ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: மூச்சுவிடச் சிரமமா?
கடந்த ஆறு மாதங்களாக எனது சகோதரி (வயது 52), நுரையீரலுக்குள் செல்லக் கூடிய ரத்தக் குழாய் குறுகி, உயர் அழுத்த நோயினால் (டன்ப்ம்ர்ய்ஹழ்ஹ் ட்ஹ்ல்ங்ழ்ற்ங்ய்ள்ண்ர்ய்) மூச்சுவிடச் சிரமப்படுகிறாள். கால், முகம்


கடந்த ஆறு மாதங்களாக எனது சகோதரி (வயது 52), நுரையீரலுக்குள் செல்லக் கூடிய ரத்தக் குழாய் குறுகி, உயர் அழுத்த நோயினால் (டன்ப்ம்ர்ய்ஹழ்ஹ் ட்ஹ்ல்ங்ழ்ற்ங்ய்ள்ண்ர்ய்) மூச்சுவிடச் சிரமப்படுகிறாள். கால், முகம் வீக்கம் ஆங்கில மருந்தின் மூலம் சற்றுக் குறைந்துள்ளது. இதற்கு அறுவைச் சிகிச்சை இல்லை என்றும் நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் கூறுகிறார்கள். அவளுக்குச் சுவாசம் மேம்பட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆயுர்வேத சிகிச்சையில் வழி உள்ளதா?
பி.விவேகானந்தன், அருப்புக்கோட்டை.
பிராணம் என்றும் உதானம் என்றும் இருவகையான வாயுக்கள்,தலை மற்றும் மார்புப் பகுதிகளிலிருந்து செயல்படுகின்றன. அவற்றுள் பிராணம் என்ற வாதம், தலையைத் தங்குமிடமாகக் கொண்டு, தொண்டையிலும், மார்பிலும் உலவுகின்றது. அறிவு, புலன்கள், இதயம், மனம், நாடிகள் இவற்றை நிலை நிறுத்தச் செய்கிறது. துப்புதல், தும்மல், ஏப்பம், உள்ளிழுக்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு, உணவை உட்செலுத்துதல் ஆகியவை இதன் செயல்களாகும். உதானம் மார்பில் இருந்து கொண்டு தொண்டை, மூக்கு முதல் தொப்புள் வரை உலவும். பேசுதல், செயலில் முயற்சி, புஷ்டி, வலிவு, நிறம், துவாரங்களைத் தெளிவுபடுத்துதல்,அறிவு, தைரியம், நினைவு சக்தி, மனதிற்கு உணர்வுகளைத் தெரிவித்தல் ஆகியவை அதன் செயல்களாகும். இந்த இரு வாயுக்களும் உங்களுடைய சகோதரியின் விஷயத்தில் தங்களின் செயல்திறனைச் சரிவர செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
மார்புக் கூட்டில் சிறிதளவு கபம் தங்கியிருந்தாலும், மூச்சுத் திணறலுக்கு வழியாகலாம் என்பதால், அந்த உபாதைக்கான சிகிச்சை முறைகளைக் கீழ்க்காணும் முறையில் வரிசைக் கிரமமாகச் செய்ய வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
உப்புச் சேர்த்த மூலிகைத் தைலமாகிய தேகராஜ தைலத்தை, மார்பு, முதுகு போன்ற பகுதிகளில் முக்கியமாகத் தேய்த்து, ஒரு பெட்டியினுள் உட்கார வைத்து, மூலிகைகளால் வேக வைக்கப்பட்ட நீராவியினால் வியர்வையை வரவழைக்க வேண்டும். இந்த எண்ணெய் மற்றும் வியர்வை சிகிச்சையினால் நுரையீரலுக்குச் செல்லும் குழாய்களில் கெட்டியாகப் படிந்திருக்கும் கபம், இளகி, குழாயின் உட்புற விட்டம் சீராவதால், பிராண - உதான வாயுக்களின் சஞ்சாரம் எளிதாக நடைபெறும். இந்த சிகிச்சையை இத்துடன் நிறுத்திவிடாமல், வியர்வை நன்றாக வெளியாக்கப்பட்ட பிறகு, சூடான சாதத்துடன் நெய் அல்லது மீன் சூப் கொடுத்து, தயிர் ஆடையைச் சாப்பிட வேண்டும். இதனால் கபம் நுரையீரல் குழாய்களில் கொழகொழ என்று வளரும். திப்பிலி, இந்துப்பு, தேன் ஆகியவற்றைக் கலந்து உண்ணச் செய்து, நல்ல முறையில் வாந்தி சிகிச்சை செய்வதன் மூலம் உள்ளே அடைந்து கிடந்த கபம் முழுவதும் வெளியேறிவிடுவதால், வாயுவின் எளிதான நகரும் தன்மை, குழாய்களில் சீராகிவிடுவதால் மூச்சுத் திணறல் உபாதையிலிருந்து உங்கள் சகோதரி விடுபடலாம்.
இவற்றையெல்லாம் செய்தும், கபம் சிறிய அளவில் குழாயின் உட்புறங்களில் ஒட்டிக் கொண்டிருந்தால் பார்லியில், நெய்யைப் புரட்டி, புகைக்கச் செய்து, அந்தப் புகையை மூக்கின் வழியாக உள்ளிழுத்து, வாய் வழியாக வெளியே விட , உள்ளிருக்கும் கபமானது வறண்டுவிடும்.
பழைய அரிசி, அறுபது நாட்களில் விளையக் கூடிய அறுபதாம் குறுவை, பழைய கோதுமை, பழைய பார்லி போன்றவை மூச்சுத் திணறல் உபாதை உள்ளவர்கள் சாப்பிட உகந்தவை. இவற்றில் ஏதேனும் ஒன்றினால் கெட்டியான கஞ்சி உண்டாக்க வேண்டும். அந்தக் கஞ்சியைக் காய்ச்சும்போதும் ஓமம், புஷ்கர மூலம், கொடுவேலி வேர், கர்க்கடசிருங்கி, துவர்ச்சிலை உப்பு, பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து, வடித்து காலை உணவாக நம் முன்னோர் உண்டு பயனடைந்தனர்.
தஷமூலஷட்யாதி என்று ஒரு கஷாயம் இருக்கிறது. மேற்குறிப்பிட்ட கஞ்சி வகையறாக்களில் இந்தக் கஷாயத்தை ஊற்றி, கஞ்சியாகக் காய்ச்சிச் சாப்பிடுவதும் உத்தமமான முறையாகும். வெறும் கஷாயத்தைக் காலை, மாலை வெறும் வயிற்றில் பருகுவதும் நல்லதே.
முன் குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்ளாமல், வீட்டிலேயே மருந்து சாப்பிடும் முறை ஏதேனும் உள்ளதா? என்று நீங்கள் கேட்டால், காலையில் 10 -15 மி.லி. இந்து காதம் எனும் நெய் மருந்தை உருக்கிச் சாப்பிடலாம். மாலையில் விதார்யாதி எனும் நெய் மருந்தை அதே அளவில் உருக்கிச் சாப்பிடலாம். இவற்றைச் சாப்பிடுபவர்களுக்கு, நெஞ்சுக் கூட்டில் கபம் இருக்கக் கூடாது. நுரையீரலுக்குச் செல்லும் குழாய் குறுகியிருந்தால், அதனுள் ஒரு நெய்ப்பை ஏற்படுத்தி, விரிவாக்கித் தரும் சக்தியைக் கொண்ட இந்த மூலிகை நெய் மருந்துகளைச் சுமார் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...