திரைக் கதிர்
மணிரத்னத்தின் உதவியாளர் பிஜோய் நம்பியார் இயக்கும் படம் "டேவிட்'. இதில் வாய் பேசாத


மணிரத்னத்தின் உதவியாளர் பிஜோய் நம்பியார் இயக்கும் படம் "டேவிட்'. இதில் வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி வேடம் ஏற்றிருக்கிறார் இஷா ஷெர்வானி. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடும் இஷா அந்த கேரக்டராகவே வாழ ஆரம்பித்து விடுவார் என்கிறார் நடிகர் விக்ரம். ""இதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். காட்சிகள் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என இஷாவிடம் பேச்சுக் கொடுத்தால், அவர் எதுவும் பேச மாட்டார். அப்போதுதான் மாற்றுத் திறனாளியாக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்துக் கொண்டேன். இஷாவைப் போல் குணாதிசயம் உள்ள நடிகையை நான் பார்த்ததில்லை'' என்கிறார் விக்ரம்.
பூபதி பாண்டியன் இயக்கும் "பட்டத்து யானை' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் முடித்த கையோடு, ஃபேஷன் மேனேஜ்மெண்ட் படிக்க லண்டன் போனார் ஐஸ். ""ஹீரோயினுக்கு ஸ்கோப் உள்ள ஒரு கதை இருக்கு நடிக்கிறீயா'' என தன் நெருங்கிய நண்பர் விஷால் சொன்னதும், கதை கேட்டார். பிடித்துப் போனதால் சினிமாவுக்கு வந்து விட்டார். கோலிவுட் படம் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள், பாலிவுட்டிலும் வாய்ப்பு வந்து சேர்ந்திருக்கிறது. அதுவும் ஷாரூக்கான் படம். ""சினிமாவின் எல்லா துறைகளிலும் ஐஸ்வர்யா இருக்கிறார்கள். உங்கள் பெயரை மாற்றி கொள்வீர்களா?'' என்றால்.... ""ஆமாம் என் பெயர் ஐஸ்வர்யா அர்ஜூன்'' என்கிறார்.
"சம்திங் சம்திங்' படத்துக்குப் பின் ஜெயம் ரவி, த்ரிஷா ஜோடி சேரும் படம் "பூலோகம்'. எஸ்.பி.ஜனநாதனின் மாணவர் கல்யாண் எழுதி இயக்குகிறார். பழங்கால சென்னையில் முக்கிய அங்கமாக இருந்த குத்துச் சண்டை விளையாட்டுதான் கதையின் மையம். ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரராக நடிக்க, த்ரிஷாவும் வீராங்கனையாக நடிக்கிறார். ""முதலில் இந்த விஷயம் விளையாட்டுத்தனமாகத்தான் தெரிந்தது. ஆனால் கதைக்குள் போன பின், ஈடுபாடு ஏற்பட்டது. இதற்காக நானும் ரவியும் முறைப்படியான பயிற்சியில் ஈடுபட்டோம். சினிமாவில் ஆச்சரியமான கதைகள் எப்போதாவதுதான் வரும். அப்படியான சினிமாவாக "பூலோகம்' இருக்கும். விளையாட்டு வீராங்கனை போல் வேடம் ஏற்றிருப்பதால் என் வேடம் கன கச்சிதமாக பொருந்தி விட்டது'' என்றார் த்ரிஷா.
என்ன ஆனது லட்சுமி மேனனுக்கு? ""கதைகள்தான் எனக்கு முக்கியம். கதை சொல்லி சம்பளம் பேசுகிறவர்கள் பெரிய ஹீரோ அதனால் சம்பளத்தை பார்த்து கேளுங்கள் என்கிறார்கள். எந்த ஹீரோவாக இருந்தால் எனக்கு என்ன? சம்பளம்தான் எனக்கு முக்கியம். நான் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியவில்லையென்றால் அது எவ்வளவு பெரிய ஹீரோ படமாக இருந்தாலும் நிராகரித்து விடுவேன்'' என சம்பளம் பேச போன பிரபல தயாரிப்பாளரிடம் இப்படி பேசினாராம் லட்சுமி மேனன். இருந்தாலும் குறிப்பிட்ட அந்த நடிகர் ""லட்சுமி மேனன்தான் கதைக்கு வேணும்'' என்றதால் வேறு வழியில்லாமல் லட்சுமிமேனன் கேட்ட சம்பளத்திற்கே அவரை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம்.
உலகத்திலேயே சுவையான தண்ணீரில் 2-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பது "சிறுவாணி' ஆற்றுத் தண்ணீர். அந்த ஆற்றில் குளிக்க போகும் கல்லூரி மாணவர்கள் வாழ்வில் நடக்கும் திகில் சம்பவங்களை வைத்து உருவாகும் படம் சிறுவாணி. புதுமுகங்கள் சஞ்சய், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர் ரகுநாத் எழுதி இயக்குகிறார். ""ஆற்றின் நீரோட்டம் எப்படி மென்மையாக இருக்குமோ அது போல் மென்மையான காதல் கதையில் திகில் சம்பவங்களை உள்ளடக்கி இந்தப் படம் உருவாகிறது. பேய் கதைகளுக்கு பெயர் பெற்ற ராஜேஷ்குமார் கதையை எழுதி உள்ளார்'' என்கிறார் இயக்குநர்.
ஹாலிவுட் பாணியில் தமிழில் உருவாகியிருக்கும் இசை ஆல்பம் "நீங்காத நினைவுகள்.' கொடைக்கானல், பாண்டிச்சேரி கடற்கரை, மகாபலிபுர கடற்கரையில் முப்பத்தெட்டு நாள்களில் எட்டு பாடல்களை இந்த ஆல்பத்துக்காக உருவாக்கியிருக்கிறார்கள். பல முன்னணி இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றிய கருணாகர பல்லவா இந்த ஆல்பத்தை இயக்கியிருக்கிறார். "அழகன் அழகி', "அடித்தளம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஆருஷி ரம்யா, "படம் பார்த்து கதை சொல்' படத்தில் நடித்த தர்ஷன், "ராவணன்' படத்தில் நடித்திருந்த திலக் ஆகியோர் நடனமாடி நடித்திருக்கிறார்கள். பாடலாசிரியர்கள் நந்தலாலா, நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் பாடல்களை எழுத ஹாரீஸ் ஜெயராஜிடம் பணியாற்றிய கிரிஷ் கிருஷ்ணன் இசையமைத்திருக்கிறார். ரமேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...