திரைக்கதிர்
குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் பிரபலமாக வலம் வந்து, சிறந்த நடிகையாகவும் முத்திரை பதித்த ஷாலினி, அஜித்தைத் திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு "குட் பை' சொல்லிவிட்டு முழு நேர குடும்பத் தலைவி


குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் பிரபலமாக வலம் வந்து, சிறந்த நடிகையாகவும் முத்திரை பதித்த ஷாலினி, அஜித்தைத் திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு "குட் பை' சொல்லிவிட்டு முழு நேர குடும்பத் தலைவியாக மாறினார். ஆனால் சிறு வயதிலிருந்தே - அவருக்கு மிகுந்த ஆர்வமான - இறகுப் பந்து விளையாட்டை மட்டும் கைவிடவில்லை. வெறுமனே வீட்டில் பயிற்சி எடுத்து வந்த ஷாலினி அஜித், பிரத்யேகப் பயிற்சி எடுத்துக்கொண்டு திருச்சியில் நடைபெற்ற இறகுப் பந்து தர வரிசையை நிர்ணயிக்கும் போட்டியில் கலந்துகொண்டார். மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த மாத இறுதியில் நாகர்கோவிலில் நடைபெறவுள்ள மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
லண்டனில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்ஸன், இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொண்டு அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வருவது வழக்கம். விக்ரம் நடிக்கும் "ஐ' படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எமி ஜாக்ஸனிடம் ""இது வழக்கத்தை விட மாறுபட்ட படம்; குறிப்பாக நாயகன், நாயகி சம்பந்தப்பட்ட குளோஸ் அப் காட்சிகளின் "கன்ட்டினியுட்டி' முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் படம் முடியும் வரை பார்ட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது'' என உத்தரவிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் ஷங்கர்.
இளைய தலைமுறையினரிடம் பெருகி வரும் டேட்டிங் கலாசாரத்தின் விபரீதங்களை "இது சாருவோட டேட்டிங்' என்ற பெயரில் இயக்குகிறார் புதியவர் எஸ்.நாகராஜன். கேரளத்தின் பிரபல மாடல் கிரிஷ், வங்காளத்தைச் சேர்ந்த ஸ்வப்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். "டேட்டிங்' தமிழ்ப் பெயர் இல்லையே, வரி விலக்கு கிடைக்குமா' என்று கேட்டபோது... ""டேட்டிங் என்பது நமது கலாசாரத்திலேயே இல்லை. எனவே நம் மொழியில் அதற்கு ஈடான வார்த்தையும் இல்லை. எனவே அப்படியே பயன்படுத்துகிறோம். டேட்டிங்கில் உள்ள ஆபத்தை இளைஞர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களும் உணரும் வகையில் இருபத்து நான்கு மணி நேரத்தில் நடைபெறும் சம்பவங்களின் பின்னணியில் சொல்லியிருக்கிறோம்'' என்றார் இயக்குநர்.
தெலுங்கில் ரவிதேஜா, டாப்ஸி நடித்து பெரும் வெற்றியடைந்த "தருவு' படம், "புல்லட் ராஜா' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. சித்திரகுப்தனின் தவறால் உயிரிழக்கும் நாயகன், எமலோகத்துக்குச் சென்று நீதி கேட்டு போராடுவதே கதை. இதை காமெடி, க்ளாமர் கலந்துகொடுத்திருக்கிறார்கள். படத்தில் எமதர்மனாக பிரபு நடித்துள்ளார். சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆந்திர மசாலா விரும்பிகளே அசந்துபோகும் அளவுக்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
"பட்டாளம்', "எங்கேயும் எப்போதும்' படங்களில் சிறு வேடங்களில் நடித்த தீப்தி நம்பியார் "துள்ளி விளையாடு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான வின்சென்ட் செல்வா இயக்கும் இந்தப் படத்தில் காமெடியில் கலக்கியிருக்கிறாராம் தீப்தி. எம்.பி.ஏ. முடித்துவிட்டு புணேயில் பணிபுரியும் தீப்தி இந்தப் படம் "ஹிட்' ஆனால் சென்னையில் குடியேறத் திட்டமிட்டிருக்கிறார். விஜய்யுடன் "துப்பாக்கி' படத்திலும் நடித்துள்ள தீப்திக்கு தனது அடுத்த படத்தில் பெரிய வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
கறுப்பு வெள்ளை, வண்ணப் படம், 3 டி (சிவாஜி), மோஷன் கேப்சர் அனிமேஷன் பிக்சர் (கோச்சடையான்) என நான்கு விதமான தொழில்நுட்ப மாற்றங்களில் உருவான படங்களில் நடித்துள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரஜினிகாந்த்.
பாண்டிராஜ் இயக்கும் "கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடிக்க "கும்கி' நாயகி லட்சுமி மேனனை பல முறை அழைத்துள்ளனர். "யோசித்து சொல்கிறேன்; பிறகு பார்க்கலாம்' என தட்டிக்கழித்துக்கொண்டே இருந்திருக்கிறார் லட்சுமி. இதைக் கேள்விப்பட்ட பிந்துமாதவி, ஈகோ பார்க்காமல் தானாகவே வலிய சென்று பாண்டிராஜிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அவருடைய பணிவுக்கு பலனாக கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.
பவர் ஸ்டார் சீனிவாசனைத் தொடர்ந்து, மதுரையிலிருந்து பி.சரவணன் என்ற டாக்டர் "அகிலன்' படத்தின் மூலம் நடிகராகக் களமிறங்குகிறார். சுப்பிரமணியசிவா, எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஹென்றி ஜோசப் படத்தை இயக்குகிறார். சிறு பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நமீதா, சோனியா அகர்வால், லிங்குசாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் "அகிலன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ""டாக்டர் பி.சரவணன் ஏராளமான தொண்டு நிறுவனங்களுக்கு உதவி வருகிறார். அதோடு மாதத்துக்கு இரண்டு ஏழைக் குடும்பத்தினருக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து வருகிறார். அவருடைய சேவையை கெüரவப்படுத்தும் விதமாக அவருடைய பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்'' என்றனர் பிரபலங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...