சீனக் கைதிகளுக்காக உருவாக்கப்பட்ட சிறைச்சாலை!
ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னர் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும், செயல்படுத்தப்பட்டும் வந்தன.


ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னர் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும், செயல்படுத்தப்பட்டும் வந்தன.
இதில் ஒன்றுதான் நடுவட்டம் பகுதியிலுள்ள பழமையான சிறைச்சாலை. இந்த சிறைச்சாலை பொதுவான குற்றவாளிகளுக்காக உருவாக்கப்படவில்லை. 1856-ஆம் ஆண்டு முதல் 1860-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஓபியம் போர் என அழைக்கப்பட்ட இரண்டாவது ஆங்கிலோ-சீன போரில், ஆங்கிலேயர்களிடம் போர்க் கைதிகளாக பிடிபட்ட சீனர்களை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைதான் இதுவாகும்.
இந்த சிறைச்சாலையில் மொத்தம் 10 அறைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தூக்கிலிடும் அறையாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த அறையிலுள்ள தூக்கு மேடைக்கு கீழே உள்ள பாதாள அறை, இறந்தவர்களின் உடலை வெளியே எடுத்துச் செல்லும் அறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு நடத்திய ரெவரன்ட் பிலிப் கே.முல்லி என்பவர் எழுதியுள்ள குறிப்புகளில் இத்தகைய சிறைச்சாலைகள் நடுவட்டம் பகுதியில் மட்டுமின்றி உதகை அருகேயுள்ள லவ்டேல் பகுதியிலும், கோத்தகிரியிலுள்ள கேரிங்டன் பகுதியிலும் அமைந்திருந்ததாகவும், தற்போது நடுவட்டம் பகுதியிலுள்ள சிறைச்சாலை கட்டடம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே 1860-ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தவுடன் சீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டாலும், தொடர்ந்து அவர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போதுதான் இந்தியாவில் மலேரியா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கையும் அதிக அளவில் இருந்துள்ளது. அதனால் மலேரியா
காய்ச்சலுக்கு மருந்தான கொய்னா மருந்து தயாரிப்பிற்காக தென் அமெரிக்காவின் பெரு நகரத்திலிருந்து சின்கோனா என்ற தாவரம் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
பெரு நகரத்தின் தட்பவெப்ப நிலையும், நீலகிரியின் தட்பவெப்ப நிலையும் ஒரேமாதிரியாக இருந்ததால் சின்கோனா தாவரங்கள் நடுவட்டம் பகுதியிலும், தொட்டபெட்டா மலைச் சிகரப் பகுதியிலும் நடவு செய்யப்பட்டன. இதற்கான பணிகளில் கொத்தடிமைகளாக இருந்த சீனர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சின்கோனா மரப்பட்டைகளிலிருந்து கொய்னா மருந்தை தயாரிப்பதற்கான வழி வகைகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதற்காக நடுவட்டம் மலை உச்சியிலிருந்து பெரிய குழாய்கள் மூலமாக இந்த சிறைச்சாலை இருந்த இடத்திற்கு தண்ணீர் வேகமாகக் கொண்டு வரப்பட்டு, அந்த அழுத்தத்தைக் கொண்டே இங்கிருந்த இயந்திரம் செயல்படும் வகையிலும், அதை மனிதர்களைக் கொண்டு இயக்கும் வகையிலும் ஏற்பாடு செய்துள்ளனர். அந்த இயந்திரம் இன்னும் அதே இடத்திலேயே உள்ளது.
எனவே, 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த இந்த சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக சுற்றுலாத் துறை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவலர் எஸ்.துரைராஜ் கூறுகையில், ""நீலகிரியின் பழம் பெருமையை அறிந்து கொள்ளும் வகையிலும், இயற்கை சார்ந்த சுற்றுலா மையமாக இருக்கும் வகையிலும் இப்பகுதியை மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. அதற்காக மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் சிறந்த இயற்கை சுற்றுலா மையமாக விரைவில் இப்பகுதி உருவாக்கப்படும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...