக்கு ஆச்சார அனுஷ்டானமெல்லாம் கிடையாதுன்னாலும், வயசை மதிச்சாவது புதுசா வச்சதை விடலாம்தானே? பழசைக் கொட்டணுமா? புண்ணியமுண்டு''
 சீதா என்று பெயர் கொண்டவர்களெல்லாம் கருணைக் கடலாய் இருக்க வேண்டுமென்று கட்டாயமா என்ன? என்னவள் நல்லவள்தான் ஆனால் மனக் கோணல். காலத்தின் கோலம் இது.
 ""புதுசுதான். இப்பத்தானே உங்க முன்னாடி தோசை வார்த்தேன். நீங்க பார்க்கலியா? மத்தியானம் நீங்க சாப்பிடுற போது அந்தப் பழைய குழம்பை சுட வச்சு விட்டுக்கத்தானே செய்வேள். அதை விட்டதுல என்ன தப்பு? என்னமோ கேட்டுண்டு வறேளே..''
 ""நாம, ஆறின கஞ்சி, பழங்கஞ்சி நம்மள விடு நமக்குள்ளே எப்டியோ செய்துக்கலாம், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். வந்தவாளுக்கு'' சொல்லிக் கொண்டே இழுத்தேன்.
 ""வந்தவாளுக்கென்ன, நொந்தவாளுக்கு பாட்டி என்ன விருந்தாளியா? இப்டீ போறவா வர்றவாளெல்லாம் நீங்க இழுத்துண்டு வந்து நில்லுங்கோ. நான் வடிச்சுக் கொட்டிண்டிருக்கேன்.. ச்சே.என்ன வீடுறா இது?''
 கையிலிருந்த பாத்திரத்தை "ணங்'கென்று கீழே வைத்து விட்டு வாசலை நோக்கி நகர்ந்து விட்டாள். என் தலையிலேயே கொட்டியது போலிருந்தது எனக்கு.
 சதா சர்வகாலமும் மனதில் என்னவோ ஓர் எரிச்சல் அவளுக்கு. எதைப் பார்த்தாலும், எதைக் கண்டாலும் தீராத அலுப்பு, கோபம்.. எந்தவகையிலும் அவளைச் சமாதானம் பண்ண
 முடியவில்லைதான். எனக்குச் சொல்லத் தெரியவில்லையா, அல்லது அவளுக்குக் கேட்கப் பிடிக்கவில்லையா?
 வருஷங்கள் பத்து தாண்டியாயிற்று. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் இல்லையா? அதுபோல் ஒரு குழந்தை வந்துவிட வாய்ப்பில்லாமலா போகும்? எத்தனையோ பேருக்கு தாமத ஜனனம் இருந்திருக்கிறதே... ஏன் நம்பிக்கையை இழக்க வேண்டும்? இன்றும் அவளிடம் நான் இதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.
 ""ஓட்டை ரெக்கார்டு மாதிரி இதை இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் சொல்வீங்க..கேட்கவே எரிச்சலா இருக்கு. என் கூட நீங்க பேச வேண்டாம் உங்க மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலே'' எதிர்பாராத பலதையும் சொல்லி, முறித்துக் கொண்டு போய் தலை குப்புறப் படுத்துக் கொள்வாள். அவ்வளவுதான். அத்தோடு கதை முடிந்தது அன்று.
 பிறகு சமையல், பெருக்கல், கூட்டல் கழித்தல் எல்லாமும் அன்று நான்தான் பார்த்தாக வேண்டும். நானேதான் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். நானேதான் எடுத்துக் கழுவி வைத்தாக வேண்டும். அதே போல் அவளும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டதாய் சரித்திரமில்லை. எல்லாமும் தனியாகவே. அவளாகவே தனித் தனியாகவே. நெருங்க விட மாட்டாள்.
 தனிமை அவளுக்கு ரொம்பவும் பிடித்துத்தான் இருக்கிறது. மொத்தமே நாங்கள் ரெண்டு பேர்தான் வீட்டில். அதிலும் அவள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறாள். எங்கள் வீட்டில் உள்ள அறைகளெல்லாம் தனிமையில்தான் இருக்கின்றன. அவை எல்லாமும் தங்களைத் தனிமையாய்த்தான் உணர்கின்றன. ஒவ்வொரு அறையிலும் ஓடியாடிப் போய் இருந்து, பேசிக் கழித்தால்தானே அவை தங்களையும் மகிழ்ச்சியாய் உணரும்? நமக்கும் ஆள் இருக்கிறது என்று நினைக்கும்
 தன்னந் தனிமையில் என்னதான் செய்வாளோ? டி.வி. சீரியலாய்ப் பார்த்துத் தள்ளுவாளோ? சினிமாப் பார்ப்பாளோ? வாய்விட்டுப் பாடிக் கொண்டிருப்பாளோ? புத்தகமாய்ப் படித்துத் தள்ளுவாளோ? வீடு துடைப்பாளோ? ஒட்டடை, தூசி, தும்பு அகற்றுவாளோ அல்லது ஒன்றும் வேண்டாம் என்று "அக்கடா' எனச் சாய்ந்து கிடப்பாளோ?
 ""நான் போன பிறகு என்னதான் செய்வே?''ன்னு சகஜமாய்க் கேட்கவா முடிகிறது? அவளிடம் எதைக் கேட்டாலும் சண்டைதான். எகனைக்கு முகனை... குண்டக்க மண்டக்க இதெல்லாம் அவள் பதிலுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும். எதற்கு எப்படி பதில் வரும் என்று எவனாலும் சொல்ல முடியாது. ஏன்டா கேட்டோம் என்று ஆகிப் போகும்.
 ""என்னை என்ன கிறுக்குன்னு நினைச்சீங்களா?'' என்றாள். ""இப்படிச் சொல்லி எங்காச்சும் தள்ளிவிடப் பார்க்கிறீங்களா? பைத்தியம்னு நினைச்சீங்களா? என்னை நீங்க எப்டி நினைக்கிறீங்களோ அப்படித்தான் உங்களைப் பார்த்தா எனக்கு இருக்கும். போதுமா? நீங்கதான் பைத்தியம். உங்க அம்மா பைத்தியம். அப்பா பைத்தியம். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லாரும் பைத்தியம். உங்க குடும்பமே பைத்தியம். போங்க அந்தப் பக்கம்'' என்னைக் கை நீட்டி அடிக்காத குறைதான். என்ன கேரக்டர் இவள் இன்றுவரை புரியாத புதிர்தான்.
 
 மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் வீடே வெறிச்சோடிக் கிடக்கும் பல சமயங்களில். நடு உறாலில் ஒரு விளக்குக் கூட எரியாது. நமக்கே நம் வீட்டின் இடங்கள் தெரியாது. எங்கே அவள் என்று கொல்லைப்புறம் வரை தேடிப் போனால் யாரும் எதிர்பாராத ஒரு ஈசான மூலையில் முடங்கி, எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது பிழியப் பிழிய அழுது கொண்டிருப்பாள்.
 ""என்ன சீதா? என்னாச்சு? ஏன் இப்படி?'' என்று அவள் அருகில் போய் அமர்ந்து சமாதானப்
 படுத்துவோம் என்றால் கேட்டால்தானே? ஆரம்பத்தில் எனது இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் குழந்தையாய் படிந்தவள், போகப் போக வெறுக்க ஆரம்பித்து விட்டாள். நெருங்கவே விடுவதில்லை.
 ""பக்கத்துல வராதீங்க. உங்ககிட்டே என்னவோ ஸ்மெல் அடிக்குது. அது எனக்குப் பிடிக்கலே. போய்க் குளிங்க.. நீங்க தொட்டாலே பிடிக்கலை எனக்கு?'' என்ன சொல்கிறாள் இவள்.
 ""நீங்க ஒண்ணும் என்னைச் சமாதானப் படுத்த வேண்டாம். போங்க உங்க ஜோலியப் பார்த்துட்டு. உங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கல்லே. எங்கயாவது கண் காணாமப் போங்க. உங்களை யாரு அதுக்குள்ளேயும் வீட்டுக்கு வரச் சொன்னா?'' நெஞ்சில் ஆணியை நேரடியாய் வைத்து இறக்குவது போலிருக்கும் எனக்கு.
 ""எதுக்காக இப்டி உன்னையே நீ வருத்திக்கிறே? நமக்குக் குழந்தையில்லேன்னு நான் இப்போ ஏதாச்சும் சொன்னேனா? என்னைக்காவது உன்னைக் கோபமாப் பேசியிருக்கேனா? அப்புறம் ஏன்? இந்த பார் சீதா, நம்ம வாழ்க்கை நம்மளோட கையில்தான். எனக்கு நீ குழந்தை. உனக்கு நான் குழந்தை. காசு, பணம் இருக்கு. வா கோயிலுக்குப் போவோம். வெளியே சுற்றுலா போவோம். ஜாலியா இருப்போம். சந்தோஷமாச் சுத்துவோம். எத்தனை நாள் லீவு போடணும் சொல்லு. உனக்காகப் போட்டுட்டு வரத் தயாராயிருக்கேன். இந்த ஊரை விட்டு மாத்தினாலும் பரவாயில்லை. போடுற ஊருக்குப் போயிட்டுப் போறோம். நமக்கென்ன வீடா, சொத்தா ஒரு புண்ணாக்கும் கிடையாது. கடவுளாப் பார்த்துக் குழந்தையை என்னைக்குக் கொடுக்கிறானோ? கொடுக்கட்டும். கிடைக்கிற அன்னைக்கு ஏத்துப்போம்''
 எங்களைப் போல் நிறைய தம்பதிகள் இருக்கிறார்கள் இந்த உலகத்தில். அவர்களெல்லாம் எங்களை மாதிரி இப்படிப் பொழுதை நரகமாக்கிக் கொண்டா திரிகிறார்கள்? ஏன் இது தெரியமாட்டேன் என்கிறது சீதாவுக்கு?
 
 பாட்டி சாப்பிட்டு முடித்துவிட்டாள். தட்டைக் கழுவி ஓரமாய் வைத்தாள். அதிலேயே அவள் வேலை சுத்தம் தெரிந்தது. ஒரு நல்ல இடத்தில் வாழ்ந்தவள் என்பதை உணர முடிந்தது. தண்ணீர் குடித்தாள். முகத்தில் தெளிவு வந்திருந்தது. ஆசுவாசமாய் அமர்ந்து எதிரே இருக்கும் மரங்களை நோட்டமிட்டாள் பாட்டி. காப்பி சாப்பிடச் சொன்னேன். நானே போட்டுக் கொண்டு வைத்தேன். ஆற்றிக் கொண்டே, ""கள்ளிச் சொட்டா இருக்கே'' என்று சொல்லிக் கொண்டாள். பழைய வார்த்தை. ஆனாலும் கச்சிதமான சொல்.
 பாட்டி போய்விட்டாள்.
 அலுவலக வேலைக்கிடையில் திடீரென்று ஒன்று ஞாபகம் வந்தது எனக்கு. போனை எடுத்து ரிங் செய்தேன்.
 ""ஹலோ கேட்டரிங் ஸ்ரீதர் இருக்காரா?''
 ""ஆமா. நாந்தான் பேசறேன்''
 ""சார், நான் காந்தி நகர், சுந்தர் பேசறேன். ஒரு சமையல் மாமி வேணும்னு சொல்லியிருந்தீங்களே. கிடைச்சுட்டாங்களா?''
 ""இல்ல சார். அது கிடைக்காமத்தான் அவஸ்தைப் பட்டுண்டிருக்கேன். என்னால சமாளிக்க முடியலை''
 ""நான் ஒரு பாட்டியைக் கூட்டிண்டு வர்றேன். பாட்டின்னு சொல்றேனேன்னு நினைச்சுக்காதீங்கோ. பேருதான் பாட்டி..மாமி மாதிரிதான். நன்னா வேலை செய்வா.. ஆதரவில்லாம இருக்கா.. உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். வச்சுக்குங்கோ..சரியா சார்?''
 "" நீங்க சொன்னா அதுக்கு ஆட்சேபணை உண்டா? எனக்கு உடனடியா ஒருத்தர் கண்டிப்பா வேணும். இன்னைக்கே அழைச்சிண்டு வாங்கோ.. எனக்குப் பூரண சம்மதம்.. வர்ற ஆஃபர் என்னால மீட் அவுட் பண்ண முடிலை. திணறிண்டிருக்கேன்''
 ""நீங்க கவலையே படாதீங்கோ. பம்பரமா சுழலுவா..''
 மதியம் லீவு போட்டுவிட்டு பிரதோஷத்திற்குக் காத்திருக்கும் பாட்டியைக் குறி வைத்துச் சந்தித்து, கேட்டரிங் ஸ்ரீதரிடம் கொண்டு நிறுத்தி விட்டேன்.
 
 இன்று ஞாயிற்றுக் கிழமை. நான் இப்போது எங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்கள்? கிருஷ்ணா கேட்டரிங்கிற்குத்தான்.
 ""ரொம்ப நன்னாயிருக்கு சாப்பாடு. பேசாம அங்கயே சொல்லிடுங்கோ. என்னால முடிஞ்ச அன்னைக்குத்தான் சமைப்பேன். தெரிஞ்சிதா? என்னைப் போட்டுப் பிராணனை வாங்கப்பிடாது. பாட்டி சமையல் படு ஜோர்''
 ஃபோனிலேயே சொல்லிவிடலாம்தான். இருந்தாலும் ஒரு நடை அப்படிப் போய் வருவதில் ஒரு திருப்தி. பாட்டியைப் பார்க்கலாம். நலம் விசாரிக்கலாம். ஏதானும் செலவுக்குக் கொடுத்து வரலாம்..
 ""இனிமே பாட்டி என் பொறுப்பு. நீங்க கவலையை விடுங்கோ'' ஸ்ரீதர் சொல்லத்தான் செய்கிறார். ஆனாலும் எனக்கு ஓர் ஆத்ம திருப்தி.
 ""சீத்தா குளிக்கிறாளா? சீக்கிரமே நல்ல சேதி வரும் பார்.. என் சாப்பாட்டைச் சாப்பிடுறாளோல்லியோ கிடைக்கும். கிடைக்கும் முழுகாம இருக்காளோன்னோன்னு கேட்கத்தான் போறேன். ஆமாம்ன்னு நீயும் சொல்லத்தான் போறே. பாரேன்''
 எழுபது தாண்டியவளின் எவ்வளவு அழுத்தமான வார்த்தைகள் வாழ்க்கையை பிறர் பால் எத்தனை ஆழப்படுத்துகிறார்கள் இவர்கள்.
 மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
 கண்களில் நீர் பனிக்க நம்பிக்கையோடு திரும்பிக் கொண்டிருக்கிறேன் நான்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.