அன்னை தெரசாவின் வாரிசு!
மாலை நான்கு மணியிருக்கும். அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. வேலையில் மூழ்கியிருந்த ராகவன், மேஜை மீதிருந்த தன் கைபேசி "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி' என்று பாடி அவனை அழைத்தது. எடுத்துப் பார்த்தா


மாலை நான்கு மணியிருக்கும். அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
வேலையில் மூழ்கியிருந்த ராகவன், மேஜை மீதிருந்த தன் கைபேசி "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி' என்று பாடி அவனை அழைத்தது.
எடுத்துப் பார்த்தான்.
தன் மனைவிதான் அழைக்கிறாள் என்பதைக் கண்டு, "இந்த நேரத்தில் என்ன அழைப்பு' என்ற நெற்றிச் சுருக்கத்துடன் ""என்ன ஆனந்தி'' என்றான்.
""உடனே புறப்பட்டு வீட்டுக்கு வாங்களேன். எனக்கு கையும் ஓடல... காலும் ஓடல...'' என்று பரபரத்தாள்.
""என்னன்னு விஷயத்தை சொல்லாம ஏன் பதட்டப்படறே சொல்லு...''
""முரளிக்கு மண்டைல அடிபட்டு மயக்கமாயிட்டாங்க''
""எப்போ? எப்படி?''
""பசங்களோட சேர்ந்து கிரவுண்ட்ல கிரிக்கெட் ஆடினாங்க. அப்போ பந்து பட்டு அய்யோ...ஒரே ரத்தம்...எனக்கு ஒண்ணுமே புரியலீங்க. பயமாயிருக்கு...''
""முதல்ல அழுவுறதை நிறுத்து. பதட்டப்படாதே. நான் உடனே புறப்பட்டு வரேன். என்னதான் வேகமாக வந்தாலும் டிராபிக்ல மாட்டினா லேட்டாயிடும். எனக்காக காத்துக்கிட்டிருக்காத. உடனே ஒரு ஆட்டோ பிடிச்சு அன்னை தெரசா நர்ஸிங் ஹோமுக்குக் கூட்டிட்டுப் போ. நான் நேரா அங்க வந்திர்றேன். போ...குய்க்...'
மானேஜரிடம் விவரம் சொல்லி அனுமதி பெற்று நர்ஸிங் ஹோம் சென்றான் ராகவன். ரிசப்ஷனில் விசாரித்து உள்ளே சென்றான்.
பிள்ளையைச் சேர்த்திருந்த அறைக்கு வெளியே நின்றிருந்தாள் ஆனந்தி. அவள் முகமெல்லாம் வேர்த்திருந்தது. உடம்பு பதட்டத்திலிருந்து சற்று தூரத்தில் கண்ணுக்குத் தெரியும் வண்ணம் ஊதுபத்தியின் நறுமணம் கமழ அழகாய் வீற்றிருந்த பெரிய பிள்ளையாரை, அடிக்கடி பார்த்துக் கொண்டாள். "இறைவா நீதான்பா பிள்ளையைக் காப்பாத்தணும்' கைக்கூப்பி முணுமுணுத்தாள்.
ராகவன் அவளருகே சென்றான்.
""என்னாச்சு ஆனந்தி? இப்போ எப்படியிருக்கு?''
""உள்ள டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டிருக்காங்க''
""அடி பலமா? கண்ணுமுழிச்சி பார்த்தானா? ஏதாவது பேசுனானா?''
""இல்லைங்க நெத்திக்கு மேலே முன் மண்டைல அடி. பந்து பிடிக்கறதுக்காக குனிஞ்சிருந்தானாம். அப்போ வேகமா வந்த பந்து கைல சிக்காம மண்டைல பட்டிருச்சாம்''
""டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க. பயமில்லேன்னாங்களா?''
""ஆமாம். உடனே கொண்டு வந்ததனால பயமில்லேன்னாங்க''
""எதுல வந்தே, ஆட்டோ தானே?''
""ஆமாங்க. வெளிய மரத்தடிலே நிக்குதே அதான். அதுக்கு இன்னும் பணம் கொடுக்கலீங்க. அவசரத்துல பணம் எடுக்காம வந்துட்டேன். நீங்க போய் ஆட்டோக்கு பணம் கொடுத்துட்டு வந்திடுங்க.''
""சரி...பார்த்துக்க. பணம் கொடுத்துட்டு வரேன்''
அவன் சென்றான். பையிலிருந்து பர்ûஸ எடுத்து பிரித்தவாறே, ""எவ்வளவுப்பா?'' என்றான் ராகவன்.
""எதுக்கு சார்?''
""இப்போ அடிபட்ட ஒரு பையனை உன் ஆட்டோல அழைச்சிட்டு வந்தியே அதுக்கு''
""அம்பது ரூபா சார்''
""என்னப்பா அநியாயமா இருக்கே. தோ இருக்கிற ஆஸ்பத்திரிக்கு வர அம்பது ரூபாயா? வீட்லேர்ந்து ரெண்டு கிலோமீட்டர் கூட இல்லியே''
""என்னா செய்றதுசார். மாசத்துக்கு நாலு தடவ பெட்ரோல் வெலைய ஏத்துறாங்க. கட்டுப்படி ஆகுமா? வண்டி வாடகை குடுக்கறதா...நான் வயித்தக் கழுவுறதா?''
""அதுக்கு நாங்கதான் கெடச்சோமா? இருந்தாலும் இது அதிகம்பா. பையனுக்கு அடிபட்டிருக்கு. அவசரமா கூட்டிட்டு வந்திருக்கோம். எவ்வளவு கேட்டாலும் எப்படியும் கொடுத்திடுவாங்கன்னு நெனைச்சிட்ட போல...'' என்றான் ராகவன். மேலும் ஏதோ பேச நினைத்தபோது,""என்னங்க...என்னங்க'' என்றபடி வேகமாக வந்தாள் ஆனந்தி.
""ஏன்...என்னாச்சி?''
""முரளிக்கு நிறைய ரத்தம் போயிருச்சாம். உடனே ரத்தம் கொடுக்கலேன்னா பொழைக்கிறதே கஷ்டமாம். இவங்ககிட்ட இப்போ ரத்தம் ஸ்டாக் இல்லையாம்'' என்றவள் மேலும் பேச முடியாமல் கிட்டத்தட்ட அழுதேவிட்டாள்.
""இவங்ககிட்டே இல்லேன்னா என்ன, இவங்களுக்குத் தெரிஞ்ச எத்தனையோ ப்ளட் பேங்க் இருக்குமே. அங்க கேக்கலாமே''
""அங்கேயும் போன் பண்ணி விசாரிச்சிட்டாங்களாம். இப்போ ஏபி நெகட்டிவ் அங்கேயும் இல்லயாம்...'' குரல் இறங்கி வார்த்தைகள் வலிமையிழந்தன.
ஆட்டோக்காரனோடு பேசிக்கொண்டிருந்தோம். அவனுக்குப் பணம் கொடுக்க வந்தோம் என்பதையே மறந்து அவசரமாக உள்ளே ஓடினான் ராகவன்; கூடவே ஆனந்தியும்.
""டாக்டர் எப்படியாவது ரத்தம் வாங்க முடியுமான்னு பாருங்க. எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்'' என்றான் அழாத குறையாக
""மிஸ்டர் ராகவன். இங்க வர்ற ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம்தான். சில ஆஸ்பிட்டல் மாதிரி பணம் பிடுங்குற இடம் கிடையாது இது. அன்னை தெரசாங்கிற பெயருக்கேத்த மாதிரி சேவை மனப்பான்மையோடு இயங்குகிற மருத்துவமனை. தயவு செய்து பயப்படாதீங்க. கேட்ட இடத்துல இல்லேன்னாலும் இன்னமும் நாங்க முயற்சி பண்ணிட்டிருக்கோம். உங்களுக்குத் தெரிஞ்சவங்கள்ல இந்த குரூப் ரத்தம் இருக்கிறவங்க யாராவது இருக்காங்களான்னு யோசனை பண்ணி சொல்லுங்க'' என்றார் டாக்டர்.
""சார் உங்க பையனுக்கு எந்த குரூப் ரத்தம் தேவைப்படுதுன்னு சொன்னீங்க?'' குரல் கேட்டுத் திரும்பினான் ராகவன்.
சற்று பின்னால் அந்த ஆட்டோக்காரன் நின்றிருந்தான்.
""ஏபி நெகட்டிவ். ஏன் கேக்கற?''
""சார் என்னோட குரூப்பும் அதுதான். நான் ரத்தம் தரேன். டயம் வேஸ்ட் பண்ணாம உடனே வாங்க...''என்றான் அவன்.
இருவர் முகத்திலும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.
அவனை அழைத்துச் சென்று ரத்தம் சோதிக்கப்பட்டது. சோதனையில் அவனுடைய ரத்தம் பையனுக்கு பொருந்தும் என்றாகியது. உடன், அந்த ஆட்டோ ஓட்டுனரிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு குழந்தை முரளிக்கு செலுத்தப்பட்டது.
""இனி கவலையில்லை மிஸ்டர் ராகவன். உரிய நேரத்தில் ரத்தம் கொடுக்கப்பட்டதால் பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் பையன் நினைவு திரும்புவான்'' என்றார் டாக்டர்.
போன உயிர் மீண்டது போலிருந்தது ராகவனுக்கு. கை குவித்து நன்றி சொன்னான்.
""பரவாயில்லை மிஸ்டர் ராகவன். நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம். சரியான நேரத்தில் வந்தது மட்டுமின்றி, ரத்தமும் கொடுத்து உதவினாரே அந்த ஆட்டோ டிரைவருக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்''
""ஆமாம் சார்...நிச்சயம்''
வரவேற்பு ஹாலில் உட்கார்ந்திருந்தார் டிரைவர்.
பார்த்ததும் கைகுவித்து நன்றி சொன்னான். அதே சமயம் அவனை நேருக்கு நேர் பார்க்கவும் கூச்சப்பட்டான்.
சற்று நேரத்திற்கு முன் ஐம்பது ரூபாய் கேட்கிறானே என்று பேரம் பேசினோமே இவனிடம். இப்போது இவன்தானே பிள்ளையைக் காப்பாற்றியிருக்கிறான். செல்லவிருந்த உயிரை மீட்டுக் கொடுத்திருக்கிறான். தக்க சமயத்தில் ஆட்டோவில் கொண்டுவந்து சேர்த்தது மட்டுமின்றி, தான் ஐம்பது ரூபாய்க்காக பேரம் பேசியதையும் பொருட்படுத்தாது ரத்தமும் கொடுத்து உதவி செய்திருக்கிறான். சிறிது நேரத்தில் எப்படி உயர்ந்துவிட்டான்!
ராகவன் கண்களில் ஈரம் கட்டியது.
டிரைவரின் கைகளை வாஞ்சையோடு பிடித்தான்.
""ஆட்டோவுக்கான கட்டணம்கூட நாங்க இன்னமும் கொடுக்கல. அதுவுமில்லாம அதுக்கு நான் பேரம் வேற பேசிட்டேன். அதை எதையும் மனசுல வச்சிக்காம இப்போ ரத்தம் கொடுத்து உதவி பண்ணியிருக்கே. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே புரியலையே'' மகிழ்ச்சியிலும் நன்றிப் பெருக்கிலும் அவனுக்கு வார்த்தைகள் தடுமாறின.
""சார்...உணர்ச்சிவசப்படாதீங்க... இது என் கடமைதான்''
""இந்தா...இதை மறுக்காம வாங்கிக்கணும். அப்பதான் எங்க மனசு சந்தோஷப்படும்'' என்று இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான், ராகவன்.
""ஆமாங்க. தயவு செஞ்சு வாங்கிக்குங்க. கூப்பிட்டதும் ஓடிவந்து உதவி பண்ணி...ரத்தம் கொடுத்து...ப்ளீஸ் வாங்கிக்குங்க'' என்றாள் ஆனந்தியும்.
""மன்னிச்சிருங்கம்மா. வாங்கிக்கிட்டா உங்க மனசு சந்தோஷப்படும். ஆனா என் மனசு வேதனைப்படுமே''
""ஏன்?''
""ஆமாம் சார். எங்கம்மா இப்போ உயிரோட இல்ல. கடைசி நேரத்துல ரத்தம் கொடுக்க முடியாம, கெடைக்காமப் போனதால இறந்துட்டாங்க. அப்பவே நான் முடிவு செஞ்சிட்டேன். பணம் இருக்கிறவங்களே ரத்தத்துக்கு அல்லாடுறப்ப, பாவம் ஏழை பாழைகள் என்னா செய்வாங்கன்னு. ஆறு மாசத்துக்கொரு தடவ ப்ளட் பேங்க் போய் ரத்தம் கொடுத்திட்டு வருவேன். அதுக்காக ஒரு பைசா கூட காசு வாங்க மாட்டேன். அதுமாதிரிதான் இப்ப நான் ரத்தம் கொடுத்ததும்! ரத்தத்துல குரூப் இருக்கலாம். உயிர்ல ஏதுங்க குரூப்? உங்க பிள்ளையும் சரி...எங்க அம்மாவும் சரி. எல்லாரும் எனக்கு ஒண்ணுதான் சார். நான் மனுஷங்களை நேசிக்கறவன். சேவை செய்யிற மனசு கொண்ட மனிதனா இருக்கவே ஆசைப்படுறேன்...''என்ற ஆட்டோ டிரைவர், தான் கேட்ட ஐம்பது ரூபாயை மட்டும் கேட்டு வாங்கிக்கொண்டு புறப்பட்டுச் சென்றான்.
அவன் கண்ணிலிருந்து மறையும் வரை, "சாதாரண மனிதனுக்குள் இப்படியும் ஓர் அசாதாரண மனிதனா!' என்று பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் ராகவனும் ஆனந்தியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...