ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காது இரைச்சல் குணமாக...
மூளையிலிருந்து சில நரம்புகள் காதினுள் சென்றடைகின்றன. வாயுதோஷத்தின் பல இருப்பிடங்களில் ஓர் இடமாக காதையும் ஆயுர்வேதம் சேர்த்திருக்கிறது.


என் வயது 75. மூன்று ஆண்டுகளாக இடது காதில் காற்று வெளியேறுவது போன்ற இரைச்சல் தொடர்ந்து இரவு பகல் முழுவதும் இருந்துகொண்டேயிருக்கிறது. மருத்துவர்கள் நரம்புபலஹீனம் என்று சொல்கிறார்கள். மருந்து சாப்பிட்டும் குறையவில்லை. இந்த காது இரைச்சல் குறைவதற்கான ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
கே.ரங்கசாமி, ஆண்டிபாளையம் திருப்பூர்.
மூளையிலிருந்து சில நரம்புகள் காதினுள் சென்றடைகின்றன. வாயுதோஷத்தின் பல இருப்பிடங்களில் ஓர் இடமாக காதையும் ஆயுர்வேதம் சேர்த்திருக்கிறது. வெளியிலிருந்து வரும் சத்தத்தை செய்தியாக மாற்றும் திறன் பெற்றுள்ள மூளை நரம்புகள் இந்த வாயுவின் சமநிலையின் வாயிலாக எந்தவொரு விஷயத்தையும் புரிந்துகொள்ளும் தன்மையை ஏற்படுத்தித் தருகிறது. வாயுவின் சீற்றம் ஏற்படும் தருவாயில் காதினுள்ளே அமைந்துள்ள சவ்வு மற்றும் நரம்புப்பகுதிகளில் தாக்கம் ஏற்படும் பொழுது அதுவே பெரும் இரைச்சலாக மாறி நரம்புபலஹீனத்தை ஏற்படுத்துகிறது. வாயுவின் சீற்றத்தைக் குறைக்க நரம்புகளை வலுப்படுத்துவதும் அதன்மூலம் காதின் இரைச்சலை தீர்க்கக் கூடியதுமாகிய வசாலசுனாதி எனும் ஆயுர்வேததைலத்தை நீராவியில் சூடாக்கி ஐந்து, எட்டு சொட்டுகள் காலையில் பல் தேய்த்தபிறகு காதினுள் விட்டுக்கொள்வது மிகவும் நல்லது. ஒரு சிறு கம்பளித்துணியை வேதுபிடித்து (சூடாக்கி) காதின் பின்புறத்தில் எண்ணெய் விட்டுக்கொண்ட பிறகு ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே. அன்றைய தினமோ அல்லது மறுநாள் காலையோ இந்த எண்ணெய்யை ஒரு பஞ்சினால் துடைத்து எடுத்து விடுவதினால் தும்பு, தூசி போன்ற எதுவும் காதினுள் படியாமல் பார்த்துக்கொள்ளலாம்.
குளிர்காற்று காதினுள் தாக்காதவாறு பஞ்சை அடைத்துக்கொள்வது, குரங்கு குல்லாய் அல்லது மப்ளர் போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது. குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்த்து ஆறிய வெந்நீரை விட்டுக் குளிப்பது காது நரம்புகளைப் பாதுகாக்கும் யுக்தியாகும். தலைக்கு ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய
மரீசாதி, அஸனவில்வாதி, அஸனமஞ்சிஷ்டாதி, அஸன ஏலாதி, வில்வம் பாச்சோத்யாதி போன்ற தைலங்களில் ஒன்றை மருத்துவரின் ஆலோசனைப்படி தலைக்குத் தேய்த்துக் குளிப்பதன்மூலமாக இந்த பிரச்னைக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளலாம். க்ஷீரபலா 101 எனும் சொட்டு மருந்தை நீராவியில் சூடாக்கி இரண்டு - நான்கு சொட்டுகள் மூக்கினுள் விட்டு உறிஞ்சுவதால் காதிலுள்ள நரம்புகளை வலுப்படுத்திக் கொள்ளலாம். வாயுவின் சீற்றத்தையும் போக்கிக்கொள்ளலாம். திரிபலா எனும் சூரணத்துடன் குக்குலு எனும் மருந்தைப் பொடித்துச் சேர்த்து கரி அடுப்பில் போட்டு வரும் புகையை காதினுள் செலுத்துவதும் நரம்புகளில் வலுவூட்டி இரைச்சலைக் குறைக்கக் கூடும். இதை காதில் எண்ணெய் விட்டுக்கொண்ட பிறகு செய்வது நலம்.
நீங்கள் நல்ல பசி எடுக்கக் கூடியவராக இருந்தால் ஆயுர்வேதமூலிகை நெய்மருந்தாகிய இந்துகாந்தம் எனும் நெய்மருந்தை 10மி.லி. உருக்கி காலையில் வெறும் வயிற்றிலும், விதார்யாதி க்ருதம் எனும் நெய் மருந்தை 10மி.லி. உருக்கி மாலை வேளையிலும் வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம். சுமார் மூன்று, ஆறு மாதங்கள் வரை இம்மருந்தைப் பயன்படுத்தலாம். நரம்புகளுக்கு நல்ல வலுவூட்டும் வாயுவின் சீற்றத்தை அடக்கும். உடலுக்கு வலுவூட்டி உற்சாகத்தை ஏற்படுத்தும். இரவு வேளையில் அரை, ஒரு ஸ்பூன் அச்வகந்தா எனும் அமுகரா கிழங்கு சூரணத்தை 150 200மி.லி. சூடான சர்க்கரை கலந்த பாலுடன் சேர்த்து படுக்கும்முன் சாப்பிடவும். நீர்க்கோர்வையினால் காதில் இரைச்சல் ஏற்படக்கூடும். அதுபோன்ற நிலையில் ரேவல் சீனி 100 கிராம், வேப்பம்விதை 40 கிராம், சதகுப்பை, சோம்பு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து எல்லாவற்றையும் நன்றாகப் பொடித்து தண்ணீரில் அரைத்துச் சூடாக்கி காதைச் சுற்றி வெளிப்புறத்தில் பற்று போடுவதன் மூலம் நீர்கோர்வை விலகுவதுடன் இரைச்சலையும் குறைத்துவிடும். ராஸ்னாதி சூரணம், ஏலாதி சூரணம் ஆகிய மருந்துகளையும் இதேபோன்ற சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம். புழுங்கலரிசி, துவரம்பருப்பு ஆகியவற்றைத் துணிப்பையில் அடைத்து இரவில் உறங்கும் பொழுது தலைக்கு வைத்து படுப்பதன் மூலமும் நீர்கோர்வை
பிரச்னை விரைவில் நீங்கும். இதுவொரு எளிய வைத்தியமுறையாகும். கூடவே காதினுள் படர்ந்துள்ள நீர்க்கோர்வையை இது அகற்றுவதால் காது இரைச்சலும் குணமாகிவிடும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...