கார்ப்பாஸôஸ்த்யாதி எனும் மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக பஞ்சில் முக்கி எடுத்து தலையில் சுமார் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஊறவிடவும். காலையில், உணவுக்கு முன். அதற்கு முன் 4 சொட்டுக்கள் க்ஷீரபலா 101 எனும் மூலிகை நெய் மருந்தை நீராவியால் உருக்கி மூக்கினுள் விட்டு உறியச் செய்யவும். தான்வந்திரம் எனும் மூலிகைத் தைலத்தை இரும்புக்கடாயில் சூடாக்கி, உடலெங்கும் தடவி ஊறச் செய்யவும். அதிக காற்றோட்டமில்லாத அறையில் இந்த சிகிச்சை முறைகளைச் செய்வது மிகவும் நல்லது. நரம்புகளின் உணர்வுகளைத் தூண்டிவிடும் நொச்சி, ஆமணக்கு, புங்கை, கல்யாண முருங்கை, கற்பூரம் போன்ற இலைகளை நறுக்கி சிறு துண்டுகளாக்கி மூட்டையாக காடாதுணியில் கட்டி சூடாக்கி, உடலெங்கும் ஒத்தடம் கொடுக்கவும். சுமார் 15 - 20 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுத்த பிறகு, அடுத்த அரை மணி நேரம் இந்த சூடான இலை ஒத்தடம் உடலில் தங்குமென்பதால் ஓய்வெடுத்து, அதன் பிறகு வெந்நீர் குளியல் செய்து கொள்வது நல்லது. உணவாக சூடான மிளகு ரசம், பருப்புத்துவையல், மோரைச் சூடாக்கி ஓமம், கடுகு நல்லெண்ணெயில் தாளிதம் செய்து சாதத்துடன் சாப்பிடுவது நல்லது. வாரமிருமுறையோ மூன்று முறையோ இந்தச் சிகிச்சை முறைகளைச் செய்தால் போதுமானது.