திரைக்கதிர்
ரஜினி, கமல், ஸ்ரீதேவி மூவரையும் ஒரே மேடையில் ஏற்றி விட வேண்டும் என்ற பாரதிராஜாவின் ஆசை நிறைவேறாமால்


ரஜினி, கமல், ஸ்ரீதேவி மூவரையும் ஒரே மேடையில் ஏற்றி விட வேண்டும் என்ற பாரதிராஜாவின் ஆசை நிறைவேறாமால் போய் விட்டது. இளையராஜா, மணிரத்னம், பாலுமகேந்திரா, மகேந்திரன் உள்ளிட்ட சாதனையாளர்களை தன் "அன்னக் கொடியும் கொடி வீரனும்' இசை வெளியீட்டு விழாவுக்கு அழைத்திருந்த பாரதிராஜா, இளையராஜாவின் வருகைக்காக கவிஞர் வைரமுத்துவை அழைக்கவில்லையாம். விழா மதுரையில் நடந்தாலும், சென்னையிலிருந்து விழாவின் ஒவ்வொரு நொடியையும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டாராம் வைரமுத்து. விழாவில் பேசிய பாரதிராஜா ""மதுரையில் ஒரு மொட்டை கோபுரம் இருக்கு. அது மொட்டையாக இல்லாமல் இருந்தால் மதுரைக்கு இன்னும் மவுசு வந்திருக்கும். நீ - நான் - வைரமுத்து சேராத இந்த சினிமாவும் இந்த மொட்டை கோபுரம் போல நிக்குதுடா'' என இளையராஜாவிடம் மேடையில் வைத்தே வருத்தத்தை பதிவு செய்தாராம் பாரதிராஜா.
கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான ஜே.வி.மீடியா ட்ரீம்ஸ் இந்த ஆண்டு இரண்டு படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இரண்டு படங்களையும் ராஜ்குமார், நித்தினன் ஆகிய புதுமுகங்கள் இயக்குகிறார்கள். "நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியின் மூலம் அடையாளம் காணப்பட்டு "காதலில் சொதப்புவது எப்படி' படத்தை இயக்கிய பாலாஜிமோகன், "பீட்சா' படத்தை இயக்கிய கார்த்திக் சுப்ராஜ் ஆகியோர் இயக்குநர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
மணிரத்னத்தின் அழைப்பைத் தட்ட முடியாமல் மட்டுமே சினிமாவுக்கு மீண்டும் வந்திருப்பதாக அரவிந்த்சாமி தெரிவித்தார். ""மணிரத்னம் அழைத்து "மறுபடியும் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?' என்று கேட்டார். "இல்லை' என்றேன். பிறகு அது பற்றி அவர் என்னிடம் பேசவில்லை. சில மாதங்கள் கழித்து "கொஞ்சம் யோசித்து முடிவெடு' என்றார். என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்பதால் அவர் பேச்சை தட்ட முடியாமல் நடிக்க வந்தேன். அவர் என்னை "தளபதி' படத்தில் அறிமுகப்படுத்திய போது எனக்கு வயது 20. தொடர்ந்து அவர் இயக்கிய "ரோஜா', "பம்பாய்' ஆகிய படங்களில் நடித்தேன். "அலைபாயுதே' படத்தில் கௌரவ வேடம் அளித்தார். பிறகு தொழில் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பது குறித்து இப்போது சொல்ல முடியாது'' என்றார் அரவிந்த்சாமி.
ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சந்திரபிரகாஷ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இதை "கிரீடம்' விஜய் இயக்குகிறார். ஹீரோயினாக அமலாபால் நடிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்துக்கு பல்வேறு பெயர்கள் கூறப்பட்டு வந்தன. ரஜினிகாந்த் நடித்த "தங்க மகன்', "தளபதி' ஆகிய பெயர்களில் ஒன்றை சூட்ட இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது "தலைவா' என பெயர் சூட்டி இருக்கிறார்கள். மும்பையில் தொடங்கி நடைபெற்று வரும் இப்பட ஷூட்டிங் 50 சதவீதத்தை தாண்டியுள்ளது. முக்கிய வேடத்தில் ஹிந்தி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான தேர்வு தற்போது தொடங்கியுள்ளது.
பாரதிராஜாவின் வழியை பின்பற்றிதான் "கடல்' படத்துக்கு நாயகன், நாயகியை தேர்வு செய்ததாக தெரிவித்தார் மணிரத்னம். இது குறித்து அவர் கூறுகையில், ""20 வருடங்களாக நானும் ரகுமானும் ஒன்றாகப் பணிபுரிகிறோம். எங்களுக்குள் பல ஒற்றுமைகள் இருந்தாலும், அடுத்து அவர் என்ன செய்வார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாது. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் ஒரு டியூன் தருவார். அது நடுவானில் உருவானதாக சொல்லுவார். வைரமுத்து - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி எப்போதுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த வரிசையில் "கடல்' படத்தின் பாடல்களும் வெற்றி பெற்றுள்ளன. கார்த்திக் மகனை பார்த்ததுமே பிடித்து விட்டது. அதனால் ஹீரோவாக்கி விட்டேன். நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற போது, பாரதிராஜா அமைத்த வழிதான் ஞாபகத்துக்கு வந்தது. உடனே ராதா வீட்டுக்கு சென்று துளசியை பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவர் என்னை அசர வைத்து விட்டார்'' என்றார் மணிரத்னம்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இயக்குநர் ஹீரோ. அந்த நிகழ்ச்சிக்கு தேர்வு பெறுகிறவர் ஹீரோயின். இந்த தொலைக்காட்சி குழு நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களுக்குச் செல்கிறது. அங்கு அவர்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் "அழகன் அழகி' படத்தின் திரைக்கதை என்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக மக்கள் தங்களை எப்படி மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை இதில் காமெடியாக சொல்லுகிறோம். ஹீரோவாக ஜாக் அறிமுகமாகிறார். ஹீரோயினாக ஆருஷி நடிக்கிறார். தொலைக்காட்சி குழு பயணம் செய்யும் சொகுசு வேன் படம் முழுவதும் வரும். கிளைமாக்ஸ் காட்சியில் அந்த வேன் தகர்க்கப்படுவது மாதிரி காட்சி. அதற்காக அந்த வேனை நிஜமாகவே வெடி வைத்து தகர்த்து விட்டார்களாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...