மார்கழியும் தையும் ஹேமந்த ருதுவெனப்படும். இவ்விரு மாதங்களில் பனி அதிகமாக உணரப்படும். பொதுவாகவே இக்காலத்தில் இரவு நேரம் அதிகம். பகல் நேரம் குறைவு. பகலிலும் பனி வாடை காலை 8-9 மணி வரையிலும் இருக்கும். மாலை 5 மணியிலிருந்தே பனி வாடை ஏற்பட்டுவிடும். ஆகவே அதிலிருந்து உடலைக் காப்பாற்றும் கம்பளி முதலிய உடைகளின் கதகதப்பு, தோலின் வறட்சி ஆகியவற்றின் காரணமாக ஜீரண கோசங்களுக்குத் தேவையான சூடு சற்று அதிகமாகவே இருக்கும். உணவைச் செரிக்க வைக்க வேண்டிய செயல் சிறுநீரகங்களுக்கு இல்லாததாலும், சூடு வயிற்றுப் பகுதியில் குவிந்திருப்பதாலும், சிறுநீரகங்கள் வெளியிலுள்ள பனி வாடையால் குளிர்ந்திருக்கும். இந்தக் குளிர்ச்சியின் தாக்கத்தினால், நீர்ச்சுரப்பு அப்பகுதியில் கூடுகிறது. இதுவே சிறுநீர்ப் பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமாகிறது. இந்தக் காலத்தையொட்டி ஜீரண உறுப்புகளின் நிலைக்கேற்ப அமைந்த உத்தம உணவு பொங்கல். அதன் செரிமானத்தில் , உடல் உட்புற சூட்டைத் தளர்த்தி, எல்லாப் பகுதிகளுக்கும் சீராகப் பரப்புவதால், சிறுநீரகங்களுக்குத் தேவையான சூடு கிடைப்பதால், அதன் செயல்பாடு சீராகி, நீர்ச்சுரப்பைக் கட்டுப்படுத்தும், விடியற்காலையிலேயே எழுந்து வெந்நீரில் குளித்து காய்ந்த உடை உடுத்தி வெளிக் குளிரைப் போக்கிக் கொள்வதன் மூலமாகவும், சிறுநீர் அதிக அளவில் போவதைத் தடுத்துக் கொள்ளலாம். ஐந்து உரைப்புள்ள பொருட்களாகிய திப்பிலி, கண்டந் திப்பிலி, செவ்வியம், கொடி வேலி வேர்ப்பட்டை, சுக்கு எனும் பஞ்சகோலம் சேரும் இந்த காந்தம் கஷாயத்தைக் காலை, மாலை குடித்து வருவது மிகவும் நல்லது. 15 மி.லி. கஷாயத்தை 60 மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை உணவுக்கு 1 மணி நேரம் முன்பாகச் சாப்பிடவும்.