டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மூட்டுப் பகுதி வளைந்துவிட்டால்..!

வயோதிகத்தில் எலும்புகளில் தேவையான அளவைவிட சுண்ணாம்புச்சத்து குறைந்துவிடுவதால் அவை வளைந்தும் ஒடிந்தும் விடுவதற்கான

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:38 am

எஸ். சுவாமிநாதன்

எனது வயது 75. கடந்த 33 வருடங்களாக ஜவுளி வியாபாரம் காரணமாக கேரளாவுக்கு மாதத்தில் 10 நாட்கள் 15 கிலோ எடையுள்ள ஜவுளித்துணிகளுடன் பஸ்ஸில் ஏறி இறங்கி வியாபாரம் செய்து வருகிறேன். 8 வருடங்களாக வலது கால் மூட்டுப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தற்சமயம் ஒன்றரை இன்ச் வரை வளைந்து நடப்பதற்குச் சிரமப்படுகிறேன். இந்த வளைவு நிமிரவும், வேதனை குறையவும் ஆயுர்வேதம் உதவுமா?

இராமச்சந்திரன், வடசேரி,  நாகர்கோவில்.

வயோதிகத்தில் எலும்புகளில் தேவையான அளவைவிட சுண்ணாம்புச்சத்து குறைந்துவிடுவதால் அவை வளைந்தும் ஒடிந்தும் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வாயுதோஷத்தின் ஓர் இருப்பிடமாகிய எலும்புகளில் அதனுடைய சீற்றத்தால் வறட்சியின் தாக்கமானது உணரப்படுவதால் மேலும் எலும்புகள் நொறுங்கக் கூடும். நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம்கொண்ட உணவு, செயல் மற்றும் மருந்துகளின் மூலமாக எலும்புகளை நன்கு வலுப்படுத்தி வாயுவின் சீற்றத்திற்குக் காரணமாகக் கூடிய வாயு மற்றும் ஆகாயம் எனும் மகாபூதங்களை அவற்றின் வழியாக அடக்கும்பொழுது எலும்புகளை நன்றாக வலுப்படுத்திக் கொள்ளலாம். நிலம் மற்றும் நீரின் ஆதிக்கம் கொண்ட உணவுப் பண்டங்களை செரிக்கச் செய்வதற்கான பசித் தீயானது நல்ல நிலையில் செயல்பட்டால்தான் அவற்றினுடைய முழு பலன்களை எலும்புகளில் கொண்டு சேர்க்க

முடியும். அதற்கு நீங்கள் பசித்தீயை நன்றாக வளர்க்கக் கூடிய உணவு வகைகளாகிய காரம், புளிப்பு, உப்புச் சுவைகளை சற்று தூக்கலாக சிறிது காலம் பயன்படுத்தி சீராக்கிக் கொள்ள வேண்டும். எளிதில் செரிக்கக் கூடியதும் வெதுவெதுப்பானதும் நெய்ப்பு நிறைந்ததுமாக இருக்கக் கூடிய புழுங்கலரிசிக் கஞ்சியை சிறிது நெய்யுடனும் இந்துப்புடனும் காலை உணவாகச் சாப்பிட, எதையும் செரிக்கக்கூடிய சக்தியை அது ஏற்படுத்தித் தரும். மதிய உணவில் பூண்டு, சீரகம், மிளகு ஆகியவை சேர்த்த சூடான ரசத்தை புழுங்கலரிசி சாதத்துடன் கலந்து கருவேப்பிலைத் துவையல் அல்லது பிரண்டைத் துவையலுடன் சாப்பிடுவதும் சுக்கு வெந்நீர் அருந்துவதும் பசித்தீக்கான ஒரு சிறந்த பாதுகாப்பாக அமையும். இவற்றின் மூலமாக நன்கு சீராக்கப்பட்ட ஜாடராக்னி எனப்படும் பசியின் நெருப்பானது, அதற்கு அடுத்ததாக வரக்கூடிய எளிதில் செரிக்காத நெய்ப்பு நிறைந்த உணவை ஏற்கத் தயாராகிவிடுகிறது.

க்ஷீரபலா 101, விதார்யாதி க்ருதம், அஜாச்வகந்தாதி லேஹ்யம், மஹாராஜப்ரஸாரிணீ தைலம் போன்ற கனமான எளிதில் செரிக்காத ஆயுர்வேத மருந்துகளை நீங்கள் சாப்பிட அவை விரைவாக செரிக்கப்பட்டு அவற்றின் வரவானது எலும்புகளின் மூட்டுப்பகுதிகளில் சேரும்பொழுது மூட்டு வளைவு மேலும் ஏற்படாமலும், அதே சமயம் ஏற்பட்டுள்ள வளைவானது நேராகவும் ஆவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இம்மருந்துகளை ஒரு நல்ல ஆயுர்வேதமருத்துவரை அணுகி வரிசை கிரமமாக அமைத்து அதன் மூலம் ஒரு நிலையான பலனை நீங்கள் பெற முயற்சிக்க வேண்டும். ச்ருங்க பற்பம், ப்ரவாளபற்பம், சிலாசத்து பற்பம், அப்ரக பற்பம், லோஹபற்பம் போன்ற சுண்ணாம்பு சத்தும், இரும்பு சத்தும் நிறைந்த பற்பங்களை சிறிது தேன் மற்றும் நெய் விட்டுக் குழைத்து காலை, இரவு உணவிற்கு அரைமணி நேரம் முன்பாகச் சாப்பிடுவதன் வழியாக அவை எலும்புகளின் உள்ளே சென்றடைந்து அவற்றை வலுவூட்டும். இவை எல்லாவற்றையும் சாப்பிடவேண்டும் என்ற கட்டாயமில்லை. எது உங்களுக்குப் பொருந்தும் என்பதை மருத்துவ ஆலோசனை மூலம் தெரிந்துகொள்வது நல்லது.

வெளிப்புற வைத்தியமுறைகளின் மூலமாகவும் எலும்புகளின் வளைவை நம்மால் நேராக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஒரு காய்ந்துபோன சுள்ளியின் மீது சிறிது எண்ணெய்யைத் தடவி நெருப்பில் லேசாக வாட்டுவதன் மூலமாக அந்தச் சுள்ளியை வளைக்க முடியும். உயிரற்ற ஒரு சுள்ளியின் மீதே இதை நம்மால் சாதிக்க முடியும்பொழுது உயிருள்ள மனிதஉடலில் ஏன் முடியாது என்று அஷ்டாங்கஹ்ருதயம் எனும் ஆயுர்வேதநூல் வினவுகிறது. அதனால் ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய மஹாமாஷம், பலா அச்வகந்தாதி குழம்பு, வாதமர்த்தனம் குழம்பு, தான்வந்திரம் குழம்பு போன்றவற்றில் ஒன்றிரண்டை இரும்புக் கரண்டியில் சிறிது சூடு செய்து முட்டி வளைந்துள்ள பகுதியில் தடவி அரை, முக்கால் மணிநேரம் ஊறி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வளைந்த முட்டுப் பகுதியானது மிருதுவாகி நேராவதற்கான வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதிக நேரம் நிற்பது, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பது, குளிர்ச்சியான நீரை உடலில் ஊற்றிக்கொள்வது, குளிரூட்டப்பட்ட அறையில் கால்களை கம்பளிப் போர்வையால் போத்திக் கொள்ளாமல் உறங்குவது, கால்களை அதிகம் ஆட்டிக் கொண்டிருப்பது, முட்டியை நீட்டி மடக்கும் பயிற்சிகளை செய்யாதிருத்தல் போன்றவற்றை நீங்கள் தவிர்ப்பது நலம். இப்படி உணவு, மருந்து, செயல் ஆகியவற்றை ஆழ்ந்த சிந்தனைகளின் வழியாக நீங்கள் மேம்படுத்திக் கொள்வதன் வாயிலாக உங்களுடைய உபாதைக்கானதொரு தீர்வு கிடைக்கக்கூடும்.

(தொடரும்)

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.