திரைக்கதிர்


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வடிவேலு. படத்தின் பெயர் "ஆப்பிரிக்காவில் வடிவேலு'.
மீண்டும் நடிப்பது குறித்து வடிவேலுவிடம் கேட்டபோது... ""நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்தத் துறையில்தான் இருக்கிறேன். சில மாதங்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாகி இருப்பது எனக்குப் புத்துணர்ச்சி அளிப்பது போல் உள்ளது. என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். இந்தப் படத்தையடுத்து "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன்.
தன்னுடைய அழகை மெருகேற்ற நடிகை நயன்தாரா ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். சிம்பு, பிரபுதேவா இருவருடனான அடுத்தடுத்த காதல் முறிவிற்குப் பின்னர், தன் சினிமா வாழ்க்கையை மீண்டும் தொடங்கியிருக்கிறார் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் எட்டுக்கும் மேற்பட்ட படங்களைக் கைவசம் வைத்திருக்கும் நயன்தாரா, தன்னுடைய அழகுக்கு மேலும் அழகு சேர்க்க அண்மையில் கேரளத்தில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்த அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் அந்த சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும் நான்கு நாள்கள் செலவிட வேண்டுமாம். அதனால் தான் நடிக்கும் எந்த படமாக இருந்தாலும் மாதம் நான்கு நாள்கள் தனக்குக் கட்டாய விடுமுறை வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறார் நயன்தாரா.
தெலுங்கு படத்திற்காக நிஜமாகவே மொட்டை போட்டு கலக்கிய நடிகை ஸ்ரீரம்யா.
மணிரத்தினத்தின் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கணேஷ்பாபு. இவர் "யமுனா' படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். கதாநாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் மறுத்துள்ளனர். அதனால் தெலுங்கு நடிகை ஸ்ரீரம்யாவை கதாநாயகி ஆக்கியுள்ளார். ஸ்ரீரம்யா "1940 ல ஒக கிராமம்' தெலுங்குப் படத்துக்காக தலையை மொட்டை அடித்துக்கொண்டு நடித்தவர். அந்தப் படத்துக்காக ஆந்திர அரசின் நந்தி விருதைப் பெற்றவர். அவருடைய அர்ப்பணிப்பு உணர்வுக்காகவே இந்தப் படத்தில் கதாநாயகி ஆக்கியுள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர்.
தமிழ், ஹிந்தியைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகிலும் கால் பதிக்கிறார் தனுஷ்.
இயக்குநர் தாம்சன் இயக்கும் "காமத் அண்ட் காமத்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது பற்றி இயக்குநர் கூறுகையில்.... ""இப்படத்தின் கதையை தனுஷிடம் கூறினேன். அவருக்குப் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனையாக இருக்கும்'' என்றார். இந்தப் படத்தில் தனுஷ் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு மம்முட்டி கதாநாயகன் என்பதும் ஒரு காரணம்.
கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' படத்துக்கும் வழக்கம்போல எதிர்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து படத்தில் பல காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்துள்ளதாக பரப்பப்படும் தகவல்களை அடுத்து சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் இதை அப்பட்டமாக மறுத்துள்ளார் கமல். மேலும் தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்தும் இயக்குநர் அமீரை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் பேசத் தொடங்குவதற்கு முன்பு "இறைவன் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்' என பிரார்த்திக்கும் அமீர், எந்தக் காலத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளுக்குத் துணை போக மாட்டார் என்ற நம்பிக்கை அவரது மதத்தினருக்கு உண்டு என்பதாலேயே அவரை அந்த முக்கியக் கதாபாத்திரத்தில் கமல் நடிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
"வொய் திஸ் கொலவெறி' பாடலுக்குப் பிறகு ஆண்ட்ரியாவுடனான "லிப் டூ லிப்' முத்தம் மூலம் பிரபலமானவர் இசையமைப்பாளர் அனிருத். அந்த சம்பவத்திற்கு இருவருமே விளக்கம் கொடுத்துவிட்டு அதை மறந்துவிட்டனர். ஆனாலும் முத்தப் பிரியரான சிம்பு...
""ஏதோ கொலை நடந்து தலை தனியா கிடந்தது மாதிரி அந்த மேட்டரை பார்க்கணுமா? முத்தம் கொடுக்கறது தப்பா? அப்படியென்ன மன்னிக்க முடியாத தப்பை பண்ணிட்டாங்க அவங்க. முத்தத்தை கொடுத்து வாங்குறதுதானே அழகு. எத்தனையோ படங்கள் இன்டர்நெட்ல இது மாதிரி இருக்கு. நான் கூட நயன்தாராவை "வல்லவன்' படத்துக்காக லிப் கிஸ் பண்ணினேன். அதை ரசிச்சவங்க அதே மாதிரி இன்னொரு படத்தை இன்டர்நெட்ல பார்த்ததும் அதைப் பெரிசு படுத்திட்டாங்க. ஆன்ட்ரியா - அனிருத் முத்தத்தை அன்பின் வெளிப்பாடுன்னு சொல்லிப் பாருங்க. அழகா இருக்கும்'' என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
பாலாவின் "பரதேசி'யில் அதர்வாவுடன் இணைந்து நடித்துள்ளார் வேதிகா. பட அனுபவம் பற்றி கேட்டால்... ""பாலா நடிக்க அழைத்தபோதே பலரும் பயமுறுத்தத்தான் செய்தார்கள்; இருந்தாலும் அவருடைய தீவிர ரசிகை என்பதால் கொஞ்சம் பயந்தபடியேதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அவர் படத்தில் பணியாற்றியது மிகப் பெரிய அனுபவம். இப்படிப்பட்ட ஒரு டைரக்டரை நான் பார்த்ததேயில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... இந்தப் படத்துக்கு விருது கிடைத்தால் கூட அடுத்ததாக, பாலா படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்த அனுபவமே போதும்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...