சேகரிப்பு: வசிப்பிடமே வாசிப்பிடம்!
சொந்த வீட்டுக்காரர்கள்தான் தங்கள் உபயோகத்துக்கு என நூலகம் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், விருதுநகரில் ஒருவர் தன் சிறிய வாடகை வீட்டில் வசித்தவாறே ஆயிரக்கணக்கான பழைய புத்தகங்களைச் சேகரித்து தன


சொந்த வீட்டுக்காரர்கள்தான் தங்கள் உபயோகத்துக்கு என நூலகம் வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், விருதுநகரில் ஒருவர் தன் சிறிய வாடகை வீட்டில் வசித்தவாறே ஆயிரக்கணக்கான பழைய புத்தகங்களைச் சேகரித்து தன் வசிப்பு இடத்தையே நூலகமாக மாற்றியுள்ளார். இப்பகுதியில் யார் வந்து இவரை அடையாளம் கேட்டாலும், பழைய புத்தகம் சேகரிக்கிறவர் என்பதை எளிதாக அடையாளம் காட்டுகிறார்கள்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் தான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். அவரிடம் பேசினோம்.
""நான் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் புத்தக வாசிப்புப் பிரியர்கள். அதனால் புத்தகங்களைச் சேகரிக்கும் ஆர்வம் இயல்பாகவே எனக்கு ஏற்பட்டு விட்டது. என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு என் வீட்டுக்கு வருகின்றவர்கள்,"வீடு முழுவதும் பழைய புத்தகங்களின் நெடி அடிக்கிறது. ஆனால், அதையும் மீறி ஒவ்வொரு புத்தகத்தையும் பார்க்கும்போது விழிகள் வியப்பால் விரிகின்றன'' என்கின்றனர். அப்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.
நான் முதன்முதலில் வெளிவந்த பத்திரிகைகள், புத்தகங்கள் மட்டுமல்லாது, பழமையான பொருள்களையும் சேகரித்துள்ளேன். 1919-ம் ஆண்டில் வெளியான பல நாளிதழ்களின் முதல் பிரதிகளைச் சேகரித்துப் பாதுகாத்து வருகிறேன். மேலும், அதே ஆண்டில் வெளியான ஆனந்த போதினி உள்பட பல மாத, வார பத்திரிகைகளின் முதல் பிரதிகளைப் பாதுகாத்து வருகிறேன். அதேபோல் பல்வேறு நாளிதழ்களில் வந்த சரித்திரத் தொடர்களைச் சேகரித்துள்ளேன்.
மேலும், ஓரிரு வாரங்களே வெளிவந்து கடைசியில் காணாமல்போன பத்திரிகைகளின் பிரதிகளும் பதிப்பகத்தாரிடம் இருக்கிறதோ, இல்லையோ நான் சேகரித்து வைத்து இருக்கிறேன். இவற்றைத் தவிர, மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புகள், ரஷிய நாவல் ஆசிரியர்களின் படைப்புகளையும் சேகரித்து வைத்துள்ளேன். 1940-ம் ஆண்டு முதல் 1965 வரை வெளியான திரைப்படங்களின் தகவல் தொகுப்புகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய பாட்டுப் புத்தகங்கள், பழங்காலப் புத்தகங்கள், பிரபல நாவல்கள், பண்டைய காலத்து பஞ்சாங்கம், ஜாதகங்கள், பழைய காலத்து பத்திரங்கள் என என் சேகரிப்பு விரிவடைந்து கொண்டே போகிறது. 1947-ம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமபோன் ரிக்கார்டுகளையும் பாதுகாத்து வருகிறேன்.
என்னுடைய ஒவ்வொரு சேகரிப்பிலும் ஓர் அரிய விஷயம் இருப்பதாக அறிகிறேன். மேலும், முதல் பத்திரிகை என்பது ஒரு பிரசவம் போன்றது. அதனால்தான் இந்த தலைப்பிள்ளை நாளிதழ்களைச் சேகரித்து பாதுகாப்பது எனக்கு திருப்தியளிக்கிறது. மேலும் சீமந்தம், பெயர் சூட்டல், மொட்டை போடுதல், பூப்புனித நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், வெளிநாட்டு மணவோலை, புதுமனை புகுவிழா, ஓய்வுபெறும் விழா, குடமுழுக்கு விழா வரை விதவிதமான வகைகளில் அழைப்பிதழ்களையும் சேகரித்து வைத்திருக்கிறேன்.
தற்போது என்னிடம் 1919-ம் ஆண்டு முதல் 1929-ம் ஆண்டு வரையில் வெளிவந்த புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இந்தப் புதுமையான சேகரிப்பு யாருக்காவது உதவ வேண்டும் என விரும்புகிறேன். அதற்காகவே அருகில் உள்ள கல்லூரிகளில் இருந்துவரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு என்னுடைய அத்தனை சேகரிப்புகளையும் கொடுத்து உதவுகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...