நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திரைக்கதிர்: புகையால் வந்த பகை!

சக்தி' தெலுங்கு படத்தில் நடித்த இலியானா, ""அப்படத்தில் சொன்னது போல் கதை எடுக்கவில்லை. ஹீரோவுக்காக பல காட்சிகள் மாற்றப்பட்டு விட்டன'' என இயக்குநரை தாக்கி பேட்டி அளித்ததுடன், பட புரோமோஷனுக்கு அழைத்த போத

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:28 pm

ஜி. அசோக்

க்தி' தெலுங்கு படத்தில் நடித்த இலியானா, ""அப்படத்தில் சொன்னது போல் கதை எடுக்கவில்லை. ஹீரோவுக்காக பல காட்சிகள் மாற்றப்பட்டு விட்டன'' என இயக்குநரை தாக்கி பேட்டி அளித்ததுடன், பட புரோமோஷனுக்கு அழைத்த போதும் செல்லவில்லை. இது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இயக்குநர், ஹீரோ, ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் இலியானாவின் செயலால் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப் போவதாக இயக்குநர் கூறியிருந்தார். இந்நிலையில் இவர்களுக்கு இடையேயான மோதல் முற்றி வருகிறது. இனிமேல் இலியானாவுடன் நடிப்பதில்லை என ஜூனியர் என்.டி.ஆர். முடிவு செய்திருக்கிறாராம். ஜூனியரின் இந்த முடிவால் திரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட ஹீரோயின்கள் மகிழ்ச்சியில் உள்ளார்களாம். ஜூனியர் - இலியானா இடையிலான இந்த மோதல், ஷூட்டிங்கின் போதே யூனிட்டாருக்கு தெரிய வந்ததாம். தன் எதிரில் யாரும் சிகரெட் புகைக்கக் கூடாது என யூனிட்டாருக்கு சொல்லி இருந்தாராம் இலியானா. அவரை வெறுப்பேற்றுவதற்காகவே ஜூனியர் என்.டி.ஆர். சிகரெட் புகைத்தாராம். அப்போதிலிருந்தே இலியானாவுக்கும், ஜூனியருக்கும் மோதல் இருந்ததாகச் சொல்லுகிறார்கள்.

 செல்போன்... கேமரா... கம்ப்யூட்டர்!

 ""அந்தக் காலத்தில் நாகராஜராவ் என்றொரு புகைப்படக் கலைஞர் இருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர்களெல்லாம் அவரிடம்தான் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். பிறகு எம்.ஆர். பிரதர்ஸ் என்று பல இடங்களில் கலர் பட ஸ்டுடியோக்கள் வைத்திருந்த முருகப்பன் பெரிய பெயரோடும், புகழோடும் விளங்கினார். இன்றைக்கு இருக்கும் கலர் போட்டோவுக்கு அவர்தான் அடித்தளம் போட்டார். கலர் போட்டோ இயந்திரங்களை முதன் முதலில் தமிழ்நாட்டுக்கு எடுத்து வந்தவர் அவர்தான். பின்னர் நான் ஸ்டுடியோக்களில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது பத்திரிகை புகைப்படக் கலைஞரான "ஸ்டில்ஸ்' ரவி, நடிகர்களைச் செட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று புகைப்படம் எடுப்பார். அவரிடம் படங்களை வாங்க பத்திரிகை நிருபர்கள் போட்டி போடுவார்கள். அதுபோல சாரதி என்றொரு புகைப்படக் கலைஞர் இருந்தார். வித்தியாசமான கோணங்களில் படங்களை எடுப்பதில் வல்லவர். அவரின் கோணத்தை பார்க்கும்போது, இந்தப் படம் எப்படியிருக்குமோ என்று தோன்றும். படத்தை பார்த்த பின்னர் ஆச்சரியம் அளிப்பார். அது போல்தான் இன்றைக்கு புகைப்பட கலைஞராக இருந்து இயக்குநராக மாறியுள்ள கே.வி.ஆனந்த் வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார். இவர்களைப் போல் நீங்களும் மாற வேண்டும். உணவு, உடை, உறைவிடம் போன்று, இன்றைக்கு செல்போன், கேமரா, கம்யூட்டர் ஆகிவிட்டது. இவற்றில் நிச்சயம் நீங்கள் முத்திரை பதிக்க வேண்டும்.''

 - சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படக் கலை கற்றுக் கொள்ளும் மாணவர்களிடம் இப்படி பேசினார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

 ஒளிப்பதிவிலிருந்து நடிப்புக்கு!

 "நான் மகான் அல்ல' படத்துக்குப் பின் ஏவி.எம். நிறுவனத்தின் 175- வது படமாக உருவாகி வரும் "முதல் இடம்' படத்தில் நடிக்கிறார் மகேந்திரன். ""சின்ன வயதில் இருந்தே சினிமாதான் ஆசை. அந்தப் பாதிப்பில்தான் சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் சினிமாட்டோகிராஃபியில் சேர்ந்து படித்தேன். பின்னர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் உதவியாளராகப் பணியாற்றினேன். "தீபாவளி', "காதலில் விழுந்தேன்', "பழனி' உள்ளிட்ட படங்களில் பணியாற்றினேன். பின்னர் ஒளிப்பதிவாளர் மதியிடம் சில படங்கள். அப்போதே சின்ன சின்ன வேடங்களில் சில படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது உதவி இயக்குநராக இருந்த சுசீந்திரனின் அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகம் அவர் இயக்கிய "நான் மகான் அல்ல' படத்தில் நடிக்க வைத்தது. அந்தப் படத்துக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன. அதைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் இருப்பினும், ஸ்கோர் செய்யும் அளவுக்கு கேரக்டர்கள் அமையவில்லை இப்போது அது ஏவி.எம். நிறுவன படத்தின் மூலம் அமைந்திருக்கிறது. இயக்குநர் குமரன்தான் இந்த வாய்ப்பை வழங்கினார். இதிலும் அனைவரும் பாராட்டும் படியான நடிப்பை நிச்சயம் வழங்குவேன். இதைத் தொடர்ந்து "எப்படி மனசுக்குள் வந்தாய்',"தம்பிமார்', "விருமாயி' ஆகிய படங்களில் நடிக்கிறேன்'' என்றார் மகேந்திரன்.

 அமலா பாலின் ஐடியாக்கள்!

 தமிழ் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் இருந்தும், தொடக்க வாய்ப்புகளைப் போராடித்தான் பெற்றாராம் அமலாபால். "விகடகவி'தான் முதல் படம். சில பிரச்னைகளால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட, முந்திக் கொண்ட "மைனா' பெரும் வரவேற்பைப் பெற்றதால் அமலாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. இடையில் வந்த "சிந்து சமவெளி' சர்ச்சையை கிளப்ப, ""வசனங்கள் புரியாமல் தமிழ் தெரியாமல் இருந்த நேரத்தில் அந்தப் படத்தில் இயக்குநர் சாமி என்னை நடிக்க வைத்து விட்டார். அந்தப் படத்தை மறக்க நினைக்கிறேன்'' என பரபரப்பு பேட்டிகளைக் கொடுத்து இயக்குநர் தரப்புக்கு கோபமூட்டினார். "மைனா'வின் வெற்றிக்குப் பின் முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்களின் அபிமானத்தைப் பிடித்த அவருக்கு தற்போது கையில் இருப்பது "விக்ரமின் தெய்வத்திருமகள்'. முரளி மகன் அதர்வாவின் ஜோடியாக "முப்பொழுதும் உன் கற்பனையே'. அழகு, நடிப்பு ஆகியவை அவரை முன்னணி இடத்தில் நிறுத்தினாலும், படப்பிடிப்பு தளத்தில், சினிமாவில் தனக்கு எல்லாம் தெரிந்தது மாதிரி காட்டிக் கொள்வதுதான் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம். ஷூட்டிங்கின் போது கேமராவின் கோணம் அப்படியிருந்தால் நன்றாக இருக்கும். இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என ஐடியாக்கள் எல்லாம் தருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறாராம். சமீபத்தில் இப்படி ஒரு யோசனையை அவர் சொல்ல அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என யூனிட் கூறி அவரை அமைதியாக்கி இருக்கிறதாம்.

 காஜலின் "ட்விட்டர்' அறிக்கை!

 பாலிவுட்டில் என்னைப் புதுமுகம் என்பதை ஏற்க முடியாது என்கிறார் காஜல் அகர்வால். ""தமிழ், தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துவிட்டேன். கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற "சிங்கம்' ஹிந்தியில் தயாராகிறது. அஜய் தேவ்கானுடன் ஜோடியாக நடிக்கிறேன். ஆனால் என்னை பாலிவுட்டில் புதுமுகம் என்கிறார்கள். இந்திய சினிமாவில் பெரும் வசூலை வாரி குவித்த "மகாதீரா' படத்தில் நடித்த போது எல்லோருக்கும் என்னை தெரிந்து விட்டது. நடிகையாக வேண்டும், அதையே என்னுடைய முழுப் பணியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றுதான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். அதை நிறைவுடன் செய்து வருகிறேன். திரையுலகில் எனக்கு இவ்வளவு அனுபவம் இருந்தும் என்னை தொழில் ரீதியாக புதுமுக நடிகை என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. எவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டுமோ அவ்வளவு கடு மையாக உழைக்கிறேன். அதை படம் பார்க்கும் போது எல்லோருமே சொல்வார்கள். வெறும் கிளாமர் நடிகை அல்ல நான். எல்லா கேரக்டர்களையும் ஏற்க காத்திருக்கும் நடிகை நான்'' என தன் டிவிட்டர் பகுதியில் தெரிவித்திருக்கிறார் காஜல் அகர்வால்.

 சுவேதா மேனனின் தமிழ் விஜயம்!

 மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "கயம்', தமிழில் "தாரம்' என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. கதாநாயகனாக அன்பு நடித்துள்ளார். கதாநாயகியாக சுவேதா மேனன் நடித்துள்ளார். தமிழில் படத்தை தயாரித்து, வசனம் எழுதியுள்ள பாலாவிடம் பேசிய போது, ""மலையாளத்தில் இந்த மாதிரியான படங்கள் அதிகமாகவே வரும். தமிழில் குறைவுதான். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான இப்படம் 100 நாள்களைக் கடந்து விட்டது. படத்தின் கதை கருவும், காட்சி அமைப்புகளும் பிடித்து போயிருந்ததால் இப்படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை வாங்கினேன். ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த சுவேதா மேனன் இப்போதுதான் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். ஏற்கனவே தமிழில் "நான் அவன் இல்லை -2' படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரை சந்தித்துப் பேசினேன். ""கயம்' படம் தமிழில் டப்பிங் ஆவதில் மகிழ்ச்சி. இந்த மாதிரியான படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து தமிழில் நடிக்க ஆசை. ஆனால் கதைகள் அமையவில்லை. இந்த வருடத்தில் நிச்சயம் தமிழில் நடிப்பேன்'' என தெரிவித்தார். டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்தப் படம் ஒரு நேரடிப் படம் போலவே இருக்கும். வசனங்கள் மிகவும் தெள்ளத் தெளிவாக கதையை ஒட்டி எழுதப்பட்டுள்ளது'' என்றார் பாலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.