டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நெல்லிக்காயும், கால்களில் வலியும்!

குளிர்ச்சிக்கு நேரெதிரான சூட்டைத் தரும் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, மசாலாப் பொருட்கள் போன்றவற்றைச் சீரான அளவில் நீங்கள்

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:30 am

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 50. எனக்கு இந்த ஒரு வருடமாக முளைக்கீரை, நெல்லிக்காய் சாப்பிட்டால், கால்களில் மிகவும் வலியாக உள்ளது. மழைக்காலத்தில் சாப்பிட்டால் கால்கள் குளிர்ச்சியாகிவிடுகின்றன. அதிகமாக வாக்கிங் போக முடியவில்லை. இதற்கு என்ன காரணம்? கால்களிலும் வெயிட்டை குறைக்க ஆயுர்வேதத்தில் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளனவா?

பி.செந்தாமரை பார்த்திபன், தஞ்சாவூர்.

முளைக்கீரை மற்றும் நெல்லிக்காய்  ஆகியவற்றில் உள்ள குளிர்ச்சியான வீரியத்தினால் கால்களில் உள்ள நரம்புகளில் இவற்றின் தாக்கம் உணரப்படும்பொழுது அவை உங்களுக்கு வலியை ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது. மழைக்காலத்தில் வயிற்றிலுள்ள கதகதப்பானது மந்தமான நிலையில் இருக்குமாதலால் இவற்றின் வரவானது சரிவர செரிக்காமல் உட்புறக்

குழாய்களின் வழியாக அவற்றின் பதனழிந்த சாறு நரம்புகளின் பகுதிகளில் ஊட்டத்திற்காக எடுத்துச் செல்லப்படும்போது கால்கள் அதிகக் குளிர்ச்சியை உணர்கின்றன. அதனால் பொதுவாக இவற்றின் சேர்க்கை மழைக்காலத்தில் அதிகம் நல்லதல்ல. நரம்புகளில் ஏற்படும் குளிர்ச்சியினால் உடலில் உள்ள வாயு சீற்றம் பெற்று, அதனுடைய இருப்பிடமாகிய நரம்பு மண்டலத்தில் தாக்கும்பொழுது நரம்பு வலியினால் நடைப்பயிற்சியை எளிதாகச் செய்துகொள்ள முடியாத நிலை ஏற்படலாம். கால்களில் ஏற்படும் கனமானது கபத்தினுடைய குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம் ஆகியவற்றின் வரவானது கால், தொடை எலும்புகளின் உட்பகுதியில் வாயுவுடன் சேர்ந்து ஏற்றம் பெறுவதால் ஏற்படும். இதற்கு ஊருஸ்தம்பம், அதாவது தொடை விரைப்பு என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.

குளிர்ச்சிக்கு நேரெதிரான சூட்டைத் தரும் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, மசாலாப் பொருட்கள் போன்றவற்றைச் சீரான அளவில் நீங்கள் உணவாகச் சேர்த்துக் கொண்டால் முளைக்கீரை மற்றும் நெல்லிக்காய்களில் உள்ள குளிர்ச்சிக்கு எதிராக அமையும். அதுமட்டுமல்ல, அவற்றிலுள்ள குளிர்ச்சியை மிதப்படுத்தி நரம்புகளில் அதனுடைய சத்துப் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு குளிர்ச்சியை வெளியேற்றிவிடும் தன்மை கொண்ட இந்த சூடான உணவுப்பொருட்கள் உங்களுக்கு நன்மையைத் தரும். முளைக்கீரையும், நெல்லிக்காயும் நல்லதொரு உணவுப்பொருளாக இருப்பதால் அவற்றை நீங்கள் உணவில் இழக்காமல் மேற்குறிப்பிட்ட சூடான உணவுப் பொருட்களைச் சேர்ப்பதின் மூலமாக உணவுச் சத்தை நீங்கள் நன்றாக உடலில் பெறலாம்.

ஆயுர்வேத மூலிகைப் பொடி மருந்துகளாகிய கொட்டம் சுக்காதி, ஏலாதி, ராஸ்னாதி, ஜடாமயாதி, போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி ஒன்றிரண்டை புளித்த மோருடன் கலந்து சூடாக்கி கால்களில் வலி ஏற்பட்டுள்ள பகுதியில் காலை உணவிற்கு முன்பாக பற்றுப் போடலாம். சுமார் ஒரு மணிநேரம் வரை வைத்திருக்கலாம். இதனால் குளிர்ச்சியின் தாக்கம் குறைந்து நரம்புகளில் ஏற்படும் இசிவும் வலியும் நன்றாகக் குறையும். கபத்தினால் ஏற்பட்டுள்ள கால்களின் கனமானதும் நன்றாகக் குறையும். இந்தப் பொடி மருந்துகளை ஒரு காடாத் துணியில் மூட்டைகட்டி சட்டியில் சூடாக்கி கால்களில் ஒத்தடம் கொடுப்பதன் மூலமாகவும் நல்லதொரு நிவாரணியாகச் செயல்படும். தண்டுவடக் குளிர்ச்சியினால் கால் நரம்புகளில் இசிவு ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதால் தண்டுவடப் பகுதியிலும் இந்த மூட்டை ஒத்தடத்தை சூடாகச் செய்து கொள்ளலாம்.

ஒத்தடச் சிகிச்சைக்குப் பிறகு கால்கள் லேசான தன்மையைப் பெறும் தறுவாயில் மூலிகைத் தைலங்களாகிய ஸஹசராதி, கற்பூராதி, நாராயணதைலம், பலா அஷ்வகந்தாதி போன்றவற்றில் ஒன்றைச் சூடாக்கி கால்களின் மீது மேலிருந்து கீழாக இதமாக நீவிவிட்டு யூகாலிப்டஸ், நொச்சி, ஆமணக்கு, புங்கை, கற்பூரம், கல்யாண முருங்கை இலைகளை தண்ணீரில் கொதிக்கவிட்டு அந்தத் தண்ணீரால் ஒத்தடம் கொடுப்பது நரம்புகளை வலுவூட்டச் செய்யும். நடைப்பயிற்சி இதன் மூலமாக எளிதாகும். ஆயுர்வேதக் கஷாயமருந்துகளாகிய ஸஹசராதி, அஷ்டவர்கம், மஹாராஸ்னாதி, ராஸ்னா ஏரண்டாதி ஆகியவற்றை மருத்துவ ஆலோசனைப்படி க்ஷீரபலா, தான்வந்திரம் 101, கந்ததைலம் போன்றவற்றில் ஒன்றுடன் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதும் உங்களுடைய உடல் உபாதைக்கு ஒரு தீர்வாகவும் அமையும்.

(தொடரும்)

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.