ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தோல் நோய்கள் தீர...சரியான உணவுப் பழக்கம்!
வீட்டுச் சாப்பாட்டைப் போல விடுதிச் சாப்பாடு தங்களுக்கு அமைய வாய்ப்பில்லை. பலருக்கும் சமைத்து வழங்கப்படும் உணவைத் தொடர்ந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தம் உள்ள உங்களுக்கு உடலில்


என் வயது 23. ஆண்கள் படிக்கும் விடுதியில் காப்பாளராக இருக்கிறேன். தொடை இடுக்கில் FUNGAL INFECTION ஏற்பட்டு எவ்வளவோ செலவு செய்தும் குணமாகவில்லை. இதற்கு ஆயுர்வேதம் மூலம் தீர்வு கிடைக்குமா?
-டி. விவேக், கோவை.
வீட்டுச் சாப்பாட்டைப் போல விடுதிச் சாப்பாடு தங்களுக்கு அமைய வாய்ப்பில்லை. பலருக்கும் சமைத்து வழங்கப்படும் உணவைத் தொடர்ந்து சாப்பிட வேண்டிய நிர்பந்தம் உள்ள உங்களுக்கு உடலில் ஒருவித பகைப் பொருள்களால் ஏற்படும் உபாதை உண்டாகி இருப்பதாகத் தெரிகிறது. காலை, மதியம், இரவு என்று மூன்று நேரமும் விடுதி உணவானது வயிற்றில் சேரும்போது, உடலிலுள்ள வாத - பித்த - கப தோஷங்களை இருக்கும் இடத்திலிருந்து நெகிழ வைத்துக் கிளறிவிட்டு அவை முற்றிலும் வெளிப்படாமல் உடலின் உள்ளேயே தேக்கி வைக்கும் உணவுப் பொருள்களால், தொடை இடுக்கில் அரிப்பும், படையும், சொரிந்தால் வெள்ளை நிறத்தில் பொடிப்பொடியாக உதிர்வதும், எரிச்சலையும் உண்டாக்கும். பலருக்கும் சேர்த்து சமையல் செய்யும் இடங்களில் இரு உணவுப் பொருள்களின் சக்தி வாய்ந்த பரஸ்பர குணங்கள் ஒன்றுக்கொன்று எதிரிடையாக இருத்தல், சமமாக அதாவது ஒன்றுக்கொன்று மாறுபடாத ஒரே தன்மையுடையதாக இருத்தல், சில குணங்கள் சமமாகவும் சில எதிரிடையாகவும் கலந்திருத்தல், மேலும் செய்முறை, அளவு, தேசம், காலம், சேர்க்கை போன்றவை கவனத்தில் வைத்துச் சமைக்கப்படாதிருத்தல் இயல்பே.
வியாபாரத்தையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செய்யப்படும் உணவு வகைகளால் நாக்கிற்கு ருசி கிடைக்குமே தவிர, ஆரோக்கியத்தை எதிர்பார்க்க இயலாது. உணவிலுள்ள பகைப்பொருள்களாலும் ஐந்து வகையான நபர்களுக்கு எந்தவிதமான கெடுதலும் ஏற்படுவதில்லை. உடற்பயிற்சி செய்பவர்கள், எண்ணெய்ப் பசையுண்டாக்கும் சிகிச்சை செய்து கொண்டவர்கள், பசித்தீ நன்கு வேலை செய்கின்ற நிலையிலுள்ளவர்கள், நடுவயதில் உள்ளவர்கள், நல்ல உடல் வலிமை பெற்றவர்கள் ஆகிய இந்த ஐந்து வகையான நபர்களுக்கு, சமுதாயச் சாப்பாட்டின் மூலம் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை. நீங்கள் இளமையானவர், மேற்கூறியவற்றைப் பெற முயற்சி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அவற்றின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம்.
வெளிப்புறக் காரணங்களாலும் இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உள்ளாடையில் சிறிதும் சோப்புத் துகள் இல்லாதவாறு நன்றாகத் தண்ணீர் விட்டு அலசி, வெயிலில் ஆடையின் உட்புறம் நன்கு படுமாறு உலர்த்தவும். நன்றாக ஆடை வெயிலில் காயுமாறு இட்டு வைப்பது ஒரு நல்ல கிருமி நாசினி முறையாகும். விடுதியில் மற்றவர்களுடைய துண்டு, சோப்பு போன்றவற்றை மாற்றி உபயோகிக்கும் வழக்கம் பொதுவாகவே இருப்பதால், அவ்வாறு ஏற்படாதவாறு நீங்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
தொடை பருத்து நடக்கும்போது உரசிக் கொள்ளும் நிலையில், தொடை இடுக்கில் புண் ஏற்பட்டு அரிப்பும் வியர்வைக் கசிவும் அதிகமிருக்கும். உடலை இளைக்கச் செய்யும் சிகிச்சை முறைகளால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். இரவில் படுக்கும் முன் இறுக்கமான உள்ளாடைகளை நீக்கிவிட்டு, தொளதொளவென்றிருக்கும் பெர்முடாஸ் அல்லது ட்ரௌஸர் அணிந்து கொள்வதே நல்லது.
நீங்கள் தொடை இடுக்குப் பகுதியில் அமைந்துள்ள தோலின் சகிப்புத்தன்மையை அதிகப்படுத்தவும், தோலுக்கு நல்ல பலத்தை ஏற்படுத்தவும் ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய நால்பாமராதி தைலம், தூர்வாதி தைலம், தினேசவல்யாதி தைலம், ஏலாதி தைலம் போன்றவற்றில் ஒன்றிரண்டைத் தடவி, சுமார் அரை முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு காலையில் குளித்து வரவும். எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற சோப்புகளின் உபயோகத்தைக் குறைத்துப் பாசிப்பயறு, கடலை மாவு, அரிசி மாவு இவைகளின் மாவு அதிகம் கலந்த அரப்புத்தூள் போட்டுக் கலந்த தண்ணீரை உபயோகப்படுத்தவும்.
திக்தகம், மஹாதிக்தகம், சோணிதாமிர்தம், நிம்பாதி போன்ற கஷாயங்களில் ஒன்றை மருத்துவர் ஆலோசனைப்படி உள்ளுக்குச் சாப்பிட்டு வரவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...