திரைக் கதிர்
என்ன ஆனது வித்யாபாலனுக்கு? ""சினிமாவில் பெரிய பரிச்சயம் இல்லாத காலங்களில் மோகன்லால் படத்தில்


என்ன ஆனது வித்யாபாலனுக்கு? ""சினிமாவில் பெரிய பரிச்சயம் இல்லாத காலங்களில் மோகன்லால் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. என் அம்மாவுக்கு லாலை ரொம்பவே பிடிக்கும். அதனால் அம்மாவை துணைக்கு அழைத்து கொண்டு ஷூட்டிங்கில் பங்கேற்க சென்றேன். அந்த நேரத்தில் இயக்குநரும், ஹீரோவும் கீழே விழுந்து விட்டனர். ஷூட்டிங் நின்றுவிட்டது. லால் - கமல் இருவரும் இணைந்து ஏற்கெனவே 8 ஹிட் படங்கள் கொடுத்தவர்கள். இந்நிலையில் அவர்கள் கீழே விழுந்ததற்கான பழி என் மீது விழுந்து விட்டது. என்னை ஒப்பந்தம் செய்ததால்தான் இப்படி நடந்து விட்டது என்றார்கள். அடுத்த சில மாதங்களில் நான் ஒப்புக் கொண்டிருந்த ஒரு டஜன் படங்களில் இருந்து என்னை நீக்கும் அறிவிப்பு வெளியானது. ஒரு கட்டத்தில், சூனியம் வைத்து விட்டார்களோ? என்று நினைத்தேன். அதன் பின் தமிழ் படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆனேன். அதுவும் நின்று போனது. இப்படி போராடித்தான் இந்த இடத்தை பிடிக்க முடிந்தது"' என மனம் திறந்து இருக்கிறார் வித்யாபாலன்.
ஒரு பெண் காதலிப்பதற்கு முன் பெற்றோரிடம் காட்டும் பாசம் பெரிதா? காதலனுடன் பகிர்ந்து கொள்ளும் காதல் பெரிதா? என்பதைச் சுவாரஸ்யமாக சொல்ல வரும் படம் "அர்ஜூனன் காதலி'. இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் சினிமாவை தயாரிக்க வருகிறது சிவசக்தி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். ஜெய் ஹீரோ. ஹீரோயின் வேடம் ஏற்கிறார் பூர்ணா. தம்பி ராமையா, லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்கிறார்கள். புதுமுகம் பார்த்தி பாஸ்கர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ""சிவசக்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை கொடுத்தவர். இப்போது உள்ள சூழலில் படம் தயாரிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. நான் சொன்ன கதையை மட்டுமே நம்பி இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார். காதல்தான் கதையின் பிரதானம். இருந்தும் அப்பா - மகள் - காதலன் மூவருக்குமான பாசத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார் இயக்குநர்.
திருமணத்துக்கு நான்கு நாள்கள் இருக்கும் நிலையில் மணமக்கள் தங்கள் நண்பர்களுடன் "பேச்சிலர் டூர்' போகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் விபரீதங்களை ஆக்ஷன் ப்ளஸ் திரில்லராக சொல்ல வரும் படம் "என்னாச்சு'. ஸ்மைல் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஸ்ரீமணி என்ற புதுமுகம் எழுதி இயக்குகிறார். இஸ்மாயில், விவிந்த், பூஜா, மேகா தானி உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ""திருமண நிச்சயதார்த்துக்குப் பின் மாப்பிள்ளை, பெண் இருவரையும் வெளியூருக்கு போவதை நம் கலாசாரத்தில் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி சுற்றுலா மேற்கொள்ளும் அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் கதை. திண்டுக்கல், சிறுமலை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடந்து வருகிறது"' என்கிறார் இயக்குநர் ஸ்ரீமணி.
""நான் பழைய ஆளு இல்லை. முப்பத்தி ஒன்பது வயசாச்சு. என்னை ரொம்ப ஆட விட்றாதீங்க.'' இப்படிச் சொன்னவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா. யு டி.வி. தயாரிப்பில் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்' படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவாவை இயக்குநர் ரெமோ டிசோசா சந்தித்த போதுதான் இப்படி சொல்லியிருக்கிறார். ""20 வருஷத்துக்கு முன் உள்ள பிரபுதேவா மாதிரி நினைச்சு என்னை ஆட வைக்காதீங்க. 39 வயசாகிருச்சு இப்போ. அதுக்கு ஏத்த மாதிரி ஸ்டெப்ஸ் கொடுங்க'' என்றாராம் பிரபுதேவா. சென்னையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபுதேவாவே இதைச் சொல்ல ரசிகர்களுக்கு ஆச்சரியம். ஆனால் விழாவில் திரையிடப்பட்ட ஒரு பாடலில் பிரபுதேவா ஆடிய ஆட்டம் அவரின் சினிமா வாழ்வில் அவரே ஆடாத நடனமாம்.
பேருந்தில் நடக்கிறது மீண்டும் ஒரு கதை. சென்னையில் இருந்து மதுரை வரை போகும் பேருந்தில் நடக்கும் காதல், மோதல், சென்டிமெண்ட் கலந்து உருவாகும் படம் "சொகுசுப் பேருந்து.' ராசுமதுரவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். "ரேணிகுண்டா' ஜானி, "சாட்டை' யுவன் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். "பேராண்மை' படத்தில் நடித்த லியாஸ்ரீ, லிமா ஹீரோயின்கள். இளவரசு, கஞ்சா கருப்பு, "தீப்பெட்டி' கணேசன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரமேற்று நடிக்கிறார்கள். ""என் படங்களில் எப்போதும் மனித உணர்வுகள் பிரதானமாக இருக்கும். இந்தப் படத்திலும் அதைத்தான் முன்னிறுத்தி இருக்கிறேன். உசிலம்பட்டியில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை சினிமா பாணியில் திரைக்கதையாக்கி இருக்கிறேன். கதை முழுவதும் பேருந்தில் நடப்பதால், ஒரு கோடி மதிப்பில் உருவான பென்ஸ் பஸ் ஒன்றை 25 நாள்கள் வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம்'' என்றார் இயக்குநர் ராசுமதுரவன்.
"அவள் பெயர் தமிழரசி' படத்துக்குப் பின் மீரா கதிரவன் இயக்கும் படம் "விழித்திரு'. கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, வெங்கட்பிரபு, எஸ்.பி.பி.சரண், பேபி சாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சென்னை நகரத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது படம். "" திரைக்கதை முழுக்க முழுக்க திரில்லராக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் பரபரப்பாக இருக்கும். வித்தியாசமான மனித குணங்களைக் காட்டுவதுதான் திரைக்கதையின் நோக்கம். இதற்காக சென்னையில் உள்ள சாலைகளில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். இது வரைக்கும் சினிமாவில் பார்த்த சென்னைக்கும், இதில் காட்டப்படும் சென்னைக்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கும்'' என்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...