திரைக்கதிர்:
திருமணத்துக்குப் பின் திரைக்கு வருகிறார் பிரசன்னா. ""சின்ன சின்ன வேடங்களில் நடிக்க விருப்பமில்லை. ஹீரோதான்....'' என காத்திருந்தவருக்கு கிடைத்திருக்கும் படம் "கல்யாண சமையல் சாதம்'.


திருமணத்துக்குப் பின் திரைக்கு வருகிறார் பிரசன்னா. ""சின்ன சின்ன வேடங்களில் நடிக்க விருப்பமில்லை. ஹீரோதான்....'' என காத்திருந்தவருக்கு கிடைத்திருக்கும் படம் "கல்யாண சமையல் சாதம்'. பிரசன்னாவுக்கு ஜோடி எஸ்.எஸ்.மியூசிக் புகழ் லேகா வாஷிங்டன். டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு திருமணம் அதைச் சுற்றி நடக்கும் வேடிக்கையான சம்பவங்கள்தாம் கதை. குறும்பட உலகத்தில் முத்திரை பதித்த ஆர்.எஸ்.பிரசன்னா இப்படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். "அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை தயாரித்த ஆனந்த் கோவிந்தனும், இயக்கிய அருண்வைத்தியநாதனும் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகிறது.
---------------------------------------------------------------
திருவள்ளுவர் கலைக்கூடம் நிறுவனத்தின் சார்பில் வீ.சேகர் எழுதி இயக்கும் படம் "சரவணப் பொய்கை'. தன் மகன் காரல் மார்க்ûஸ இப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். ஹீரோயினாக அருந்ததி நடிக்கிறார். கருணாஸ், விவேக், எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி முக்கிய வேடங்கள் ஏற்கிறார்கள். ""இதுவரை நான் இயக்கிய 17 படங்களுமே குடும்ப உறவுகளை மையப்படுத்திதான் இருந்தன. மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கை என் கதைகளில் முக்கிய இடத்தை பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறேன். சரவணப் பொய்கை என்பது முருகன் அவதரித்த இடத்தை குறிக்கும். அதனால் அதை படத்துக்கு தலைப்பாக்கி விட்டேன். படத்தின் பெரும் காட்சிகள் ஒரு திரையரங்கில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார் வீ.சேகர்.
---------------------------------------------------------------
டெல்லி பாலியல் சம்பவம், தர்மபுரி காதல் கலவரம், கோவை மாவட்ட பாலியல் சம்பவம் ஆகிய மூன்றும் ஒரே திரைக்கதையில். "தடை செய்யப்பட்ட பகுதி' என்ற இப்படத்தை, மலைவாழ் மக்களின் பாலியல் சம்பவங்களை "வாச்சாத்தி' மூலம் படம் பிடித்து காட்டிய ரவிதம்பி எழுதி இயக்குகிறார். சாஜூ, சூரியப்பிரியா ஆகிய புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சோனா, முத்துக்காளை, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ""பாலியல் குற்றங்களால் நாட்டின் சட்டம், ஒழுங்கு நாளுக்கு நாள் கெட்டு வருகிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டம் சில நேரங்களில் துணையாகி விடுகிறது. அப்படியான சூழலில் நாட்டின் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்ன என்பதைத்தான் என் வழக்கமான சினிமா பாணியில் சொல்லியிருக்கிறேன். டெல்லி, கோவை, தர்மபுரி ஆகிய இடங்களிலேயே ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளேன்'' என்றார் இயக்குநர்.
---------------------------------------------------------------
இயக்குநர் பாலசந்தர் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தவர் இப்போது தமிழ் சினிமாவின் ஹீரோ. ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக பாலசந்தர் வீட்டில் செக்யூரிட்டியாக இருந்த அஸ்வின் பாலாஜி, தற்போது "கல்லாப்பெட்டி' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு, உடல் நிலை சரியில்லாத நிலையிலும் அஸ்வின் பாலாஜியை வாழ்த்த வந்திருந்தார் பாலசந்தர். ""தமிழ் சினிமாவில் இப்போது இளம் படைப்பாளிகளின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் அஸ்வின் பாலாஜியின் வருகையும் முக்கியமானதாக இருக்கும். நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் என்னைப் பாராட்டவோ, விமர்சனங்களை முன் எடுத்து வைக்கவோ யாரும் இல்லை. அப்படி இருந்தவர்கள் எல்லாம் ஜாம்பவான்கள். என் உடல் நிலை சரியில்லை. அப்படி இருந்தும் சில சினிமா விழாக்களுக்கு சென்று வருகிறேன். அது புதிதாக வரும் இளம் இயக்குநர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்பதற்காகத்தான் அப்படி சென்று வருகிறேன்'' என பேசினார் பாலசந்தர்.
---------------------------------------------------------------
"கர்மா' படத்தின் பாடலுக்காக கர்மாவை மையப்படுத்தி பத்து குறள்களை எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. எப்படி அது? அவரே கூறுகிறார்: ""கர்மா என்பது ஊழ்வினை. ஆனால் விதி, தலையெழுத்து என்பதில் நம்பிக்கை இல்லாதவன் நான். ஆனால் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதை நம்புகிறவன். அதுதான் கர்மா படத்தின் கதையும் கூட. வள்ளுவர் போல ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் என்பதால் புது அதிகாரத்தை எழுதியிருக்கிறேன். அதில் ஒரு குறள் இதோ...
ஒருதீமை செய்து பலநன்மை ஆற்றீன்
ஒரு தீமை கொல்லும் உனை.
இப்படி பத்துக்குறள் எழுதியிருக்கிறேன். இது புது அனுபவமாக இருந்தது. நவீன வாழ்க்கைக்கு ஏற்ப 133 அதிகாரங்களோடு புது குறள் எழுத ஆசை'' என்றார் கவிஞர் வைரமுத்து.
---------------------------------------------------------------
விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுக்கு வெற்றிகளைத் தந்தவர் விக்ரமன். தற்போது ரிஜித், நிமிஷா, பினிஷ், லியோ, கிரி உள்ளிட்ட பல புதுமுக நடிகர்களை கொண்டு நினைத்தது யாரோ படத்தை இயக்கி வருகிறார். ஸ்டார் நடிகர்கள், முன்னணி நடிகைகள் என பலரும் உங்களின் வாய்ப்புக்காக காத்திருந்த காலம் உண்டு. ஏன் அவர்களை அணுகவில்லை என்றால்... ""இந்த கதை நட்சத்திரங்களுக்கு பொருந்தாது. புதுமுகங்கள்தான் பொருந்துவார்கள். நட்சத்திர நடிகர்களோ... புதுமுகங்களோ... அவர்களுக்கான மார்க்கெட் உயர கதைதான் காரணமாக இருக்கிறது. மாஸ் ஹீரோ என்பது முதல் இரண்டு காட்சிகளுக்கான காரணகர்த்தாவாக இருக்கும். எவ்வளவு பெரிய ஹீரோக்கள் என்றாலும், கதை இல்லையென்றால் மக்கள் வீசி எறிந்து விடுவார்கள். ஆனால், ஹீரோக்கள் தங்களுக்காகத்தான் படம் ஓடுகிறது என்கிற தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள், ஹீரோயிசம் இல்லாத சிறப்பான கதைகள் கூட ஆக்ஷன் ஹீரோக்களின் மார்க்கெட் உயர காரணமாகி இருக்கிறது. இதை ஹீரோக்கள் உணர வேண்டும்'' என அதிரடி கிளப்பினார் விக்ரமன்.
---------------------------------------------------------------
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...