டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வாயுவின் சீற்றமும் மனதில் பயமும்!

வாயு தோஷத்தின் வறட்சியினால் வயோதிகத்தில் உடலின் நெய்ப்பு எனும் சத்தான பகுதி வறண்டு விடுகிறது. பயிர் செய்ய வேண்டிய நிலம், வறண்ட நிலையில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:02 am

எஸ். சுவாமிநாதன்

என் வயது 80. ரத்தக்கொதிப்பு உள்ளது. அதற்கு ஆங்கில மாத்திரை உபயோகிக்கிறேன். மூட்டு வலி, கழுத்து வலி, கைகால் வலி உள்ளது. அதற்கு ஆயுர்வேத தைலம் நாராயண தைலம் பயன்படுத்துகிறேன். இரவு சிறுநீர் சராசரி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை போக வேண்டியுள்ளது. அடிக்கடி பயம் ஏற்படுகிறது. இவை நீங்க ஆயுர்வேத மருந்து உள்ளதா?

எஸ். சீனிவாசன், சென்னை - 33

வாயு தோஷத்தின் வறட்சியினால் வயோதிகத்தில் உடலின் நெய்ப்பு எனும் சத்தான பகுதி வறண்டு விடுகிறது. பயிர் செய்ய வேண்டிய நிலம், வறண்ட நிலையில் பல இடங்களில் வெடித்து நிற்பதை வரப்பின் மீது நின்று கொண்டு நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதுபோல சத்தான நீர்ப்பகுதியை உங்கள் உடல் இழந்து விட்டதாகத் தெரிகிறது. வயோதிகத்தில் பித்த-கபதோஷங்களால் சூழப்படாத வெறும் வாயுதோஷத்தின் தனியான சீற்றத்தின் பலனாக மூட்டு வலி, கழுத்து வலி, கை,கால் வலி ஏற்பட்டுள்ளது. உடலுக்கு நெய்ப்பைத் தரும் மூலிகை நெய் மருந்துகளில் ஒன்றை, சிறிய அளவில் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குடலில் இந்த நெய்ப்பின் வரவால், உலர்ந்த தாதுக்களை விரைவில் வளர்ச்சியடையச் செய்யும். உடல் பலம், பசித் தீ, பிராண சக்தி ஆகியவற்றையும் அதிகரிக்கச் செய்யும்.

அதன் பிறகு மூலிகை நீராவியால் உடலைக் குளிப்பாட்ட, உடல் மென்மையான தன்மையை அடையும். உடலின் மென்மையால் வாதநோய்கள் நிலைபெறாது. இப்படி நெய்ப்பும், நீராவி சிகிச்சையும் தொடர்ந்து செய்தால் சில நாட்களிலேயே உடலில் ஏற்படும் குத்து வலி, மூட்டு வலி, தசைப் பிடிப்பு முதலியவை நீங்கி விடும். வாயுவின் சீற்றத்திற்கும் மன பயத்திற்கும் சம்பந்தமுண்டு. வாயுவின் அதிகமான சலன விஷேசத்தால் மனம் மருண்டு போகும். கல்யாணகம், மஹாகல்யாணகம், பஞ்சகவ்யம், ப்ராம்ஹீ போன்ற ஆயுர்வேத நெய் மருந்துகளின் அளவான உள் சேர்க்கையால் வாத தோஷத்தின் கோபத்தை அடக்குவதால் மன பயம் தானாகவே குறைந்துவிடும்.

வாயுவால் பீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் கருங்குறிஞ்சி, தேவதாரு மற்றும் சுக்கு ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் சஹசராதி கஷாயத்தை ஐந்து, பத்து சொட்டு க்ஷீரபலா101 எனும் மருந்தைக் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர விருப்பம்போல் விரைவாகவோ, மெதுவாகவோ நடக்க இயலும் என்று அஷ்டாங்கஹ்ருதயம் எனும் ஆயுர்வேதநூல் கூறுகிறது.

சிறுநீர்ப் பையின் அருகேயுள்ள புரஸ்தோலக்ரந்தியின் வீக்கத்தின் காரணமாக இரவில் அடிக்கடி சிறுநீர் வெளியேறக்கூடும். சிறிது வேப்பெண்ணெய், கடுகெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சம அளவில் கலந்து இரும்புக் கரண்டியில் சூடாக்கி சிட்டிகை உப்பிட்டு இளக்கி, வயிற்றின் அடிப்பகுதியில் தேய்த்து அரை முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, சூடான தண்ணீரில் குளித்து வர வீக்கம் விரைவில் வடிந்து இரவில் சிறுநீரின் அதிக அளவு போக்கானது குறைந்துவிடும்.

பொதுவாகவே, வாயுவின் சீற்றம் நாடிநரம்புகளில் வயோதிகத்தில் கூடும் என்பதால் நீங்கள் தலைக்கு க்ஷீரபலா தைலம் வெதுவெதுப்பாகத் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வருவது நல்லது. ராஸ்னாதி சூரணத்தை உச்சந் தலையில் தேய்த்து விடவும். அனுவாஸனம் எனும் எண்ணெய் வஸ்தி (எனிமா) சிகிச்சைமுறையை ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் நீங்கள் செய்து கொண்டால் உடலில் ஏற்பட்டுள்ள உபாதைகள் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

நெய் கலந்த பருப்பு கஞ்சி, நெய் சேர்த்த பால் சாதம், எள்ளும் அரிசியும் கலந்து தயாரித்த கஞ்சிகள், இனிப்பும் புளிப்பும் உப்பும் விகிதமான அளவில் கலந்த உணவுப் பொருட்கள் நீங்கள் சாப்பிடவேண்டிய உணவு வகைகளில் மேன்மையானவை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.