சத்யாவைத் தேடி...
நிறுத்தத்திலிருந்து விலகி சற்றுத் தள்ளிப் பேருந்து நின்றபோது கீழே குதித்தான் மனோ. பிறகுதான் உணர முடிந்தது படி சற்று உயரம் என்று.


நிறுத்தத்திலிருந்து விலகி சற்றுத் தள்ளிப் பேருந்து நின்றபோது கீழே குதித்தான் மனோ. பிறகுதான் உணர முடிந்தது படி சற்று உயரம் என்று. இறங்கிய வேகத்தில் நிதானிக்கும் முன் ஆட்டோ ஒன்று உரசுவது போல் கடந்து சென்றது. கவனிக்காமல் இறங்கிவிட்டோமா அல்லது இடிக்காமல் கடந்து விடலாம் என்று அது பறக்கிறதா? தெரியவில்லை. மனக் கலக்கத்தோடேயே எந்தக் காரியம் செய்தாலும் இப்படித்தான் நிதானமில்லாமல் இருக்கும்,
முற்றிலும் புதிய இடம். இதுவரை அம்மாதிரி ஒரு பகுதிக்கு வந்ததில்லை. ஓரமாய் நின்று நிதானித்து சுற்றிலும் பார்த்துக் கொண்டான். காலை ஏழு மணிக்கே மிகுந்த பரபரப்புக் கூடியிருந்தது. நெருக்கமான கடைகளுக்கு முன்னே குப்பைகள் சிதறிக் கிடந்தன. சிதறலாக சனக் கூட்டம். வந்து நிற்கும் பேருந்துகளையும், கூட்டத்தையும், தான் செல்ல வேண்டிய வண்டிதானா என்கிற தேடுதலையும், திபுதிபுவென்று ஓடுவதும், பின் ஏமாற்றத்தோடு வந்து நிற்பதும், தவறி ஏறிய வண்டி என்கிற ஏமாற்றத்தோடு தடுமாறிக் குதிப்பதும், எல்லாமும் இங்கே இப்படித்தான் என்பதுபோல் வேடிக்கை பார்க்கும் சனங்களுக்கு மத்தியிலான பரபரப்பில் இவன் கண்கள் அந்தப் பகுதியை மீண்டும் மீண்டும் அலசிக் கொண்டிருந்தன.
அந்தப் பகுதியில் இறங்குபவர்கள் எல்லாருமே எதிர்வரிசை நோக்கியே சென்றார்கள். சாலையைக் கடந்த பின்னாலும் ரயில்வே கிராசிங் இருந்தது. அதையும் கவனமாய்க் கடக்க வேண்டிய நிலை. ஓரமாக இரும்புக் கிராதி வழியே ஆட்கள் போவதும் வருவதுமாய் இருந்தனர்.
பேருந்துகளின் இரைச்சல்களுக்கு நடுவே எதையும் பொருட்படுத்தாமல் தன் வழியுண்டு என மின்சார ரயில் தடதடவென்று விரைந்து கொண்டிருப்பதும், சமயங்களில் வெளியூரிலிருந்து வரும் அதிவேக ரயில்களும் கடந்து செல்வதும், பொழுது போவதற்கு அங்கே போடப்பட்டிருக்கும் சாலை ஓரப் பேருந்து நிறுத்த அறைகளில் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்தாலே போதும் என்று தோன்றியது.
அந்தப் பரபரப்பில்தான் அவள் தினமும் வந்து செல்ல வேண்டும். நாளைக்கு ஒரு முறையேனும் அவள் வந்துதான் ஆக வேண்டியிருக்கும். ரயில்வே கிராசிங்கையும், இந்த வண்டி நிறுத்தங்களையும், சாலையையும் கடந்தால்தான் காய்கறிச் சந்தை. இருக்கும் கசகசவென்ற கூட்டம் இங்கிருந்தே இவனைச் சங்கடப்படுத்தியது. குறுகிய இடைவெளியில் இரு வரிசைக் கடைகளுக்கு நடுவே ஆட்கள் போவதும், வருவதுமாய் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் அவள் இருந்தால் இத்தனை காலை வேளையில் வந்திருக்கக் கூடுமா? அவளின் வாழுமிடமாக இந்த இடம் எப்படி அமைந்தது? காலம் இங்கே கொண்டு தள்ளியிருக்கிறதே? திருமணமாகிக் குடும்பத்தோடு இருப்பாளா, தனியாளாய் வாழ்வாளா? வேலை எதுவும் பார்ப்பாளா? அல்லது வீட்டு மனைவியாய்க் காலம் கழிக்கிறாளா? எந்த நிலையில் அவளைச் சந்திக்க நேரிடும் இடம் மட்டுமே இது என்று தெரிந்த அளவில் இப்படி வந்தது சரியா? அமைதியாய் இருக்கும் அவள் வாழ்வில் தனது வருகையால் அநாவசியமாய்ப் புயல் கிளம்பி விட்டால்? அவள் கணவனோடு சந்திக்க நேர்ந்தால் தன்னை என்னவென்று சொல்லிக் கொள்வது? உடன் படித்தவன் என்றா? ஒரே ஊர்க்காரன் என்றா? பக்கத்து வீட்டுப் பழக்கம் என்றா? எப்படி தனது இந்த வருகை பிரச்னையில்லாமல் அமையுமா அவளுக்கு? ஏதேனும் உதவி செய்தல் போல் ஆகுமா?
ரயில்வே கிராசிங்கிற்கு அப்புறம் தென்பட்ட வீடுகளைப் பார்த்தபோது புதிதாய்த் தோன்றிய நகர்ப்புறமாய் இருக்கலாமோ? என்று நினைத்தான். நிறைய வீடுகள் பழசாய்த் தோற்றமளிப்பதை வைத்து அதுவும் ஒரு பழகிப் புழங்கிப் போன பழைய பகுதிதான் என்று தோன்றியது. அங்கே தென்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அது பழசு. ஆனால் அது தனக்குப் புதுசு. முற்றிலும் புதுசு. வேற்று மாநிலத்தில் பணிபுரியும், வாழும் தனக்கு அது அப்படித்தானே இருக்க முடியும்? எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டன தாய் மண்ணை மிதித்து? இந்தப் புதிய நகரத்தில் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், உத்தேசமாய்ச் சொல்லக் கூட ஒரு முகவரி எதுவும் இன்றி, ஏதோ ஓர் உத்வேகத்தில் உந்தப்பட்டு, தான் கிளம்பி வந்திருப்பதும், வந்ததும், வராததுமாக அந்த மார்க்கெட்டில் அவள் தென்படுவாளா என்று தேட முனைவதும், என்னவொரு போக்கு இது?
எந்த அடையாளத்தை வைத்து அவளை அறிவது? அந்தக் கறுப்பு நிறத்தையா? அல்லது அவளின் அந்த அழகிய பிளந்த வாய் வெகுளிச் சிரிப்பையா? அல்லது அந்த மறக்க முடியாத செதுக்கினாற் போன்றதான நீரோடை நெளிவு கொண்ட உடலமைப்பையா? இன்றைக்கும் அந்த வடிவம் அப்படியே சிதறாமல் இருக்குமா? ஓடி வந்து பின்புறமாய் இறுக்கியபோது கொஞ்சமும் முகம் சுழிக்காமல் இதமாய் வளைந்து கொடுத்து ரசித்து ஒத்துழைப்பாளே... அதே சத்யா கிடைப்பாளா இன்றும்? என்ன நினைப்பு இது? அப்படி ஓர் எண்ணத்திலா தான் புறப்பட்டு வந்தது? வாழ்க்கை எப்படியெல்லாம் அவளைப் புரட்டிப் போட்டிருக்குமோ? முகம் கொடுத்தாவது பேசுவாளா? பேசுவது இருக்கட்டும், பார்க்கவாவது செய்வாளா? அல்லது இழுத்துக் கதவை மூடுவாளா? இத்தனை காலம் கழித்து இவன் ஏன் வந்து இப்போது குறுக்கிடுகிறான் என்று நினைப்பாளோ? இவனால் உண்டாகும் புதிய குழப்பம் தேவையா என்று விலகினால்?
அவளைக் கண்டு சில நிமிடங்களேனும் பேசி விட்டால் அது நாள் வரை தன் மனத்தை அறுத்துக் கொண்டிருந்த பாரம் நீங்கும். அதன் பின் தான் மனக் கிலேசம் அற்றவனாய் சுதந்திரமாய் இயங்கலாம். அதற்கு வழி பிறக்குமா?
"சத்யா...' என்று அவனையறியாமல் வாய் அவள் பெயரைச் சொல்லிப் பார்த்துக் கொண்டது. "மனோ என்னோட மனோ'. அவளும்தான் வாய் நிறையச் சொல்வாளே. கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளிச் சொல்வாளே... என்னைக் குழந்தையாய் நினைத்து அள்ளிக் கொள்வாளே? ""மடில படுத்துக்கோ'' என்பாளே. அந்த அளவுக்கு அவளுக்கு என்னிடம் அப்படி என்ன ஈர்ப்பு? என்னையே குறிவைத்துக் குறிவைத்து வந்தாளே? என் நண்பர்களாக இருந்த அந்தப் பலரிடம் இல்லாத, கிடைக்காத ஈர்ப்பு அப்படி என்ன கிடைத்தது என்னிடம்? அவர்களுக்கு மத்தியில் நான் எப்படி அவள் மனதில் அடையாளப்படுத்தப்பட்டேன்? எனக்கும் கூடவா ஒரு பெண்ணின் கருணை கிடைத்தது? அவள் என்னிடம் வைத்தது கருணையா, அன்பா கருணை கொள்ளும் அளவுக்கு நான் ஏதேனும் குறையுள்ளவனா என்ன? ஒரு வேளை எங்கள் வீட்டு வறுமை அவளை ஈர்த்து என்பால் நெருங்க விட்டதோ? சத்யா... என் வாழ்க்கையின் வசந்தமாய் வந்த நீ இப்போது எங்கிருக்கிறாய்?
உன்னப்பத்தித் தெரிஞ்சிக்கலாம்னுதான் முயற்சி பண்ணேன் நடக்கலியே. அந்த அளவுக்கு நா என்ன தப்புப் பண்ணினேன்? ஏதாச்சும் தப்புப் பண்ணிட்டா ஓடப் பார்த்தேன்? சீக்கிரம் வந்துடறேன்னு சொல்லிட்டுத்தானே கிடைச்ச வேலையை ஏத்துக்கக் கிளம்பிப் போனேன். அதுக்குள்ளேயும் நம்ம பழக்கம்? உன் வீட்டுக்கு எப்டித் தெரிஞ்சிது அந்த தனம் சொல்லியிருப்பாளோ? அவதானே ஒரு நாள் நம்ம நிழலைப் பார்த்தா? நீதான் உடனே ஓடிட்டியே? அதுதானே தப்பாப் போச்சு அன்னிக்கு. அந்த வேலைக்காரி சொல்லலைன்னா நிச்சயம் யாருக்கும் தெரிஞ்சிருக்காதே... நீயும் காத்திட்டிருந்திருப்பே... நானும் ஓடி வந்திருப்பனே சீக்கிரம். பாவி எல்லாம் அவளால கெட்டுது.
அவள் எங்கிருக்கிறாள்? என்பதை அறிய திடீரென ஆவல் முளைவிட்டது. எப்படி? எப்படி? என்று யோசித்து மண்டை காய்ந்தது. நண்பன் பாலகிருஷ்ணன் ஞாபகத்துக்கு வந்தான். அவன் அவளுடைய முரட்டு அண்ணனின் நண்பனும் கூட. பாலுவிடம் சொல்லி அவளுடைய அண்ணனிடம் அவளுடைய முகவரியை வாங்கினால்? பாலுவிடம் சொன்னான். இரண்டு நாள் கழித்து, பாலு சொன்னான்: அவள் அண்ணன் மனோ மீது அதே வெறுப்போடும், அதே நெருப்போடும் இருப்பதாக. நேரில் பார்த்தால் அவனை அடித்தே கொன்றுவிடுவானாம்.
பாலுவையே உறுத்துப் பார்த்தான் மனோ.
""என்னை ஏன்டா முறைக்கிற?'' என்றான் அவன்.
""நீயே கதை விடுறியோன்னு தோணுது எனக்கு. அவன்ட்ட நயமாப் பேசி ஒரு அட்ரச வாங்கிட்டு வர முடில்ல, உன்னால? என்னா ஆளுடா? எத்தனை வருஷம் பழகியிருக்க? அவனோட முரட்டுக் குணம் உனக்குத் தெரியாதா? அதுக்கேத்தா மாதிரிப் பேச மாட்டியா? எடுத்த எடுப்பிலயே அட்ரசக் குடுன்னா கேட்ப? அதான் மாட்டேன்ருக்கான். அது என்னவோ கெடக்கட்டும். கடைசியா சத்யா அட்ரசைக் கொடுத்தானா இல்லயா.. அத மொதச் சொல்லு''
மனது அடித்துக் கொண்டது. எப்படியும் பாலகிருஷ்ணன் வாங்கி வந்திருப்பான் என்று ஒரு நம்பிக்கை. எப்பொழுதும் தன் செயலை உயர்த்திச் சொல்லிக் கொள்பவன் அவன். ரொம்பவும் சிரமப்பட்டு, உனக்காக இத்தனை பாடு என்பதுபோல் முன் வைப்பான்.
""அதல்லாம் மாட்டன்னுட்டான். நல்லவேளைடா. உன் இருப்பிடத்தைக் கேட்கல அவன். அத நினை. கேட்கத் தோணலியா... விரும்பலியா தெரில. அவ தாம்பரத்துக்கு அடுத்து இருக்கிற ஊர்லதான் இருக்கான்னு சொன்ன மாதிரித்தான் இருந்தது.. அவ்வளவுதான்.. அதுக்கும் மேலே எதுவும் பெயரலை அவன்கிட்ட. அதையும் கூட என்னவோ ஒரு வேகத்துல உளறிட்டான். அதுனாலதான் சட்டுன்னு நிறுத்திக்கிட்டான். அவன்ட்டப் போயி அதுக்கும் மேலே என்னத்தைக் கேட்குறது? நீ மட்டும் எங்கூட வந்திருந்தேன்னு வச்சிக்க. உன்னை உண்டு இல்லன்னு பண்ணியிருப்பான்''
நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது மனோவிடமிருந்து. மனதுக்குள் பிடிவாதம் பிறந்தது. அடுத்த ஒரு மாதத்திற்குள் சத்யாவைச் சந்திப்பது என்பதுதான் அது. அப்போதே முடிவெடுத்துவிட்டான். தாம்பரத்தை அடுத்த பகுதி. அது ஒன்று போதும். முதலில் இங்கே அலசுவோம். விடப்போவதில்லை. தேடிப் பார்ப்போம், பலனில்லையென்றால் அடுத்த முயற்சி பிறகு.
சந்தையை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் மனோ. எத்தனையோ பெண்களின் முகங்கள். அதில் அவனின் சத்யா இல்லை. நம்பிக்கையோடு வந்தாயிற்று. இன்றைய பொழுது இங்கேதான். எப்படியும் காணாமல் செல்வதில்லை. நினைத்துக் கொண்டே ரயில்வே கிராசிங்கைக் கடந்தான். நெடுகத் தெரிந்த நீண்ட சாலையில் கால் பதித்து நடக்க ஆரம்பித்தான். இருபுறமும் கடைகள். இடையிடையே வலதும் இடதுமாகப் பிரியும் பாதைகள். முதலில் எதுவரை இந்த ரோடு போகும் என்று நோக்கினான். பிறகு வலது அல்லது இடது புறங்களை அலசுவோம் என்று தீர்மானித்துக் கொண்டான். பாடு பட்டு வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் மகிழ்ச்சிக்காக, நிம்மதிக்காக, அவர்களின் கடைசிக்காலம் ஆனந்தமாய்க் கழிய வேண்டுமென்பதற்காக, அம்மாவின் பால்ய காலப் பழக்கம் தந்த வாக்குறுதியைக் காப்பதற்காக, அத்தை மகள் சுகன்யாவை மணந்து, என் பிரியமான சத்யாவைத் துறந்து விட்டேனே... என்னையே நம்பியிருந்த அவளை என்னவாயிற்று என்று ஒரு பொருட்டாக மதிக்கக் கூட அல்லாமல் கை விட்டு விட்டேனே? இந்தப் பாவத்திற்கு எனக்கு மன்னிப்பு ஏது? இன்று எந்த முகத்தோடு அவளைக் காண இப்படி அலைகின்றேன்?
என் சத்யாவைப்பற்றிச் சொல்லியிருந்தால் முதலிலேயே ஏற்றிருப்பாளோ அல்லது இப்பொழுதாவது வாய் திறந்திருந்தால் மகிழ்ந்திருப்பாளோ? எதுவுமே கிட்டாமல் போயிற்றே? எனக்கு வாழ்க்கையே வெறுத்து, இனி நான் இப்படித்தான் இருந்தாக வேண்டும் அதுதான் எனக்கான தண்டனை என்று எனக்கு நானே வரித்துக் கொண்டு கழிக்கிறேனே? இப்பொழுது மட்டும் எந்த முகத்தோடு அவளைப் பார்க்க இப்படி வந்து கொண்டிருக்கிறேன்? மனதின் எந்த மூலையில் தோன்றிய மறுஆசை இது? வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்ள மன அவசங்கள் போடும் நாடகமா இது?
கோயிலைத் தாண்டிய பின் புறத் தெருவில் நுழைந்த கணத்தில் அந்தக் குறிப்பிட்ட வீட்டின் முன் அவனையறியாமல் கால்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. யார் அது? என் சத்யாவா? அவளைக் கண்டுபிடித்து விட்டேனா? உறுதிபடப் புறப்பட்டு வந்ததுபோல அவள் கிடைத்து விடுகிறாளா? காலம் எனக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றதா? என் சத்யா என் கண்ணில் மீண்டும் படுவது எனக்காகத்தானா?
மின்னல் கொடியாய் ஒடிந்து விழுவதுபோல் மெலிந்து நசிந்து நிற்கும் ஒரு பெண்ணின் தோற்றம். யார் அது? நினைத்தபடியே சத்யாதானா? அவளா இது? அவள்தான் இது என்பதற்கு இன்று எதை அடையாளமாகச் சொல்வது? என் மனது இந்தக் கணத்தில் இப்படி நினைக்கிறதே அந்த மன ஓவியத்தை சாட்சியாக வைத்துச் சொல்கிறேனா? அவள்தானா இது நம்ப மறுக்கிறதே? புரட்டிப் போட்ட வாழ்க்கையில் ஒருத்தி இப்படியா நசிந்து போவாள்? கலைந்த ஓவியத்தின் கலங்கலான மங்கிய காட்சியாகத் தென்படுகிறாளே? இறைவா இப்படி அவளைக் காணுவதற்கா இத்தனை பிரயத்தனப்பட்டு வந்தேன்?
"என்ன அதிசயம் இன்றைக்கு? மனோவையா நான் பார்க்கிறேன்? இத்தனை காலம் கழிச்சி உன்னைப் பார்க்கிறதுக்குக் கூடக் கடவுள் எனக்கு வாய்ப்பளிக்கிறானா?... உண்மையிலேயே இந்த அதிசயம் இன்னைக்கு நடந்துடுத்தா? என் கண்களையே என்னால நம்ப முடியலையே?'
என்று நினைத்ததுபோல அவளும் அவனைப் பார்த்தாள். தயங்கி நின்றாள்.
""வா உள்ளே... சும்மா வா. எதுக்குத் தயங்குறே? வா... வா... எல்லாம் தாண்டி வந்தாச்சு. இனிமே என்ன பயம்? எதுக்குத் தயக்கம்? வீட்டுக்குள்ள வா'' என்றாள்.
தயங்கித் தயங்கி அடியெடுத்து வைத்து அந்த வீட்டின் நடு ஹாலுக்குள் நுழைந்தான். நாற்காலியை இழுத்துப் போட்டு, ""உட்காரு இதோ வந்திடறேன்'' என்றுவிட்டு உள்ளே போகிறாள். அவன் அவளின் வாழுமிடத்திலே தனித்து விடப்பட்டான் அந்தக் கணத்தில்.
அங்கே, நேர் எதிராய், தொலைபேசி வைக்கப்பட்டிருந்த அந்த மேஜையில் அது உற்று நோக்குகிறான். அதை சற்றே நெருங்கிப் பார்க்கையில்தான் தெரிய ஆரம்பிக்கிறது. அவளும் அந்த அவனும்.
ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில்.. அந்த முகத்தில் படர்ந்திருக்கும் பரந்த அகலமான பளீர்ச் சிரிப்பு. எதையோ வெற்றி கொண்டது போலான ஒரு தோற்றப் பொலிவு. அதைச் சிறிதும் ஏற்காத வகையில் அருகில் அவளின் அமைதியை அறிவிக்காத கலங்கிய முகம். அது அந்த அவன்.. அவள் குடும்பத்தால் உரிமையோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த மூன்றாமவன். சத்யாவால் சட்டென்று நிராகரிக்கப்பட்ட மூன்றாமவன். ஒருமுறை மிக உரிமையோடு அவளது அண்ணன், தாய், தங்கை முன்னிலையில் அவளை அறைந்தவன். இப்பொழுது அவளோடு ஒன்றானவன். ஒன்றாகி நிற்பவன்.
அவள் சொன்னாள். ""பார்த்தியா? இது யாருன்னு தெரியுதா?'' விரக்தியான புன்னகைதான் சத்யாவின் உதட்டில். காலம் கசந்துபோனதின் அடையாளம். கசப்பு ஜீரணிக்கப்பட்டுவிட்டதின் தெறிப்பு. நிரந்தரமாய் முகத்தில் படிந்துவிட்ட அடையாளக் கோடுகள் அமைந்த வாழ்க்கையின் வரைபடமாய். கண் சிமிட்டாமல் வெறித்து நோக்கியவனாய் அசையாமல் இருந்தான் இவன்.
""தெரில. உனக்குத் தெரிஞ்சவர்தான். ரொம்ப வருஷமாச்சே... மறந்திருப்பே. இவர்தான் இப்போ என்னை இங்கே வச்சிக்கிட்டிருக்கிறவர். நல்லா உற்றுப் பாரு, யாருன்னு புரியும்''
அவள் உதட்டில் நெளிவது குறும்பா? விரக்தியா? இல்லை வேதனையா?
உறைந்து போனவனாய் பேச வார்த்தைகள் வராமல் அமர்ந்திருந்தான் மனோ. தொண்டையில் என்னவோ அடைக்கிறது அவனுக்கு. கண்கள் மெல்லக் குளம் கட்டத் தொடங்குகின்றன. எச்சிலை விழுங்கி, பற்களை இறுக்கி, நிறுத்திக் கொள்ள முயல்கிறான்.
என்ன சொல்கிறாள் இவள்? இந்தப் பேச்சின் பொருள்தான் என்ன? எதற்காக இப்படிச் சொல்கிறாள்?
அந்த நேரத்திய எதிர்பாராத அவனின் வருகைக்கான மன நிறைவோடு, நேர் எதிரில் அமர்ந்தவளாய், கண்களில் சற்றும் குறையாத அதே பழைய அன்பு ஊற்றெடுக்க, புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு, ஏதோவொரு துக்கத்தைக் கட்டுப்படுத்தியவள்போல், அவனிடமிருந்து வெளிப்படவிருக்கும் அடுத்த வார்த்தைகளுக்காகக் காத்திருக்கலானாள் சத்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...