"மஜ்ஜா மஜ்னா' என்று ஒரு குறிப்பு ஆயுர்வேதத்தில் உள்ளது. அதாவது, மஜ்ஜை உடலின் உட்புறத்தில் குறைந்து போனால், மிருகங்களின் எலும்பினுள்ளே அமைந்துள்ள மஜ்ஜையையே முக்கிய உணவாகச் சாப்பிட வேண்டும் என்று அதற்கு விளக்கம் தரலாம். ஆனால் மஜ்ஜையை அவ்வளவு எளிதாகச் செரிக்கச் செய்ய முடியாது. அதைச் செரிக்க வைத்து குடல் வழியாக தாதுக்களில் பரவச் செய்து, தாத்வக்னி எனப்படும் தாதுக்களில் பரவி நிற்கும் நெருப்பில் வேக வைத்து, உடல் அந்த வெளிப்புற மஜ்ஜையை தன் வசம் சேர்த்து, உட்புற மஜ்ஜைப் பகுதியை புஷ்டிப்படுத்துவதற்கு அடிப்படை ஆதாரமாக ஜாடராக்னி (ஜடரம் - வயிறு, இரைப்பை முதல் பெருங்குடல் வரை உள்ள பகுதி, அதிலுள்ள சூடு) எனும் பசித்தீயின் துணையில்லாமல் செய்ய இயலாது. உங்களுடைய மகனுக்கு இந்த ஜாடராக்னி அநேகமாக மந்தமான நிலையில் இருக்கக் கூடும். அதனால் வயிற்றுப் பகுதியில் போதுமான அளவு சூடு இல்லாமல் சில்லிட்டிருந்தால், தாது போஷணைக்கு வழி இல்லாமல் அவஸ்தைகள் பல நேரிடும். ஒரு சில உணவுமுறைகளால் ஜாடராக்னியை சூடேற்றி, நன்றாக எரியும்படி செய்து விட்டால், மஜ்ஜையை உணவாக ஏற்று, அறுவைச் சிகிச்சையைத் தவிர்க்கலாம்.